சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Urdu   Cyrillic/Russian   Marati  
சேக்கிழார்  
ஏயர்கோன் கலிக்காம நாயனார்  

12 -ஆம் திருமுறை   12.290  
வம்பறா வரிவண்டுச் சருக்கம்
 
நீடிய கொடையின் சிறப்பால் புகழ்கொண்ட சோழ அரசர்களது, நீர்வளம் குன்றாத நாட்டில் நிலவுகின்ற தனது கரையின் இருமருங்கும் பொன் கொழித்திடும் காவிரி ஆற்றின் வடகரையின் கிழக்குப் பக்கத்தே, பூங்கொடிகள் ஆடப், பொருந்திய மாடங்கள் நீண்டவரிசையாக இருப்ப, அதனால் அழகு பொருந்திய நகர் ஒன்று ளது. அந்நகர் பெருமை தங்கிய திருப்பெருமங்கலம் என்னும் பெயருடையது. *** தான், ஆல் என்பன அசை.
அந்நகரின் உட்புற மதில்களில், பகைவரைத் தாக்குவதற்கு என நாட்டப் பெற்ற எந்திரங்கள் நிரல்படச் சூழ்ந்து இருக்கும். மேகங்கள் வந்து படிந்து சூழ்ந்த வண்ணம் இருப்பன மலை என உயர்ந்த அழகிய மாடங்கள். நஞ்சின் தன்மையை உடைய அழகிய கண்களை உடைய இளம் பெண்களின் தாமரை மலர்போன்ற அடிகளில் ஊட்டிய செம்பஞ்சின் குழம்பு, தம்மைக் காதலால் அணைத்திட வேண்டிநிற்கும் காதலர்களின் முடியில் சூழ்ந்திருக்கும். *** இஞ்சி - மதில். ஞாயில் - மதில் உறுப்பு. 'பிணியின்மை, செல்வம், விளைவு இன்பம், ஏமம், அணி என்ப நாட்டிற்கு இவ்வைந்து' (குறள், 738) என்பர் திருவள்ளுவர். 'இஞ்சி சூழ்வன எந்திரம்' என்பதால் ஏமமும், 'மஞ்சு சூழ்வன மாடம்' என்பதால் செல்வமும் விளைவும், 'நயனியர் அடிப்பஞ்சு காளையர் குஞ்சி சூழ்வன' என்பதால் பிணியின்மையும் இன்பமும் குறித்துக் காட்டியிருக்கும் அழகு காணத்தக்கது.
விளங்கும் அழகிய நெடிய வீதிகள் எங்கும், விழாக் கோலங்கள் நீங்காதன. வண்டினம் மொய்க்கும் 'கூந்தலையுடைய பெண்கள் நடமாடும் அரங்குகள் எங்கும், முழவின் ஓசைகள் நீங்காதன. மங்கலம் பொலியும் அழகிய முற்றங்கள் எங்கும், மழலைச் சொல் ஓவாத குழந்தைகள் நீங்காதன. பெருமை பொருந்திய பெருங் குடிகளிடத்து உழவின் வளமான உணவின் செல்வம் என்றும் அறாது நிரம்ப உள்ளன. *** வீதிகளில் விழவும், அரங்குகளில் முழவும், முன்றில் களில் மழவும் அடுத்தடுத்து இருத்தற்குக் குடிகளிடத்து உழுவறாத நல்வளங்கள் இருத்தலே காரணம் என்பது உய்த்துணர நின்றது. 'உழுவார் உலகத்தார்க்கு ஆணி' (குறள், 1032) என்றலும் காண்க.
அந்நகரம், கங்கை பொலியும் சடைமுடியையும், நெற்றிக் கண்ணையும், மேகம் போலக் கருமையின் அழகு பொலியும் கரிய கழுத்தையும் உடைய, தேவர்களின் தலைவனான சிவபெரு மானின் அன்பர்கள் கூடி, உலகில் சிறந்ததாய பெருமையால், பரம் பொருளாய ஈசன் திருவடிகளை வணங்கி வரும் சிறப்பின் மிக்கது. அதனால் அது சிவபுரி எனத்தகும் சிறப்பினது. *** நீர் - ஈண்டுக் கங்கையைக் குறித்தது. பரமர் தாள் பரவி வருவதே பாரின் மிக்க சிறப்பாகும். அச்சிறப்புடைமையான் அது சிவபுரி எனத்தகும்.
இத்தகைய பெருவாழ்வுடைய அத்திருப்பெரு மங்கலமாய பதியிடத்து இருக்கும் ஏயர்கோக்குடி என்பது, வழிவழி யாகச் சிறந்து வரும் சோழ அரசர்களிடத்துத் தானைத் தலைமை பூண்டு நிற்கும் வரலாறு பெற்றதாய் என்றும் நிறைந்து இருப்பது. இந்த ஏயர் கோக்குடி என்னும் இனம், தூயதான சோழநாட்டு வேளாண்குலத்தில் மிக்குவிளங்கும் பொற்புடையதாகும். *** ஹேஹயர் என்பது கேகயர் எனக் குறிக்கப்பெற்று அதுவே ஈண்டு ஏயர் என மருவிற்று என்று கூறுப.
அத் திருப்பெருமங்கலப் பதியில் மிக்க பெரும் புகழுக்குரிய ஏயர்கோக்குடியில் வந்து தோன்றியவர் கங்கை வாழும் சடையையுடைய பெருமானின் தொண்டராய கலிக்காமர் என்பார். இவர், தங்கள் தலைவரான சிவபெருமானின் திருவடிகளைப் பெரும் பேறாகக் கொண்டு வாழும் அடியார்களுக்குச் செயத்தக்க பணிகளைச் செய்து வந்தார்.
குறிப்புரை:

அவர், நாளும் புதியதாய்த் தோன்றும் ஒற்றைக் கலையுடைய பிறையினைச் சூடும் சடை முடியையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்புன்கூருக்குத் திருப்பணிகள் பலவும் செய்து, அடியவர்களுக்கு உற்ற செல்வமாவன திருநீற்றை உகந்து அணியும் பெருமானின் திருவடிகளே என நாளும் போற்றித் தொழுது, அவ்வழிபாட்டால் வரும் இன்பத்தில் திளைத்து வாழ்பவராய இவர், *** பெருமானின் திருச்சடையில் இருக்கும் பொலிவாலும் அழகாலும் நாளும் புதிதாய்த் தோன்றுதலின் 'புதிய நாள் மதி' என் றார். மழையின்மையால் நாடு வருந்த மழை வேண்டி, இறைவற்குப் பன்னிருவேலி நிலம் தந்தும், அதனால் மிகு மழை பொழிய, அதனை நிறுத்த வேண்டி மீண்டும் இறைவற்குப் பன்னிருவேலி நிலம் தந்தும் அப்பகுதியை வாழ்வித்த அருமையால் 'அதிகமாயின திருப்பணி அனேகமும் செய்து' என்றார்.
'வையகம் முற்றும் மாமழை மறந்து
வயலில் நீரிலை மாநிலம் தருகோம்
உய்யக் கொள்கமற் றெங்களை யென்ன
ஒளிகொள் வெண் முகிலாய்ப் பரந் தெங்கும்
பெய்யு மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப்
பெயர்த்தும் பன்னிருவேலி கொண்டருளும்
செய்கை'
(தி. 7 ப. 55 பா. 2)எனச் சுந்தரர் அருளுவதுங் காண்க.

திருநாவலூர்த் தலைவராகிய நம்பியாரூரர், பெருமானைப் பரவையாரிடத்துத் தூதராக அனுப்பியதற்கு, யாவர் இச்செயல் புரிவார்? என இகழ்ந்துரைப்ப, தேவர்கட்கும் தலைவரான பெருமான் கலிக்காமருடைய தன்மையைத் திருத்தி, தாம் அடியார்க்கு எளியன் என்பதை உணர வைத்த அவ்வருஞ்செயலின் வரலாற் றினை, இனி அடியேன் எடுத்துச் சொல்லல் உற்றேன். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
திருநாவலூரை ஆட்சி கொள்ளும் அருளாளராய சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூரில் தங்கியிருந்து திருத்தொண்டத் தொகையை அருளிய பின்னர், ஒருமைப்பாடுற்ற பெருவிருப்பால், அழகிய மதில் சூழ்ந்த திருவாரூரில் வாழும் ஒப்பற்ற பெருமானின் திருவடிகளை முப்போதும் சென்று உருகிய அன்பொடும் பணிந்து, உள்ளத்து எழுகின்ற மெய்யன்பினால் திருவாரூரை விட்டுப் பிரியாது அங்கு வாழும் நாள்களில்,
குறிப்புரை:

முயற்சிக்கேற்ற முழுப்பயனை நல்கும் உழவுத் தொழிலின் இயல்பால், வளம் தலைக்கொண்ட வேளாண் குடியின ராய குண்டையூர்க் கிழார் என்னும் பெயருடைய பெரியவர், ஒளி நிறைந்து விளங்கும் வெண்மதியைச் சூடிய பெருமான் இவ்வுலகில் அந்தணராய் வடிவு கொண்டு வந்தருளி, வழக்கினில் வென்று ஆண் டருளப் பெற்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவடிகளையே பற்றாகக் கொண்டு, அன்பினால் அவருக்குத் தொண்டுகள் செய்து வருவாராய்,
குறிப்புரை:

செந்நெல்லும், பொன் போன்ற செழுமையான பருப்பும், தித்திப்பாய கரும்பின் நல்ல அமுதும், முதலாக எண்ணற்ற பலவகையான வளங்கள் யாவற்றையும் நிலைபெற்ற சிறப்பினையுடைய சுந்தரமூர்த்தி சுவாமிகட்குத் திருவமுதாக அமைத்திட, இடையீடின்றிப் பன்னெடு நாள்கள், தமது இடத்திலிருந்து பரவையார் மாளிகைக்குப் படித்தரமாகத் தந்து வந்தார். *** படித்தரம் - நாளும் அளித்து வரும் அறக்கட்டளை. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
இவ்வாறாக அன்பினால் வரும் ஆர்வத்தால் மகிழ்ந்து, அவருக்குச் செய்துவரும் காலத்து, ஒருசமயம் மழை பொழியாது ஒழிய, நிலத்தின் வளம் சுருங்கிடலால், திருவமுதிற்கு வேண்டிய நெல் அனுப்புதற்கு இயலாமையால், மானம் அழிந்த கொள்கையால், மனம் மயங்கிக் குண்டையூர்க் கிழார் வருந்துவாராகி, *** செயத்தக்கதொன்றைச் செய்ய இயலாமையின் 'மானம் அழிகொள்கை' என்றார்.
வன்றொண்டராய சுந்தரரின் திருவாரூர் மாளி கைக்கு நெல்லை எடுத்துச் சென்றிட இன்று குறை நேர்ந்ததே! என்செய்கேன்? என நினைந்து, பெருகும் கவலை மிகுதியால் துயர் அடைந்து, உணவும் அருந்துதலின்றி, அன்றிரவு துயில்கொள்ள, அது பொறாத அரிய தண்ணளியை யுடையவராய இறைவர், அவர் கனவில் தோன்றி அருள் செய்வாராய்,
'நம்பியாரூரனுக்கு அளித்தற்காக உன்பால் நெல்லினைக் கொடுத்துள்ளோம்' என்று குண்டையூர்க் கிழாருக்கு அருள் செய்து, கங்கைநீர் உலவும் சடைமுடியை உடைய சிவபெரு மான், நிதியின் தலைவனான குபேரனை ஏவுதலும் அச்செயலால், அப்பேரூராய குண்டையூரின் எல்லை அடங்கவும் நெல்லின் மலை யாகவே பொலிந்து, மேகம் தவழும் நெடிய வானமும் மறைய, எங் கும் அந்நெல்மலை ஓங்கியது. *** ஆல் - அசை. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
அன்றைய இரவு விடியும் காலத்து, உறக்கத்தி னின்றும் நீங்கி உணர்ந்து எழும் குண்டையூர்க் கிழார், எவ்வுலகின் நெல்மலைதான் இஃது! என்று வியந்து, செவ்விய பொன்மலையாம் மேருவை வில்லாக வளைத்த பெருமானின் திருவருளின் செயலைப் போற்றி செய்து, கொவ்வைப் பழம் போலும் வாயினையுடைய பரவையாரின் கணவரான சுந்தரரையே நினைந்து தொழுவாராய், ***
திருநாவலூர் அரசர்க்கு இறைவனால் தரப்பட்ட நெல்மலையை, இங்கு யாவரால் அவ்விடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்? ஆதலால், அவ்வற்புதச் செயலை நேரில் அவருக்குச் சொல்ல யான் போவன் எனத் திருவாரூருக்குச் சென்றார்; தேவர்கட்கும் தேவராய பெருமானாரும் நம்பியாரூரருக்கு அங்கு நிகழ்ந்த தன் மையை அருள, அவரும் அவ்வாணையைச் சிரமேற்கொண்டு எதிர் சென்றார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
தம் பதியை நோக்கி எதிர்வரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் குண்டையூர்க் கிழாரும் எதிர்கொண்டு, குற்றமற்ற வாய்மையை உடைய அத்தொண்டரைத் தொழுது, வீழ்ந்து எழுந்து நின்று, பெருமானே! முன்பெல்லாம் அடியேன் உமக்குச் செய்துவந்த பணிக்கு இன்று முட்டுப்பாடுற்ற நிலையில், தேவாதி தேவனாய பெருமானார் தாமே, வேண்டிய நெல் மலையைத் தந்துள்ளார் என மொழிந்து, பின்னரும்,
குறிப்புரை:

'இந்நெல்மலையின் பெருக்கம் மனிதரால் எடுத் திடும் எல்லையில் அடங்குவதன்று. அது என்னால் செய்யத்தகும் பணியும் அன்று' என்று மொழிந்திடச் சுந்தரரும் அவரை நோக்கி, 'குளிர்ந்த இளம்பிறையைச் சூடிய சிவபெருமான் உம்பால் பரிந்து இந் நெல்மலையைக் கொடுத்தார்' என இனியவாய சொற்களைக் கூறித் தாமும் அவருடன் கூடிக் குண்டையூர்ப் பதியை அணைய வந்தரு ளினார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
வானளாவ உயர்ந்து நிற்கும் நெல்மலையை நோக்கியருளி, நம்பியாரூரர் பெருமானைத் தொழுது போற்றி, வியப்புற்ற நிலையில், அளவற்ற நீர்மையை உடைய பரவையின் மாளிகைக்கு இந்நெல்மலையைஎடுத்துச் செல்ல, ஆளினைக் குளிர்ந்த பிறையணிந்த பெருமானே தந்தால் அன்றி, இது எம்மால் எடுக்க முடியாது என மொழிந்து,
குறிப்புரை:

நெல்மலையை எடுத்திட ஆள்களைத் தருமாறு வேண்டிக் கொள்வாராய், அதற்கு அருகிலுள்ள திருப்பதியான திருக்கோளிலியில் எழுந்தருளியிருக்கும் பெருமானை அடைந்து, திருமுன் நின்று வணங்கி, 'வாள்போலும் நீண்ட வரிவிழியை உடைய பரவை வருந்தாதவாறு இந்நெல் மலையை அவள் மனையில் கொண்டு சேர்க்க நல்ல ஆள்களைத் தந்தருளும்' என்னும் கருத்தமைந்த திருப் பதிகத்தை, மேன்மேலும் பெருகி வளர்கின்ற அன்பினால் தொழுது பாடுதலும், *** இக்கருத்தமைவுடைய பதிகம், 'நீள நினைந்தடியேன்' (தி. 7 ப. 20) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும். நீள நினைந்தடியேன் உனை நித்தலுங் கைதொழுவேன்வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமேகோளிலி எம்பெருமான் குண்டை யூர்ச்சில நெல்லுப் பெற்றேன்ஆளிலை எம்பெருமான் அவை அட்டித்தரப் பணியே. என இப்பதிகத்து வரும் முதற் பாடலிலும், 'நெல்லிட ஆள்கள் வேண்டி நினைந்து ஏத்திய பத்தும்' எனவரும் பத்தாவது பாடலிலும் கூறப் பெறும் பொருண்மையை முகந்தே ஆசிரியர் இவ்வரலாற்று அமைவைத் தருகின்றார். 'அவள் வாடி வருந்தாமே' என்றது பரவையார் இறைவற் கும், அடியவர்களுக்கும், நாளும் சிறப்பொடு பூசனை செய்துவரும் செயற்பாட்டிற்கன்றி வேறு காரணத்தால் அன்றாம்.
பகற்பொழுது கழிந்ததற்பின், பரவையின் மனை அளவில் அல்லது, மிகப் பெருக விளங்கிடும் இந்நெல், உலகில் விளங் கிய சிறப்புடைய திருவாரூர் நிறைய வந்து சேரும்படி கொண்டு சேர்ப் பன நம் பூதங்கள் எனப் பெருமானின் திருவருளினால், விண்வழி யாக ஒப்பற்றதொரு வாக்கு நிகழ்ந்தது. *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின
தமது பெருமானின் இத்திருவருள் நிகழ்வைக் கேட்ட திருநாவலூரர், அவ்வருளிப்பாட்டை நினைந்து, தொழுது போற்றி, நிலம்மீது விழுந்து எழுந்து, தேவராலும் உணர ஒண்ணாத திருவடிகளைத் தொழுது வணங்கி, அங்கிருந்து நீங்கிச் செம் பொன்னை ஒத்த சடைமுடியையுடைய பெருமானைப் பிற பதிகளி லும் சென்று வணங்கித் திருவாரூர் வந்து சேர்ந்தார். *** பிற பதிகளாவன திருவலிவலம், திருநெல்லிக்கா, திருக்காறாயில், திருஏமப்பேறூர் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).
இவற்றிற்குரிய திருப்பதிகங்கள் எவையும் கிடைத்தில.

திருவாரூரிலுள்ள கோயிலில் அமர்ந்தருளி யிருக்கும் முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய பெருமானை முன்சென்று வணங்கிப் பெருமகிழ்ச்சியுடன் போற்றி, வெளியே போந்து, பாங்குடைய அடியார்கள்தம் பக்கலில் சூழ்ந்து போற்றிப் புகழ்ந்து வரப் பரவையாரின் மேலோங்கிய திருவுடைய மாளிகையின் உள்ளாக வந்து சேர்ந்தருளினார். *** இதுபோது இறைவன் திருமுன்பு போற்றிய திருப்பதிகம் கிடைத்திலது.
கொவ்வைப் பழம் போலும் வாயினை உடைய பரவையார் மகிழுமாறு நிகழ்ந்த செயல்களைக் கூறி, அவருடன் கூடி மிக இன்புற்று இருக்க, ஆனேற்றின் மீது உமையம்மையாருடன் இருந்தருளும் இறைவனின் அருளால், அன்றிரவு பூதங்கள் மிக எழுந்து, ***
குண்டையூரிலிருந்த நெல்மலையைக் குறுகிய வடிவான அப்பூதப் படைகள், ஒருவருக்கும் தெரியாமே, முகந்து எடுத்து வந்து, வண்டுகள் உலாவி விளங்கிடும் கூந்தலையுடைய பரவையாரின் மாளிகை முழுவதும் சேர நிறைவித்தே, அதனுடன் அமையாது, தேவாதி தேவருடைய திருவாரூர் முழுவதும் நெல்லின் மலையேயாக்கி, கண்டவர்கள் வியக்குமாறு காட்சி பெற எங்கும் அமைத்தன. *** ஆல் - அசை. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின
அன்று இரவு விடியும் அமையத்தே, திருவாரூரில் வாழ்வார் அந்நெல் மலையைப் பார்த்து, இந்நெல் மலைகள் எவ் வுலகில் விளைந்தன? என நினைந்து, வியப்புற்று, இவைதாம் மான் போலும் சிறந்த திருநோக்கினையுடைய நங்கை பரவை நாச்சி யாருக்கு இவ்வுலகம் வாழ வருகின்ற சுந்தரர் கொடுத்தனவாகும் என்று பலபடச் சொல்வார்களாகி, ***
தம் முயற்சியால் அகற்றுதற்கு அரிய நெல் மலைகளை அவர்கள் பார்த்து, அதனால் தம்மூரில் பலவழிகளானும் வெளிப்போக அரிதாய்த் திரும்பித் தம் இல்லங்களில் செல்வார்களாய், 'நாம் செய்த புண்ணியத்தின் திருவடிவாகிய பரவை அம்மையா ருக்கும், இவ்வளவும் கொண்டு சேர்க்க அவரது மாளிகையில் இடம் அரிதாகும்' எனப் பலவாறாகப் பேசிக் கொள்வாராய், ***
வன்றொண்டர் எனப்பெறும் சுந்தரமூர்த்தி சுவாமி கள் தமக்கு வழங்கிய நெல்மலையை, மிக்க புகழுடைய பரவையார் கண்டு, மனம் களிகூர்ந்து, 'இன்று தத்தம் மனைகளின் எல்லைக்குட் பட்ட நெற்குவியலை, அவரவர்களும் தத்தம் மாளிகைகளில் சேரும் படி எடுத்துக் கொள்ளுங்கள்' என்று வெற்றி முரசினை அறையுமாறு செய்தார். *** 'நின் நயந்துறைநர்க்கும் நீ நயந்துறைநர்க்கும், பன்மாண் கற்பின் நின்கிளை முதலோர்க்கும், கடும்பின் கடும்பசி தீர யாழ நின், நெடுங்குறி எதிர்ப்பை நல்கியோர்க்கும், இன்னோர்க்கும் என்னாது என்னொடும் சூழாது, வல்லாங்கு வாழ்தும் என்னாது, எல்லோர்க்கும், கொடுமதி மனைகிழ வோயே' (புறம். 163) என மனையாளுக்குக் கூறினர் பெருஞ்சித்திரனார். இங்கு மனையாள் திருவாரூர் வாழ்வார் பலர்க்கும் வழங்குமாறு நிகழ்ந்த அருள்திறம் காண்டற்குரியது. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
அழகிய திருவாரூர் வீதிகளில் ஆள்கள் இயங் குதற்கு ஏற்ப, பறை அறைவித்த அப்பணியால், தத்தம் மனைகளிலும் நெல் நிறைவித்து, மேலும் மிக்கிருந்த நெற்குவியலை அவரவர்களும் தத்தமக்கு அருகில் உள்ள இடங்களிலும் நெற் கூடுகளிலும் குறை விலாது வைத்துத் தமக்குக் கிடைத்த பெரும்பேற்றை நினைந்து, திருவா ரூர் நகரமே களி கூர்ந்திடலும், அது கண்ட பரவையாரும், அழகிய முத்து மாலையை அணிந்தவராய மார்பினையுடைய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடிகளைப் பணிந்தார். *** பரவையார் தம் கணவரைப் பணிந்தது, இத்துணைப் பேற்றிற்கும் அவரே மூலமாய் நிற்றலைத் தாம் உணர்ந்ததனோடு நம்மனோர்க்கு உணர்த்தவுமாம். இதனால் முரசறைவித்து அவரவர்க் கும் தத்தம் எல்லைக்குட்பட்ட நெல்லை எடுத்துக் கொள்க எனக் கூறியதும், தம் கணவர் திருவுள்ளக் குறிப்புணர்ந்து செய்ததேயாம் என்பதும் உணரக் கிடக்கின்றது.
இவ்வாறாக நம்பியாரூரர் திருவாரூரில் விரும்பி வாழும் காலத்து, நாளும், செம்பொன்மயமான புற்றில் இடங்கொண்டு வீற்றிருக்கும் செழுமை மிக்க தேனாய பெருமானாரைத் தமது உள்ளத்துப் பெருகிய விருப்பினோடும் தாழ்ந்து பணிந்து, அறிதற் கரிய அம்மூர்த்தியைத் தமது உணர்வினால் பருகி, இவ்வுலகில் உள்ள மனிதர்களுடன் தேவர்களும் அவர் வணங்கிப் பெறுகின்ற பேரின்ப நிலையைக் கண்டு, வியந்து நிற்பப் போற்றி வருவாராயினர்.
குறிப்புரை:

இவ்வாறாய அருள் நிறைவுடன் இவர் இருப்பப் புகழ் விளங்கும் கோட்புலியார் என்னும் நாயனார், திருவாரூர் வந்து, தமது ஊராகிய நாட்டியத்தான்குடிக்கு எழுந்தருளி வருமாறு, குறைவிலாத புகழுடைய சுந்தரரை வேண்டி அவர் திருவடிகளைப் பணிதலும், அதற்கு அவரும் இசைய, அவரை வணங்கிப் பலரும் புகழும் பண்புடைய கோட்புலி நாயனார் அவர் வருகையை எதிர் நோக்கி மீண்டும் தம் பதிக்குச் சென்றார்.
குறிப்புரை:

தேவர்களும் வழிவிட்டு ஒதுங்கிடச் சீலமுடைய திருத்தொண்டர்கள் நெருங்கிச் சூழும் அருட் செல்வமுடைய திரு வாரூர் நகரினைக் காவல் கொண்டு தனியரசு செலுத்திவரும் பெருமானின் திருவடிகளை வணங்கி, பெருமான் எழுந்தருளி யிருக்கும் பிற பதிகளையும் சென்றடைந்து அங்குப் பெருமானைப் பணிந்து பாடும் விருப்பினுடன் செல்வாராய்,
குறிப்புரை:

திருமாலும் அயனும் உணர்வரிய சிவபெருமான் இனிதுறையும் பதிகள் பலவற்றையும் வணங்கிப் பின், இந்நிலவுலகில் சிறப்புற்றிலங்கும் கோட்புலி நாயனாரது நாட்டியத்தான்குடி என்னும் நற்பதியை நண்ணுதலும், அவர் வருகை உணர்ந்த கோட்புலியார் தமது நகரைப் பொருந்தும் வகையால் அழகுபடுத்தி, நகர் வாயிலில் வந்து நம்பியாரூரரை எதிர்கொண்டு, இனிது வணங்கித் தமது அழகு மிக்க மணி மாளிகையினிடத்து அழைத்துக் கொண்டு சென்றார். *** பிற பதிகளாவன திருவிளமர், திருஏமப்பேறூர், மாவூர் முதலியனவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).
மாளிகையை அடைந்தபின், தூய முத்துக்களால் ஆன அரியணையில் அவர் இருந்திடக் கோட்புலியார், செம்மை பொருந்திய நம்பி ஆரூரரின் மலரணைய திருவடிகளை நீரால் விளக்கி, அந்நீரைத் தம்மீதும் அழகின் ஒளிவீசும் மாளிகையிடத்தும் எங்கும் விளங்கிடத் தெளித்துத் தம் உள்ளம் களிப்புற, நன்மை பொருந்திய சிறப்பினால் போற்றியுரைகள் பலவற்றையும் இயல்பான முறையினால் புரிவாராய்,
குறிப்புரை:

அழகிய மலர்களினின்றும் எடுத்த பன்னீரால் அமைந்த நறுமணம் மிக்க சந்தனக் கலவையையும், பொருந்திய அகிலின் கட்டையைத் தேய்த்தலால் வந்த சாந்தினையும், மணம் நிறைந்த மானின் கத்தூரிக் குழம்பினையும், மணம் மிக்க நறும் புகையையும், வாசனை உடைய புனுகு, பசுங்கற்பூரம் முதலாகிய இவற்றுடன் நன்மை தரும் பாக்கு, வெற்றிலைத் திருவமுது ஆகிய இவற்றையும் எண்ணற்ற பொற்கலங்களில் எடுத்து ஏந்தி வந்து,
குறிப்புரை:

வேறு வேறு வகையாக அணிந்திடக் கொள்ளும் மலர் மாலைகளை மிகச் சிறப்பாக அமைவதாக, ஒப்பற்ற அணி வகைகளையும், ஒப்பற்ற அழகான ஆடைகளையும் முறையாக வைத்து வணங்கி, கங்கையாறு அணிந்த பெருமானின் திருவடித் தொண்டராய ஆரூரருக்கு, அளவற்ற இப்பூசைகளைக் கொள்ளுமாறு செய்து அருளினார் கோட்புலி நாயனார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
செவ்விதாக ஆட்சிபுரியும் சோழ அரசனின் அருளிற்கு உரிமையுடைய தானைத் தலைவராய கோட்புலி நாய னார், நம் தலைவரும் திருநாவலூரின் அரசருமான நம்பியாரூரரை நட்பு முறையால், தமது தலைமைப்பாடான திருவுடைய மனையில் திருவமுது செய்வித்து, வணங்கித் தலைசிறந்த பொங்கும் கடல்போல் உளம்பெருகும் காதல் கொண்டு, மேலும் போற்றுவாராய், ***
குறைவு படாத நல்ல விருப்பத்தால், தாம் முன்னர்ப் பெற்றெடுத்த தேன் சொரியும் மலர்சூடிய கூந்தலையுடைய சிங்கடியார் என்னும் மகளாரையும், அவளுக்குப் பின் பெற்றெடுத்த மான்போலும் பார்வையால் சிறந்த வனப்பகையார் என்னும் மகளாரையும் நம்பியாரூரரின் திருமுன்பு கொணர்ந்து, அவருடைய தூய அன்றலர்ந்த மலர்போலும் திருவடிகளைப் பணியச் செய்து, தாமும் அவரைத் தொழுது சொல்வாராகி,
குறிப்புரை:

'பெருமானே! அடியேன் பெற்ற மக்களிவர்கள். உமக்குப் பணிவிடை செய்யும் உரிமைப் பொருளாகக் கொண்டருளி, தங்களின் நறுமணம் மிக்க மலர்த் தாள்களைத் தொழுது உய்ந்திடக் கருணை செய்திடல் வேண்டும்' என்றலும், அதுகேட்ட பரவையாரின் கணவரான சுந்தரரும், வளையல் அணிந்த தளிர்போலும் மென்மை யான கைகளுடைய இம்மகளிர் தாமும், எனக்குத் தூய மக்களாவர் என மொழிந்து, அவர்களைத் தமது மக்களாக ஏற்றார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
மலர்சூடிய கூந்தலையுடைய அம்மக்களைத் தம்மடி மீது வைத்து, அவர்களைத் தம் காதல் நிறைந்த மக்களாய்க் கருத்துட் கொண்டு, கசிவால் அணைத்து, உச்சியின் மீது கண்ணீர் விழ மோந்து அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தருளிய பின்னர்த் தம் தலைவராய சிவபெருமானின் திருக்கோயிலைச் சென்றடைந்தார். ***
வெற்றியைத் தரும் வெண்மையான ஆனேற்றுக் கொடியை உயர்த்தி அருளும் பெருமானாரின் திருக்கோயிலின் அழகிய கோபுரத்தை வணங்கி, ஒருமைப்பட்ட உள்ளத்தோடும் அன்பினால் உச்சியில் சூடிய திருக்கரத்தோடும், கோயிலினுள் சென்று, பெருமானைப் பணிந்து, அங்குப் 'பூணாண்' எனத் தொடங் கித் திருப்பதிகம் பாடியருளிக் கொன்றை மலரை முடிமேலுடைய பெருமானின் அருளுக்கு உரிமையால் கோட்புலியாரை அப்பதிகத் துள் சிறப்பித்தருளினார். *** : 'பூணாண்' எனத் தொடக்கமுடைய பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும். (தி. 7 ப. 15).
அவ்வாறு கோட்புலி நாயனாரைச் சிறப்பித் தருளும் திருப்பதிகத் திருக்கடைக்காப்பில், சிங்கடியாரைப் பெற்று எடுத்த தந்தையாராகத் தம்மை நினைந்த அத்தன்மையினால், அப் பதிகத்தில் மறவாது 'சிங்கடி அப்பன்' என்றே தம்மை வைத்தருளி, பல வகையானும் நிறைவுடைய பண் இசை பாடிப் பெருமானின் நிறைந்த அருளைப் பெற்று வணங்குவாராய், *** கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி

அவ்விடத்தினின்றும் எழுந்தருளி, அளவற்ற அன்பினால் உள்ளம் மகிழ்ந்திட, சிவந்த நெற்றிக் கண்ணையுடைய சிவபெருமான் மேவியிருக்கும் திருவலிவலம் என்னும் திருப்பதி யினைச் சேர்ந்து, வணங்கி, உமையொரு கூறனாய பெருமானை 'வலிவலத்துக் கண்டேன்' என்று எங்கும் பெருமை பொருந்த விளங்கும் திருப்பதிகத் தமிழ்மாலையை எடுத்துத் தொடுத்துப் பாடி மகிழ்வார். *** இந்நிறைவுடைய பாடல், 'ஊன் அங்கத்து' (தி. 7 ப. 67) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகப் பாடல் முழுதினும் 'வலிவலந்தனில் வந்து கண்டேனே' என்னும் தொடர் அமைந்திருத்தலின் அதனை ஆசிரியர் எடுத்து மொழிந்தார்.
அத்திருப்பதிகத்தில் பெரிதும் உம்மைப் பரவி மகிழும் திருஞானசம்பந்தப் பெருமானும் திருநாவுக்கரசரும் விண் ணப்பிக்கும் பாடல்களைக் கேட்டு உகந்தீர் என்று மொழிந்து, வணங்கி, அருள்பெற்று, எழுந்தருளி மேற்சென்று, திருவம்பலத்தினிடமாகக் கூத்தியற்றும் பெருமான் வீற்றிருக்கும் பெருமையுடைய திருவாரூ ருக்குச் சென்று அணைந்து, அங்குப் பூங்கோயிலின்கண் அமர்ந்த பெருமானின் செம்பொன்னின் சிலம்பணிந்த சேவடிகளைப் பணிந்து, *** 'நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரையனும் பாடிய நற்றமிழ் மாலை சொல்லிய வேசொல்லி ஏத்துகப் பானை' (தி. 7 ப. 67 பா. 5) என வரும் அருள்மொழியை நினைவு கூர்ந்து இப் பாடலில் அருளுகின்றார் ஆசிரியர். இவ்விரு பெருமக்களும் அரு ளிய பதிகங்களையே தொடர்ந்து கூறினும், பெருமானார் கூறிய தையே கூறுகின்றார் எனும் உவர்ப்பின்றி அருள்செய்வான் என்ப தால், நம் அருளாளர் பெருமக்கள் அருளியனவற்றையே நாம் கூறி உய்யலாம் என்பது தெளிவாகின்றது. காரணம் அவர்கள் அனை வரும் அருளாளர்கள். இறைவனை உயிரினும் மேலாக உணர்ந்து போற்றிவந்த தன்மையால் அப்பெருமானைத் தம்மகத்துக் கொண்ட வர்கள். ஆதலின் அவர்கள் திருவாக்கைச் சலிப்பின்றி ஏற்கின்றான் இறைவன்.
வணங்கியவர், அக்கோயிலினின்றும் மீண்டருளி, பரவையார் திருமாளிகைக்குச் சென்று, அங்குத் தங்கி, உளம் நிறைந்த விருப்புடன் வாழ்ந்து வரும் காலத்தில், நீடிய செல்வமுடைய திருவா ரூரின் புறத்தே அணிமையாக உள்ள கோயில்களையும் சென்று பணிந்து போற்றிப் புற்றின் இடமாக உறைந்தருளும் பெருமானின் திருவடிகளையும் பிரியாது வணங்கி என்றும் ஒழியாத இன்பத்தைப் பெற்றிருந்தார். *** நண்ணிய கோயில்கள் என்பன திருவிளமர், திருமாலு மங்கை, திருச்சாத்தமங்கை, திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
இவ்வாறு ஆரூரர் இன்புற்று வாழும் நாளில், நிறைந்த திருச்சடையையுடைய பெருமான் அமர்ந்தருளும் திருவா ரூர்த் திருப்பங்குனி உத்திரத் திருநாள் அணுக, அப்பங்குனி உத்திரத் திருநாளில் பரவையார் நிகழ்த்திவரும் அருந்தொண்டிற்குப் பொருட் குறைவு வாராதவாறு, நிறைந்த பொன் கொண்டணைவதற்குத் திருவுளம் பற்றிய நம்பியாரூரர், திருப்புகலூரில் எழுந்தருளியிருக்கும் இறைவர் திருவடிகளைப் பணிய அங்குச் சென்றார்.
குறிப்புரை:

சென்று அத்திருப்புகலூரில் அமர்ந்தருளும் தேவர் களின் தலைவனாய பெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலின் அழகிய திருமுற்றத்தை அடைந்து, பணிந்து வலங்கொண்டு, தம் முதல் வர் முன்பாக வீழ்ந்து வணங்கி, வழிவழியாக நீளநினைந்து வரும் மரபில் அடிமையாகித் திருவடித் தொண்டு செய்து வரும் சிறப்பினால், முழுவதும் மூழ்கிய அன்பினால் போற்றிசெய்து, எழுந்து திருமுன்பு நின்று, திருப்பதிக இசை பாடித் தாம் நினைந்த கருத்தைப் பெருமா னிடம் விண்ணப்பித்துக் கொள்வாராய், *** இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.
சிறிதுநேரம் கும்பிட்டு, சிந்தையில் பெருமானின் நினைப்பைத் தவிரப் பிறிதொழிந்து நிற்ப, வேண்டியவாறு பொருள் பெறாது வறிதே வெளியில் வந்தருளி, அருகில் உள்ள திருமடத்தில் அறிவுமிக்க அன்பர்களுடன் செல்லாது, திருக்கோயிலின் அழகிய திருமுற்றத்தின் அருகே இருந்திட, அதுபொழுது மான்கன்றை ஏந்திய இறைவனின் அருளாலேயோ, என்னவோ, அறியோம். அவருடைய மலர்போன்ற கண்களில் துயில்வந்து பொருந்தியது. *** இவ்விருபாடல்களும் ஒருமுடிபின.
அவ்வாறு துயில்வந்த அளவில், தம்பிரான் தோழராய சுந்தரர், அங்குத் திருக்கோயில் திருப்பணிக்கு இருந்த சுட்ட மண்கட்டிகளான செங்கற்கள் பலவற்றைக் கொண்டுவரச் செய்து, உயரமாக அடுக்கி, தேன்விரும்பும் வண்டினங்கள் மொய்த்திடும் மலர்களையுடைய திருமுடிக்குமேல் அணையாக மேலாடையாய ஒளி பொருந்திய வெண்பட்டாடையை அதன்மீது விரித்துத் துயில் கொண் டார். ***
அதுபொழுது உடனிருந்த தொண்டர்களும் துயில்கின்ற அளவில், ஆரூரரின் தாமரை மலரனைய இரு கண்களை யும் பற்றிய உறக்கம் நீங்கிட, வெற்றி பொருந்திய ஆனேற்றை ஊர்தி யாக உடைய பெருமானின் திருவருளால், வெந்திடச் சுட்ட கற்கள், விரிந்த ஒளியுடைய செம்பொன் கற்களாய் இருந்தமை கண்டு, திருப்புகலூர் இறைவரின் அருளை நினைந்து, தொழுது, வணங்கி,
குறிப்புரை:

: அதுபொழுது அடியவர்களும் துயில் உணரத் தாமும் மகிழ்ந்து எழுந்து, துணையான திருவுடைய செந்தாமரையின் முகைபோலத் திருக்கைகளைத் தலைமேல் குவித்துக்கொண்டு கோயிலுட் புகுந்து, தம்அளவில் அடங்காத பேரன்பு மிகும் காதல் கொள்ள வணங்கித், தமக்கு அந்நிலையில் வாய்த்த இனிய பண்ணமைந்த இசையால் 'தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் பதிகத்தை எடுத்துப் பாடியருளினார். *** 'தம்மையே புகழ்ந்து' என்று தொடங்கும் பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 34). திருவருளால் செங்கல் பொன்னாக, அப்பேரருள்திறத்தை நினைந்து புலவராற்றுப் படையாக இப்பதிகத்தை அருளிச் செய்துள்ளார் ஆரூரர். திருக்கடைக்காப்பில், வனப்பகையப்பன், சடையன் தன் சிறுவன் என அருளியிருப்பன இவர்தம் வரலாற்றிற்குத் துணையா கின்றன.
இத்திருப்பதிகம் பாடி அப்பதிகத்திற்குத் திருக் கடைக்காப்பும் அணிந்து போற்றி, வெளியே போந்து, ஒப்பற்ற இன்பத்தை இப்பிறவியிலேயே தரும் பெருமானின் அருள் பெற்று, அப்பெருமானின் அருளால் பெற்ற பொன் குவியலையும் உடன் கொண்டு, நீர் நிறைந்த கங்கை நதியையும், இளம் பிறையையும், திருச்சடையையும் உடைய பெருமானின் திருப்பனையூர் என்னும் திருப்பதிக்குச் சென்று சேர்ந்தார் முந்நூலணிந்த அழகிய மார்புடன் விளங்கும் சுந்தரர். *** எதிரில் - ஒப்பற்ற. 'இம்மை யேதருஞ் சோறுங் கூறையும் ஏத்த லாம்இடர் கெடலுமாம், அம்மை யேசிவ லோகம் ஆள்வதற் கியாதும் ஐயுற வில்லையே' என வரும் இப்பதிக முதற் பாடல் கருத்தை உளங்கொண்டே 'எதிரி லின்பம் இம்மையே தருவா ரருள்பெற்று' என ஆசிரியர் அருளுவாராயினர்.
திருப்பனையூர்த் திருக்கோயிலுக்குச் சுந்தரர் வந்து கொண்டிருக்க, அவர் முன்பாகச் சிவந்த சடையையுடைய சிவபெருமான், தம் கோயிலின் வெளிப்புறத்து, திருக்கூத்தாடும் காட்சியைக் காணுமாறு அருள் செய்திடலும், அங்கு எழுந்த பெரு விருப்பால் விழுந்து வணங்கிப் பெருமானை 'அரங்காட வல்லார் அவரே அழகியர்' என்று இவ்வுலகம் உய்யத் திருப்பதிகம் பாடி, அருள் பெற்று, உடன் திருப்பனையூரினின்றும் சென்றார். *** : 'மாடமாளிகை' (தி. 7 ப. 87) எனத் தொடங்கும் இத் திருப்பதிகம் சீகாமரப் பண்ணிலமைந்ததாகும். இப்பதிகத்தில் வரும் ஒன்பது பாடல்களிலும் பெருமானின் திருநடனத்தைப் பலவாறாகச் சிறப்பித்து, அவ்வாறு ஆடல் வல்லார் அவரே அழகியரே என நிறைவு படுத்தியருளுகின்றார் ஆரூரர். அதனை யுளங்கொண்ட குறிப்பிலேயே ஆசிரியர் இப்பாடலை அருளியுள்ளார். திருக்கடைக்காப்பில், 'வன்றொண்டன் செஞ்சொற் கேட்டுகப்பா ரவ ரேய ழகியரே' என நிறைவு செய்திருப்பதும் அறிந்தின்புறத் தக்கதாம். இவ்விரு பாடல் களும் ஒருமுடிபின.
வளம் நிறைந்த சிறப்புடைய திருப்பனையூரில் வாழ்வார் வழிக்கொண்டு வணங்கிட, எழுந்தருளிச் சென்று, அளவற்ற செம்பொன் கட்டிகள் யாவற்றையும் ஆள்கள் எடுத்துவர, நெருங்கி வந்து, அழகிய திருவாரூரில் முல்லையரும்பு போலும் புன்முறுவ லுடைய பரவையார் மாளிகையில் அவர்கள் புகுந்திட, தாமும் தம் உள்ளத்துப் பொருந்திய திருவாரூர்ப் பெருமானை வணங்கிப் பெருமகிழ்வுடன் சேர்வாராகி, *** இட்டிகை செய்தல் - அவை பொன்னாலாயவாய் அமைந்திருந்தன.
இவ்வாறு திருவாரூருக்கு மீண்டு வந்து பரவைப் பெருமாட்டியார் மகிழத் தங்கி இருந்து, அவருடன் கூடி மகிழும் நாள்களில், அழகிய திருவாரூரின் அருகில் உள்ள கோயில்கள் பல வற்றிற்கும் சென்று வணங்கி, தம் சிந்தை மகிழும் விருப்பினோடும் தேவ தேவனாம் மகாதேவனாகிய திருவாரூர்ப் பெருமானை நாளும் முன்னதாகச் சென்று வணங்கித் திருவாரூரில் இனிதிருந்தருளினார், திருமுனைப்பாடி நாட்டின் அருட் காவலராகிய ஆரூரர். *** 'கோயில் பலவும் அணைந்திறைஞ்சி' என்றது முன்னர்க் குறித்தனவும், ஆங்காங்குள்ள பிற திருக்கோயில்களும் ஆம். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
பல நாள்கள் திருவாரூரில் இவ்வாறு இருந்தருளிய நம்பிகள், பெருமானின் திருவருளால் அங்கிருந்து, பெருமலையான மேருவை வில்லாகக் கொண்டு திரிபுரத்தை எரியச் செய்த வீரராகிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருநன்னிலப் பதியை அடைந்து, அக்கோயிலை வலம் கொண்டு, உட்புகுந்து, பெருமானை வணங்கி மகிழ்ந்து, 'தண்ணியல் வெம்மையினான்' எனத் தொடங்கும் தமிழ் மாலையைப் பாடினார். *** 'தண்ணியல் வெம்மையினான்' எனத் தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும். (தி. 7 ப. 98)
பாடி, அத்திருப்பதியில் தங்கியிருந்த பின், திரு வீழிமிழலை என்னும் திருப்பதியில் வாழும் நீடிய மறைவழி ஒழுகிடும் அந்தணர்கள் திரண்டு வந்து நாடெல்லாம் மகிழத் திருவீழிமிழலையி லிருந்து திருநன்னிலம் வரையுள்ள வழி எங்கும், நிலத்தில் நீள விரிக்கின்ற பாவாடையிட்டு, வழியின் இருமருங்கும் கதலி, வாழை, கமுகு ஆகியவைகளை நிரை நிரையாக விளங்க நாட்டி, அங்காங்கே அழகிய தோரண முகப்புகளும் நிரைத்து,
குறிப்புரை:

திருநன்னிலம் வந்து, நம்பிகளை எதிர்கொண்டு அழைத்து, தமது திருவீழிமிழலையை அடைந்தார்கள். அதுபொழுது அப்பெருமகனாரும் தமது சிந்தை மலர்ந்து, திருவீழிமிழலை என்னும் திருப்பதியை வணங்கி, மிக உயர்ந்த வானினின்றும் முன்பொருகால் இறங்கி வந்த மிக்க வியத்தகு ஒளியையுடைய கோயிலை முன்னாக வணங்கிப், பாசக்கட்டினை அறுத்திடும் பெருமானின் திருவடிகளைப் பரவிப் பணிவாராய்,
குறிப்புரை:

படங்கொண்ட பாம்பில் துயில்கின்ற திருமாலும், செந்தாமரை மலரில் இருந்திடும் அயனும் வணங்கிடற்கு அரியனாய, தேவர்கட்கும் தேவனாய பெருமானை, உடம்பெல்லாம் மயிர் முகிழ்க்க வணங்கி, 'அழகில் அடங்காத திருவீழிமிழலையில் கோயில் கொண்டிருந்தீர்! உம் அடியேனுக்கும் அருளும்' என மிகவும் பொருள் விரிந்த செஞ்சொல்லின் தமிழ் மாலையைச் சாத்தி அங்கு இருந்தருளுகின்ற நாள்களில், *** இப்பொருண்மை அமைந்த பதிகம் 'நம்பினார்க்கு அருள் செய்யும்' (தி. 7 ப. 88) என்னும் தொடக்கமுடைய சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும்.
இப்பதிகப் பாடல்தொறும் 'வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே' என வரும் தொடர் அமைந்துள்ளது. வீழியில், சம்பந்தருக்கும், அப்பர் பெருமானுக்கும் பஞ்சம் தீரும் வரை ஒரு பெருந்தொகை தந்து, துயர்கூர் வறுமை தொலைக்குமாறு அருளி யிருக்கலாம். அவ்வாறன்றி நித்தமும் ஒரு காசு நல்கியமைக்குரிய காரணத்தைத் சுந்தரர் நயமாக அருளும் பதிகம் இதுவாம்.

தாம் வழங்கிய பொற்காசுகளில் குற்றமும், குற்றம் இன்மையுமாகக் கொடுத்திட வல்ல திருவீழிமிழலையில் அமர்ந்து அருளும் பெருமானிடம், உயிர் விளக்கம் பெறுதற்கான அருள் பெற்றுத் திருவாஞ்சியத்தில் அமர்ந்தருளும் சிவபெருமானின், பாசம் அறுத்து ஆட்கொள்ளும் திருவடி மலர்களைப் பணிந்து, 'பொருவ னார்' எனத் தொடங்கும் மாசில்லாத, புகழுடைய திருப்பதிகத்தினைப் பாடி அங்குத் தங்கிப் பின் திருஅரிசில்கரைப்புத்தூரை அணுகச் சென்றார். *** 'பொருவனார்' எனத் தொடங்கும் பதிகம், பியந்தைக் காந்தாரப் பண்ணிலமைந்ததாகும் (தி. 7 ப. 76). இந்நான்கு பாடல் களும் ஒருமுடிபின.
அரிசிற்கரைப்புத்தூருக்கு வந்தணையும் அவர், இடையில் அரிசில் என்னும் ஆற்றின் செழுமை மிக்க நீர்வளமுடைய திருநறையூர் என்னும் ஊரில் நிலவிடும் சித்தீச்சரம் என்னும் திருக்கோயிலையும் வணங்கி, ஒழுக்கத்தாலும், பத்திமையாலும் விழுமிய அடியார்கள் விருப்பத்துடன் எதிர்கொள்ள, மழுவுடன் இளைய மானையும் திருக்கைகளில் கொண்ட பெருமான் எழுந்தருளி யிருக்கும் திருஅரிசிற்கரைப்புத்தூர் என்னும் திருப்பதியையும் பணிந்து, போற்றி, அடியார்கள் சூழ அத்திருப்பதியில் இருந்தருளும் காலத்து, *** திருநறையூர் ஊர்ப்பெயர். சித்தீச்சரம் திருக்கோயிலின் பெயர். இவ்விடத்து அருளிய பதிகம் 'நீரும் மலரும்'(தி. 7 ப. 93) எனத் தொடங்கும் குறிஞ்சிப் பண்ணிலமைந்த பதிகமாகும்.
திருஅரிசிற்கரைப்புத்தூரில் இருந்தருளும் பெரு மானார் முன்னர்ப் புகழ்த்துணை என்னும் நாயனாருக்கு அருள் புரிந்த வரலாற்றையும் அப்பதிகத்து வைத்துச் சிறப்பித்துப் போற்றிப் பாடி, அங்குள்ள முனிவர்கள் போற்றிட எழுந்தருளி, கங்கையாற்றினையும் குளிர்ந்த வெண்பிறையையும் அணிந்த சடையையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் பதிகள் பலவும் பணிந்து, இனிமை கூர்ந்த நினைவாய்த் திருவாவடுதுறையை அடைந்தார். *** அரிசில்கரைப்புத்தூரில், 'மலைக்கு மகள்' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த பதிகத்துள், புகழ்த்துணை யாரைச் சிறப்பித்தருளும் பாடல் ஆறாவது பாடலாகும் (தி. 7 ப. 9 பா. 6).
அகத்தடி மைசெய்யும் அந்தணன்றான்

அருள்விளங்கும் திருவாவடுதுறையில் வீற்றிருந் தருளும் பெருமானின் திருக்கோயிலினை வலங்கொண்டு, இறைவனை உளங்கொண்டு, உருகும் அன்பினுடன் திருக்கோயில் உள்ளே சென்று வணங்கும் சுந்தரர், 'மறையவன்' எனத் தொடங்கும் வளங்கொண்ட திருப்பதிகத்தைப் பாடி, அதன்கண் கோச்செங்கட்சோழ அரசரின் பிறப் பையும் சிறப்பித்து அத்தமிழ்ச்சொல் மாலையைச் சாத்தினார். *** இத்திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும். இப்பதிகத்து வரும் இரண்டாவது பாடலில் (தி. 7 ப. 66 பா. 2), 'தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
சோழ னாக்கிய தொடர்ச்சி கண்டு'
எனக் கோச்செங்கட்சோழப் பெருமானாரின் பிறப்பின் சிறப்பினை எடுத்து மொழிகின்றார் ஆரூரர். இதனை உளங்கொண்டே சேக்கிழார் இவ்வாறு அருளுவாராயினர். இப்பதிகத்தில் ஐந்து திருப்பாடல்களே கிடைத்துள்ளன. ஒவ்வொன்றிலும் ஒருவரலாற்றுச் செய்தி காணக் கிடக்கின்றது.

திருப்பதிக மாலையைச் சாத்தி அங்கிருந்தருளும் நாள்களில், அருள் விளங்கும் அன்பர்களுடன் கூடி மீண்டும் பெரு மானை வணங்கி, அருள்பெற்று, உமையொரு கூறராய அண்ணலா ரின் புண்ணிய நன்னீர் மிகுந்த காவிரியாற்றின் தென்கரையின் மேல் திகழும் திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து, திருவிடைமருதூரைச் சென்று அடைந்தார், திருமுனைப்பாடியின் தலைவரான சுந்தரர் பெருமான். *** பதிகள் பல பணிந்து என்பன, திருக்கோழம்பம், திருச்சாத்தனூர், தென்குரங்காடுதுறை முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).
நிலைபெற்ற மருதமர நிழலில் அமர்ந்தருளும் பெருமானாரை வணங்கி, இனிமை மிக்க சொல்மலர்களைக் கொண்டு புனைந்த திருப்பதிகம் பாடிப் போற்றி வணங்கி, அப்பால் அடியார்கள் உடன் அந்நற்பதியினின்றும் நீங்கிச் செல்வார், பெருமானாருடைய திருநாகேச்சுரம் என்னும் திருப்பதியை நினைந்து, அங்குச் சென்று, கோயிலை வலங்கொண்டு பெருமானாரின் திருவடிகளை வணங் கினார். *** திருவிடைமருதூரில் அருளிய பதிகம், 'கழுதை குங்குமம்' (தி. 7 ப. 60) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும்.
வணங்கி அருள்பெருகும், 'பிறையணி வாள் நுதலாள்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப்போற்றி, அங்கிருந்து நீங்கிக் குறைவற்ற செல்வமாய சிவம் நிறைந்து விளங்கும் சிவபுரம் என்னும் திருப்பதியில் இருந்தருளும் தேவர் தலைவனாய சிவபெருமானின் திருவடிகளையும் வணங்கி, உருகிய சிந்தையுடன் வந்து, உமையொரு கூறராய பெருமான் மகிழ்ந்து உறையும் பதிகள் பிறவும் பணிந்து, திருக்கலயநல்லூர் என்னும் திருப்பதியின் அருகாக வந்தருளினர். *** 'பிறையணி வாள் நுதலாள்' எனத் தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணிலமைந்ததாகும் (தி. 7 ப. 99). சிவபுரத்தில் அருளிய பதிகம் கிடைத் திலது. சிவபுரத்திற்கும் கலயநல்லூருக்கும் இடைப்பட்ட பதிகள் எவையெனத் தெரிந்தில.
செம்மை வாய்ந்த அந்தணர்கள் வாழும் திருக்கலய நல்லூரில் அமர்ந்தருளிய பெருமானின் சேவடிக் கீழ் மனம், மொழி, மெய் ஆகிய முக்கருவிகளானும் வணங்கி, பெருமானின் திரு முன்பு நின்று போற்றித் தொழுதெழும் அவர், தலைமை பொருந்திய 'குரும்பை முலை மலர்க்குழலி' எனத் தொடங்கும் திருப்பதிகத்தில் மெய்ம்மை யான வரலாறுகள் பலவும் வைத்து, இறைவனைச் சிறப்பித்து இசை மிக்க அப்பதிகத்தைப் பாடியருளினார். *** 'குரும்பைமுலை மலர்க்குழலி' எனத் தொடங்கும் பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 16). இப்பதிகத்தில் இறைவன் உமையம்மையாரை மணந்ததும், சலந்தரன், அந்தகாசுரன், முப்புரத்தவர், தக்கன், இராவணன், தாருகன் முதலியோரை அழித்ததும் ஆகிய செய்திகளை அருளியுள்ளார். இதனால், 'மெய்ம் மைப் புராணம் பலவும் மிகச் சிறப்பித்து' என்றார்.
அப்பதியினின்று நீங்கித் திருக்குடமூக்கினைச் சேர்ந்து, பெருமானைப் பணிந்து பாடி, பின் உமையொரு கூறராய பெருமான் அமர்ந்தருளும் திருவலஞ்சுழியைச் சேர்ந்து, பெருகும் அன்பு உருகப் பெருமானிடத்து நிறைந்த காதலுடன் வணங்கித் தமிழாற் போற்றிப் புகழ்ந்து, அப்பால் திருநாவுக்கரசர் பெருமானுக்குத் திங்களைச் சடைமீதணிந்த இறைவர் திருவடி சூட்டி அருள்புரிந்த திருநல்லூரைச் சென்றணைந்தார். *** இவ்விரு பதிகளிலும் அருளிய பதிகங்கள் கிடைத்தில.
திருநல்லூரில் வீற்றிருக்கும் இறைவரின் திருவடிகளைப் பணிந்து பாடி, இடையிலுள்ள இறைவருடைய திருப் பதிகள் பலவற்றையும் வணங்கிப் போற்றிச் சென்று, இசையோடு பாடிடும் தம் சொற்களைப் பயனாகக் கொண்டருளும் இறைவரின் திருச்சோற்றுத்துறைக்குச் சென்று, நஞ்சைக் கழுத்தில் கொண்ட பெரு மான் கோயிலினை வலங்கொண்டு திருவடிகளைப் பணிவாராய், *** திருநல்லூரில் அருளிய பதிகம் கிடைத்திலது. ஊதியம் - பயன்; கேட்டு மகிழும் பயன்.
'அழல்நீர் ஒழுகி அனைய' எனும் அழகிய சொற்களையுடைய பதிகத்தைப் பாடி எடுத்தருளி, பெருமானின் திருவடிகளிடத்துக் கொண்ட நீடிய அன்பினால் காதல் மீதூர வணங்கிய பின், பொருந்திய திருவருள் பெற்று மேற்சென்று, பரவை கேள்வராய நம்பிகள், முழுமையாக ஒளி நீறணிந்து விளங்கும் சிவபெருமான் அமர்ந்தருளியிருக்கும் திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து செல்கின்றவர், *** 'அழல்நீர் ஒழுகி அனைய' எனத் தொடங்கும் திருப்பதிகம் கௌசிகப் பண்ணிலமைந்ததாகும் (தி. 7 ப. 94). பதி பலவும் என்பன - தண்டங்குறை, திருவேதிகுடி முத லியனவாகலாம் என்பார் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).
தேவர்களின் தலைவனாய பெருமானின் திருக் கண்டியூரைப் பணிந்து, திருவையாற்றிற்குச் சென்று வணங்கி, திருப் பூந்துருத்தியில் எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றிய பின்னர், ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் பெருமானின் திருவாலம்பொழிலை அடைந்து வணங்கி, அன்றிரவு அங்குத் தங்கித் துயில்கொள்ளும்பொழுது, அவர் கனவில், *** இப்பதிகளில் அருளிய பதிகங்கள் எவையும் கிடைத்தில.
'திருமழபாடி வருதற்கு மட்டுமின்றி நினைக்கவும் மறந்தனையோ?' என்று தோடணிந்த திருக்காதுடன் விளங்கும் பெரு மானார் காட்சி தந்து உணர்த்தியருளலும், துயில் நீங்கிய சுந்தரர், நிழல் மிகும் சோலைகள் சூழ்ந்த காவிரியாற்றின் வடகரையில் ஏறிச் சென்று, நெடிய மாடங்களுடன் அழகிய வீதிகளையும் உடைய திருமழபா டியை அணைந்தார். *** 'நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே யொர்நால்விரல்' (தி. 7 ப. 45 பா. 9) என்பது நம்பிகளின் அநுபவமாதலின், நினைக்கவும் மறந்தனையோ? என்றார். இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
அணைந்தவர், கோயிலின் திருக்கோபுரத்தை வணங்கி, அன்பர்கள் சூழ உள்ளே சென்று, படங்கொண்ட பாம்பை அணிந்த பெருமானின் திருமுன்னிலையில் பணிந்து வீழ்ந்து, மேலாய கருணையையே குணமாகக் கொண்ட பெருமானின் அருட்டிறத்தைப் போற்றி, மயிர்சிலிர்க்க உருகிப் பணிந்து, பொருந்திய இசையில் 'பொன்னார் மேனியனே' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை எடுத்து,
குறிப்புரை:

'அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக் கேனே?' எனப் பாடிப் போற்றி, தனக்கு ஒப்பில்லாத அப்பதிகமாய மாலையைச் சாத்தித் தொழுது, வெளிவந்து, நிலைபெற்ற அப்பதியில் சில நாள்கள் தங்கி, அடியார்களுடன் மகிழ்ந்து, காவிரியின் இரு புறமும் உள்ள திருப்பதிகள் பலவற்றையும் பணிந்து, மேற்றிசையாகச் செல்பவர், *** 'பொன்னார் மேனியனே'(தி. 7 ப. 24) எனத் தொடங் கும் திருப்பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும். 'அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே' என்பது முதற் பாடலில் வரும் நான்காவது அடியாகும். இப்பதிகம் முழுவதும் இத்தொடர் நிறைவுத் தொடராக வந்துள்ளது. 'பொன்னிக் கரையின் இருமருங் கும் போதுவார்' என்றது, வடகரையில் திருஅன்பிலாலந்துறை, திருத்தவத்துறை, திருக்கானூர், வடகரைத் திருமாந்துறை முதலியன வும், தென்கரையில் திருநியமம், திருவேங்கூர் முதலியனவும் ஆகலாம் எனக் குறிப்பிடுவர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.
சிவந்த சடையையுடைய பெருமான் அமர்ந்தரு ளும் திருவானைக்காவை அடைய, அங்கு வாழும் அடியவர்கள், இவர் வருகையறிந்து, களிகூர்ந்து, எதிர்கொள்ளத் தாமும் வணங்கி, அவர்களுடன் பெருமானது கோயிலுள் சென்று, சேவடிக் கீழ் ஆர்வம் பெருக வீழ்ந்து எழுந்து, மேனியில் மயிர் முகிழ்த்திட, கண்ணிலிருந்து பொழியும் ஆனந்த வெள்ளம் திருமேனி எங்கும் பரந்து வழியுமாறு திளைப்பவர்,
குறிப்புரை:

'மறைகளாயின நான்கும்' என மலர்ந்து வரும் செஞ்சொல் கொண்ட தமிழ்ப் பதிகத்தை உள்ளம் நிறைகின்ற காத லுடன் பாட எடுத்துத், தம்முடன் நின்று வழிபடும் அன்பர்களை நோக்கி, 'எம்பெருமானை நாளும் பணிவார்கள் எம்மையும் அடிமை யாக உடையவராவர்' என்று மகிழ்வுடன் போற்றுவார், அத்திருப்பதி யில் முன் வழிபாடாற்றிய உறையூர்ச் சோழ அரசனின் முத்து மாலையை இறைவன் அணிந்தருளிய திருவருட்டிறத்தை உணர்ந் தருளி, *** 'மறைகளாயின நான்கும்' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 75). 'இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே' எனும் கருத்துப் பாடல்தொறும் வரும் நிறைவுத் தொடராக அமைந்துள்ளது.
சோழ மன்னன், அழகிய மணிமாலையை அணிந்து கொண்டு, விரைவாக வரும் காவிரியாற்றில் பெருகும் நீரில் மூழ்குதலும், அவர்தம் முத்து மாலை கழுத்தினின்றும் வழுவிப் போகத் துன்பமுற்று, 'ஐயனே! அம்முத்து மாலையை ஏற்றருள்க' என வேண்ட, பெருமானாரும் திருமுழுக்காட்டும் நீரொடு குடத்தில் அது சேருமாறு செய்வித்துத் தமக்குத் திருமுழுக்காட்டக் கொணர்ந்த காவிரி நீருடன் அம்மாலையையும் அணிந்தருளித் தளர்ச்சியுற்ற சோழ அரசனுக்கு அருள்புரிந்த தன்மையையும் அப்பதிகத்துள் சிறப்பித்து அருளினார். *** இப்பொருளமைந்த பாடல், தாரமாகிய பொன்னித் தண்டுறை ஆடி விழுத்து
இப்பதிகத்தைப் பாடி அங்குத் தங்கியிருக்கும் நாள்களில், அதன் அருகிலுள்ள ஒளிவளர் பவளமேனியில் ஒளி நீறணிந்து விளங்கும் சிறப்பையுடைய சிவபெருமானின் கோயில்கள் பலவற்றிற்கும் சென்று வணங்கி, நிறைந்த விருப்பால் போற்றி, அங்கி ருந்து ஒப்பற்ற அன்பர்கள் அருகிலிருந்து இறைவற்குத் தொண்டு செய்யும் பெருமையுடைய திருப்பாச்சிலாச்சிராமம் என்னும் பதிக்குச் சென்றடைந்தார். *** கோயில் எம் மருங்கும் என்றது திருச்சிராப்பள்ளி, உறையூர், திருக்கற்குடி முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணி யார் (பெரிய. பு. உரை). பதிகங்கள் எவையும் கிடைத்தில.
சென்று திருக்கோபுரத்தை வணங்கித் தேவர்கள் பெருகக் கூடும் திருந்திய மணிகள் பதித்த கோயிலின் திருமுற்றத் தினை வலங்கொண்டு, உட்சென்று, முதல்வராய பெருமானின் திரு முன்பு வீழ்ந்து வணங்கி, பெரிதாகத் தம் உள்ளத்துப் பெருகும் பொருளின் விருப்புப் பெருகிட, அப்பொருளைப் பெற வேண்டிப் பெருமானின் திருமுன் நின்று வணங்கிட, இறைவர் தாம் நினைந்த பொருளை அருளாது ஒழிய, அவர் முன் நின்று,
குறிப்புரை:

அன்பு நீங்காத அச்சமுடன் பெருமானுக்கு உற்ற தோழமையினால், தாம் வேண்டிய பொன்னை விரும்பியவாறு பெறாத அவரது திருவுள்ளம், புழுங்கி, புறம்பாக நின்ற திருத்தொண் டர்களை முன்னிலைப் படுத்தி, அவர்களிடமே தமது முறைப்பாட்டைச் சொல்லிக் கொள்வார்போல, எலும்பும் கரைந்துருகப், 'பிரானார் மற்று இல்லையோ' என்று பாடத் தொடங்குவாராய்,
குறிப்புரை:

ஒருநாளும் திருக்கயிலாய மலையை விட்டு நீங்காத பேரின்ப நிலையினின்றும் நீங்குமாறு செய்து, இந்நிலவுல கத்தில் ஐம்புல இன்பங்களால் ஆரத் துய்த்தற்குரிய பிறப்பினைக் கொடுத்த காரணத்தை உணர்ந்து வருந்தி, அடிமைத் திறத்தில் இப்பிறப்பிலன்றி எழுமைக்கும் நான் அடிமை என்பதை விண்ணப் பித்து, எவ்வளவும் இவர் அருளா தொழிந்தாலும் இவரலாது பிரானார் எனக்கு இல்லை என நினைவு கூர்ந்து 'வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியரு ளினர், வழிவழியாக அடிமை செய்துவரும் நம்பியாரூரர். *** 'வைத்தனன் தனக்கே தலையும்என் நாவும்' எனத் தொடங்கும் திருப்பதிகம் தக்கராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 14). 'ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க் கடியனு மானேன்' எனப் பதினோராவது பாடலில் வரும் தொடரையும், பாடல்தொறும் 'இவரலா தில்லையோ பிரானார்' என வரும் தொடர்களையும் நினைந்து இவ்வரிய கருத்தினை இப் பாடலில் ஆசிரியர் அருளுவாராயினார். இறைவன்பால் பொன் வேண்ட, அவர் தாராது ஒழிந்த நிலை யில் பாடியது என அருளற்குக் காரணம், நான்காவது பாடலில், 'பரிந்து ஓர் பேச்சிலர் ஒன்றைத் தரவிலர் ஆகில்' என்றும், ஒன்பதாவது பாடலில் 'பிழைத்தது பொறுத் தொன்று ஈகிலராகில்' என்றும் அருளுவனவேயாம். 'இவரலாது இல்லையோ பிரானார்' எனும் தொடர் மேலாக நோக்கின் வெகுளற் குறிப்புடையதாய் இருப்பினும், 'ஒருமையே யல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க் கடியனு மானேன்' எனவும், 'ஏசின வல்ல இகழ்ந்தன வல்ல' எனவும் அருளும் நம்பியாரூரரின் திருவுள்ளக் கிடக்கையை ஆழ்ந்து கண்ட சேக்கிழார் பெருமான், இறைவன், அருளினும் அருளாதொழியினும், 'இவரலாது பிரானார் எனக்கில்லை' என்பதே அவர்தம் திருவுள்ளம் என மொழி மாற்றிப் பொருள் அமைவு காணச் செய்திருப்பது ஆழ எண்ணற் குரியதாம். வழிவழித் தொண்டர் என இவ்விடத்து அவரைக் குறிப் பதும் எண்ணற்குரியதாம்.
இவ்வாறு போற்றி, 'ஏசின வல்ல' என்று இசைத்த திருக்கடைக்காப்பையும் சேர்த்துப் பாட, உண்மை அன்பையே விரும்பியருளும் பெருமானும், பெரும் பொருள் குவையைக் கொடுத்து அருளலும், நஞ்சு வளரும் கழுத்தினையுடைய பெருமானின் திருக் கருணையையே போற்றித் தொழுது வணங்கி, அப்பதியின் இடத்துத் தங்கி, அவ்விடத்து அருகிலுள்ள இறைவர்தம் கோயில்கள் பலவற்றிற் கும் சென்று வணங்கி, மீளவும் வந்து சிலநாள்கள் அங்கு இருந்தனர். *** எவ்வகை மருங்கும் உள்ள இறைவர்தம் பதிகளை வணங்கி என்றதற்கேற்ப அறியத்தகும் பதிகள் எவை எனத் தெரிந்தில.
அப்பதியினின்றும் நீங்கித் திருவருட் சார்பாய்ச் சென்று, பசுவினிடத்துப் பெறும் ஐந்து பொருள்களையும் விரும்பித் திருமுழுக்காடிடும் பெருமான் எழுந்தருளி இருக்கும் காவிரியின் இரு மருங்கிலுமுள்ள எல்லாப் பதிகளையும் வணங்கி, சிவபெருமான் உறைகின்ற திருப்பைஞ்ஞீலியை அடைந்து, அங்குப் பாம்பினை அணிந்த இறைவரின் கோயில் கோபுரத்தை வணங்கி, உட்புறமுள்ள திருச்சுற்றில் வலமாக வந்து, பவளம்போலும் செஞ்சடையைக் கொண்ட இறைவரைத் தொழுது, அவர் தமக்கு முன்னதாகத் தோன்றும் கங்காள வேடமுடைய பெருமானாரைக் கண்டார். *** எப்பெயர்ப் பதியும் என்றது திருச்செந்துறை, திருவாலந்துறை, திருத்துடையூர், திருப்பராய்த்துறை முதலியனவாக லாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை).
கண்ட அளவில் அவர் கண்கள் காதலினால் நீர் வெள்ளம் பொழிந்திடக் கைகளைக் கூப்பி, வண்டுகள் பாடும் மலர்களைச் சூடிய பெண்களின் மனம் கவரும்படி அவர்பால் பிச்சை ஏற்கின்ற பெருமானாருடைய அவ்வடிவைக்கண்டு அவர்கள் அப் பெருமானாரிடம் கொண்டதொரு மயக்க மிகுதியால், வினாவிடும் கூற்றாக விளங்கும் சொற்களையுடைய 'காருலாவிய நஞ்ைu2970?' எனத் தொடங்கும் பதிகத்தால், தேவாதி தேவர்க்கெல்லாம் தலைவர் ஆன இறைவரைப் போற்றிப் பாடல்தொறும், 'ஆரணிய விடங்கராம் இவர்' என அமையும் அப்பதிகத்தைப் பாடி நிறைவு செய்தார். *** இம்முதற் குறிப்புடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 36). ஆரணிய விடங்கர் - காட்டை இடமாகக் கொண்டு தாமே தோன்றிய திருவடிவை உடையவர். இத்தொடர் பாடல் தொறும் நின்று, பெருமானை விளிக்கும் தொடராக அமைந்துள்ளது.
அவ்வாறு போற்றியருளிய அப்பதிகத்திற்குத் திருக்கடைக்காப்பும் சாத்தித் திருமுன்பே பணிந்து, அருள்பெற்று, வஞ்சனையற்ற அன்பர்களது கூட்டத்தையும் முன்னாக வணங்கி அவர்களுடன் கலந்து இனிதிருந்து, அப்பால் சென்று, அருள் பொருந்திய திருஈங்கோய்மலை முதலாகப் பெருமானுடைய பதிகள் பலவும் பணிந்து, குரா மரங்கள் மலரும் சோலைகளையுடைய அழகில் சிறந்த கொங்கு நாட்டில் உள்ள திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் கோயிலைச் சென்று சேர்ந்தார். *** ஈங்கோய் மலையிலிருந்து திருப்பாண்டிக்கொடுமுடி வரையிலான பதிகள் பல உள. அவற்றுள் எட்டாம் நூற்றாண்டிற்கு முன் இருந்த கோயில்களை ஆய்ந்து அவற்றை ஈண்டுக் குறித்தல் தகும்.
கொங்குநாட்டில் காவிரியாற்றின் தென்கரையில் உள்ள கறையூரில் திருப்பாண்டிக்கொடுமுடி என்னும் கோயில் முன்னாகச் சென்று, சங்கினால் ஆய வெண்தோடணிந்த பெருமானது கோயிலை வலமாக வந்து, பெருமானைச் சார்ந்து, திருவடிகளை அன்பால் தாழ்ந்து வணங்கி, பொங்கிடும் வேட்கை பெருகிடத் தொழுது, புனிதனாய அம்மூர்த்தியின் பொன்மேனியை நோக்கி, இங்கு இவர்தம்மை மறக்க முடியாது என்று எழுந்த உண்மைக் குறிப்பால் திருப்பதிகம் பாடி எடுத்திட்டு,
குறிப்புரை:

'தலைமை சான்ற பெருமானுடைய திருவடிகளை என் மனம் மறந்தாலும், அவருடைய நாமமாகிய ஐந்தெழுத்தினை எப்பொழுதும் எண்ணிய என் நாவே இனிய சுவை பெருக இடை யறாது சொல்லிடும்' என்ற இதனைத் தமது திண்மையான உணர்வி னிற் கொள்பவர், 'மற்றுப் பற்றெனக்கின்றி' என்று தொடங்கும் செழு மையாய தமிழால் பொருந்திய நமச்சிவாயப் பதிகத்தை அன்பினால் பெருமானாரைப் பற்றிய வாறு பாடி அருளினார். *** 'மற்றுப் பற்றெனக்கின்றி' என்று தொடங்கும் பதிகம் பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 48). பாடல்தொறும், இறைவனே! நின்னை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே எனும் கருத்தால் நிறையும் தொடர் வருதலின், இப்பதிகத்தை நமச்சிவாயப் பதிகம் என்பர். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
உலகெலாம் ஓதி உய்ய உறுதியாய அப்பதிகத்தைப் பாடியருளி, உண்மையாம் உணர்வினில் ஒருமைப்பாடு நிலவிய சிந்தையுடன், திருவருட் பேற்றினால் நிறைந்து, பெருமானது திரு முன்னின்றும் நீங்கிச் சென்றிடும் அவர், அத்திருக்கோயிலின் புறத்தாக உள்ள பல திருப்பதிகளுக்கும் சென்று பணிந்து, பெருமானுடைய திருவடிகளைப் போற்றி அப்பால் சென்று, குளிர்ந்த நல்ல மலர்கள் நெருங்கிச் செறிந்த மேல் கொங்கு நாட்டில் உள்ள காஞ்சிவாய்ப் பேரூர் என்னும் திருப்பதிக்குச் சென்று, மீதூர்ந்த அன்பின் எழுச்சி யோடு சேர்வுற்றார். *** 'மீகொங்கில் அணி காஞ்சிவாய்' என்பது ஆரூரர் திருவாக்காகும். ஆதலின் ஆசிரியர் சேக்கிழாரும் 'மீகொங்கில்' எனும் தொடரை எடுத்தாளுவாராயினர். காஞ்சி - ஆறு. இது பேரூருக்கு மேற்கே வெள்ளிமலைச் சாரலில் வன்னி மூலத்தில் தோன்றிப் பேரூர் வரும்வரைக் காஞ்சி நதி என அழைக்கப்பட்டு வருகிறது. பின் இவ்வாறு காவிரியில் கூடும் வரை நொய்யல் ஆறு என அழைப்பர். மீகொங்கு - மேற்குப் பகுதியிலுள்ள கொங்கு. கொங்கு நாடா னது, கீழ்க்கொங்கு, மேல் கொங்கு, வட கொங்கு என்னும் முப்பிரிவு களைஉடையது. பாங்கு நற்பதிகள் என்பன மேல்கொங்கு நாட்டிலும், காவிரிக் கரையிலுமாக உள்ள திருக்கோயில்களாகலாம் என்பர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). சிவன்மலை, சென்னிமலை, ஊதியூர்மலை, பெருந்தலையூர், குரக்குத்தளி முதலிய குன்றின் கண்ணுள்ள கோயில்களாகலாம் என்றும் அவர் கூறுவர்.
அக்காஞ்சிப் பேரூருக்குச் சென்று, தம்மை ஆட்கொண்டருளிய பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயிலை அணைந்து, உண்மை நிறைந்த அடியவர் கூட்டம் சூழ்ந்திட, வலங் கொண்டு, இறைவனின் திருமுன்பு சென்றிடும் அவர், தம் முன்னி லையில், விளக்கமுற என்றும் நிலைபெற்ற பொருளாய இறைவன், தில்லையில் நின்று ஆடிடும் நீடிய கோலத்தை நேராகக் காட்டியருளத் தம் கைகளை உச்சி மீது குவித்துக் கண்களினின்றும் பெருகிவரும் நீர் சொரிந்திடக் கண்டருளினார். *** பேரூர் முற்காலத்தே பெரிய நகராக விளங்கியதாதலை இதனால் அறியலாம். மேலைச் சிதம்பரம், ஆதிபுரி, பிறவாநெறி என அழைக்கப் பெற்றமை கொண்டு, இது புண்ணியப் பதியாதலையும் அறியலாம். பெருமானின் தில்லைக் காட்சியை இங்குக் கண்டதாகச் சேக்கிழார் கூறுகின்றார். தில்லையில் சுந்தரர் தாம் வழிபட்ட பொழுது 'பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே' (தி. 7 ப. 90 பா. 10) எனச் சுந்தரர் கூறுகின்றார் 'ஒருவன் என்னும் ஒருவன் காண்க' (தி. 8 ப. 4 வரி. 43) எனவரும் திருவாக்கை நினைவு கூர்க.
காண்டலும் தொழுது வீழ்ந்து, உடன் எழுந்து, கரையிலாது எழும் அன்பு என்பினையும் உருக்கிடத் தம்மிடத்துக் கொண்ட ஐம்புலன்களுக்கும் புலப்படாத இன்பத்தை அடைந்து, அவ்வின்பம் உண்மை உணர்வில் பொங்கிடக் கூத்தியற்றுதலில் வல்ல பெருமானைத் தலைப்படுமாறு கிடைத்தபின், சைவ ஆண்டகையராய நம்பிகளுக்கு, அடுத்து நேர்ந்த அவ்வருட் பேற்றின் நிலையை ஆர்அளவறிந்து உரைப்பார்கள்? எவருமிலர் என்பதாம். குறிப்புரை
அவ்வாறாக நிகழ்ந்த பேரருளைப் பெற்ற அன்பராகிய நம்பிகள், தம் இன்ப வெள்ளத்துள் மலர்ந்த பாடலை மகிழ்ந்து உடன் போற்றி, வளம் நிறைந்த அப்பதியிடைப் பொருந்தி, பொன் மணியாலாய அடைதற்கரிய சபையில் எடுத்து நின்றாடிய திருவடிகளைக் கும்பிடப் பெற்றால், இனிப் புறம்பு சென்று போற்றுவது என்? (ஏதும் இன்று) எனும் கருத்துடன் அவ்விடத்தினின்றும் எழுந் தருளிச் செல்வதற்கு முற்படுவாராகி, *** இப்பதிகம் கிடைத்திலது.
அவ்விடத்தினின்றும் நீங்கிப் பெருமானாரின் அருளைப் பெற்றுச் சென்றிடும் நம்பிகள், அரிய மலைச் சுரங்களை யும், பிற நிலப்பகுதிகளையும், நீருடைய ஆறுகளையும் கடந்து, இடைப்பட்ட பெருமானுடைய பதிகள் பலவும் பணிந்து, பொருந்திய வளம் மிக்க தமிழால் விருப்புடன் போற்றித் திருவெஞ்சமாக் கூடலையும் வணங்கி, நெடுந்தொலைவு கடந்து, தென்திசையில் உள்ள திருக்கற்குடி மலைக்கு வந்தார். *** நதிகள் பல கடந்து என்றது, அமராவதி, நன்காஞ்சி, சிற்றாறு, குழகனாறு முதலாயினவாகலாம் என்றும், பதிகள் பல என்றது மூலனூர், தென்னிலை, கருவூர் முதலியனவாகலாம் என்றும் கருதுவர் சிவக்கவிமணியார் (பெரிய. பு. உரை). திருவெஞ்சமாக்கூடலில் அருளிய பதிகம், 'எறிக்கும்' (தி. 7 ப. 42) எனத்தொடங்கும் கொல்லிக் கௌவாணப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
வீடுபேற்றை வழங்கிடும் இக்கற்குடிமலையில், நினைத்தற்கரிய மிகு இனிமையுடைய பெருமானைப் பணிந்து, போற்றி, மீதூர்ந்த விருப்பில், நிறைந்த சிந்தையுடன் திருப்பதிகம் பாடி யருளி, மேலும் பெருமானாரைப் பாடும் விருப்பில், அடியார்களுடன் பல பதிகளும் சென்று வணங்கி, தேடிநின்ற அயன், திருமால் ஆகிய இருவருக்கும் காண்டற்கரிய கடவுளின் திருஆறைமேற்றளி என்னும் திருப்பதிக்குச் சென்றார். *** திருக்கற்குடியில் அருளிய பதிகம் 'விடையார்' எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும் (தி. 7 ப. 27).
சிவந்த பொன்னான மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் உறையும் திருஆறைமேற்றளி என்னும் பதியில் பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து வணங்கி, நாளும் மகிழ்கின்ற நம்பிகளுக்குத் திருவருள் கூடிட, அப்பாலும் சென்று தேவர்கள் போற்றும் கோயில்கள் பலவும் சென்று பணிந்து வருவார், இவ்வுலகு வாழத் திருஇன்னம்பர் என்னும் நகரைச் சென்றடைந்தார். *** திருஆறை மேற்றளியில் அருளிய பதிகம் கிடைத்திலது.
அழகு பொருந்திய திருஇன்னம்பரில் மகிழ்ந்தருளி இருக்கும் இறைவனின் திருவடிகளைப் பணிந்து, உள்ளம் நிறையும் அன்பினால் போற்றி செய்து, தெவிட்டாத அருளின் பெருக்கால் இன்புற்று, அங்கு அமர்ந்தருளும் நம்பிகள், போர்த்தொழிலில் மிகு விருப்பங்கொண்டு திரியும் கயாசுரன் என்னும் யானையை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்புறம்பயம் என்னும் திருப் பதிக்கும் சென்று, போற்றுதற்குப் பொருந்திய உள்ளம் மிகவும் வேட்கை எய்த, அங்குச் செல்பவர், செல்லும்போது திருப்பதிகம் பாடியவாறே செல்வாராய்,
குறிப்புரை:

'அங்கம் ஓதி ஓர் ஆறை மேற்றளி' எனத் தொடங் கிப் பெருமானிடம் பொருந்திய காதலால் பொங்கி எழும் செந்தமிழால், தாம் விரும்பிய 'புறம்பயம் தொழப்போதும்' என்று, எங்கும் பரவிய இன்னிசையுடைய தேவாரப் பதிகத்தைப் பாடிக் கொண்டு, திங்களைச் சூடிய இறைவர் வீற்றிருந்தருளும் திருப்புறம் பயம் என்னும் பதிக்குச் சென்றார். *** இத்தொடக்கமுடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 35). இப்பதிகத்தின் முதற் பாடலில் வரும் 'அங்கம் ஓதி ஓர் ஆறை மேற்றளி நின்றும் போந்து வந்து இன்னம்பர்த், தங்கினோமையும் இன்னதென்றிலர் ஈசனார் எழுநெஞ்சம்' எனவரும் பகுதி, நம்பிகள் தொடர்ந்து போந்தருளும் திருப்பதிச் (தல யாத்திரை) செலவினை அறியவும் வாயிலாயுள்ளது.
அத்திருப்பதிக்கண் வாழும் தொண்டர்களும், இவர்தம் வருகையறிந்து, அன்று திருவெண்ணெய்நல்லூரில் ஒப்பற்ற சிறந்த அந்தணனாய் வந்து பழமையான ஓலை ஒன்றினைக் காட்டி ஆண்டு கொண்டருளப் பெற்ற பேரருளாளராய நம்பிகள், இத்திருப்பதிக்கு வந்து சேர்ந்திட, 'என்ன தவங்கள் நாம் செய்தனம்' எனப் போற்றிச் சென்று, அவரை எதிர்கொண்டிட, அவர்களுடன் கூடி முப்புரங்களையும் எரிசெய்த சிவபெருமான் அமர்ந்தருளும் அக்கோயிலின் திருவாயிலைச் சென்று சேர்ந்தார்.
குறிப்புரை:

நீண்ட கோபுரத்தின் முன்பாக வணங்கித், தம்முடன் கூடிய அடியாருடன் உட்சென்று, அங்கு உலகெலாம் உய்ய நடமாடும் பெருமானின் திருவடிகளையும் வணங்கிக் கைகள் கூப்பி நின்று, மணம் கமழும் இதழ்கள் விரிந்த மலர்களைத் தூவி, உறுப்புக்கள் எட்டுடனும் ஐந்துடனுமாய பெருமை நீடிய நிலமிசைப் பொருந்திய வணக்கங்களைச் செய்தார். ***
அங்கு இறைவனின் பேரருளைப் பெற்று, உள்ளத்தில் ஆர்வம் மிகப் பொழிந்து எழுகின்ற அன்பினால் பொங்கி மலர்ந்திடும் பூப்போன்ற அழகிய திருவடிகளை முன்பாகப் பணிந்து போற்றி, மீண்டு வெளியே வந்து, எங்குமாகி நிறைந்து விளங்குகின்ற பெருமான் மகிழ்ந்து உறைகின்ற கோயில்களில் ஆங்காங்கு அவர் கொண்டிருக்கும் திருக்கோலங்களைக் கண்டு பணிவாராகிய நம்பிகள், அருள் நிறைந்த குறைவில்லாத அன்பர்களுடன் சென்றார். *** திருப்புறம்பயத்தில் பெருமான் முன்பு நின்று போற்றிய பதிகம் கிடைத்திலது.
நறுமணம் மிக்க மாலை அணிந்த மார்பினை உடைய ஆரூரர், வன்னி, கொன்றை, தும்பை, வெள்ளெருக்கு, இளம் பிறை, தூய கங்கைநீர் ஆகியவற்றை அணிந்த சடையையுடைய சிவ பெருமான் இருந்தருளும் திருப்பதிகள் பலவற்றையும் வணங்கிப் பூங்கொடியின் வனப்புடைய பெண்கள் ஆடல் மிகுந்த கூடலை ஆற்றூரை அணுக, *** தானம் பல பல என்பன, கோவந்த புத்தூர், பழுவூர், கடம்பூர்கரக் கோயில், கடம்பை இளங்கோயில் முதலாயினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.
ஆயினும், ஒப்பற்ற புகழுடைய சுந்தரர் பெருமான் சொலற்கரிய பெருமையுடைய திருக்கூடலையாற்றூருக்குச் சேராதவ ராய்த் திருமுதுகுன்றை நோக்கிச் செல்லலும், அவ்வழியில் உமையம் மையாரோடு வீற்றிருந்தருளும் உண்மையான மேலான பொருளாக விளங்கும் சிவபெருமான், ஓர் அந்தணர் வடிவு கொண்டு, முப்புரி நூல் அணிந்து அவர் முன்பு நின்றார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
அவ்வழியில் நின்ற அந்தணர் பெருமானை, நம்பிகள் நோக்கி, நெகிழ்ந்த சிந்தை உடையவராகித் தாழ்ந்து வணங்கி, 'இன்று யாம் திருமுதுகுன்றத்தைச் சேர்தற்குரிய வழியைச் சொல்லும்' என்னலும், அதுபொழுது மேருமலையை வில்லாக உடைய சிவ பெருமான் அவரை நோக்கிக் 'கூடலையாற்றூரை அடைதற்குரிய வழி இதுவாகும்' என்று கூறியருளித் தாமும் அவருக்கு வழித்துணையாகச் சென்றிடலும், ***
அந்தணனாய எம்பிரான் வழித்துணையாக முன் போகக் கண்டு, கைகள் கூப்பித் தொழுது, பின்னாகச் செல்பவர், முன் போன அந்தணனாரைக் காணாதவராகி, வண்டுகள் மொய்க்க இதழ் விரிந்து விளங்கும் மலர் சூடிய சிவபெருமானை உடன் நினைந்து தொழுது, 'வடிவுடை மழு' எனத் தொடங்கும் பதிகம் பாடிப் போற்றித் தேவர்கள் தலைவனாம் சிவபெருமானார் 'இவ்வழிப் போந்த அதி சயம் அறியேன் யான் ' என அப்பதிகத்து மொழிந்து, எம்பிரான் மீது கொண்டெழுகின்ற பெருவிருப்பத்துடன் திருக்கூடலையாற்றூருக்குச் சென்றருளினார். *** 'வடிவுடை மழு' எனத் தொடங்கும் பதிகம் புறநீர்மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 85). 'இவ்வழி போந்த அதிசயம் அறியேனே' எனப் பாடல்தொறும் வரும் நிறைவுத் தொடர் ஆசிரியர் சேக்கிழார் அருளும் இவ்வரலாற்றிற்கு அரணாய் அமைந்துள்ளமை அறியத்தக்கது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
அத்திருநகரில் வீற்றிருந்தருளும், கொன்றை மலர் சூடிய சடையையுடைய, பெருமானது பெருமை மிகுந்த கோயிலி னுள் புகுந்து, உள்ளத்துப் பெருகிய ஆர்வம் பொங்கிட, பொன்னா லாய திருச்சபையில் திருக்கூத்தியற்றும் பெருமானின் வீரக்கழலை யணிந்த திருவடிகளை வணங்கிப் போற்றிப் பேரருள் பெற்றுப் பின் திருமுதுகுன்றத்தைச் சென்று சேர்ந்தார். *** திருமுன்பு நின்று அருளிய பதிகம் கிடைத்திலது.
பெருகிய நிலைகளையுடைய கோபுரத்தை முன் வணங்கிக் கோயிலைச் சூழ வலம் வந்து புகுந்து, எஞ்ஞான்றும் மாறாது கூத்தியற்றிவரும் பெருமானைக் கண்ட அளவிலேயே கை தொழுது வீழ்ந்து, 'நஞ்சியிடை' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடித் தொழுது, தலைமேல் கூப்பிய கையராய் நின்று, *** 'நஞ்சியிடை' எனத் தொடங்கும் திருப்பதிகம் கொல்லிக் கௌவாணப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 43).
குற்றமற்ற தம் மனத்தில், தம் தலைவர்பால் பொருள் வேண்டிவந்த குறிப்போடும் வணங்கும் பொழுது, இதழ்கள் விரிந்த கொன்றை மலரைச் சூடிய பெருமான் பொருள் தர, அருள் பெறுவாராய நம்பிகள், மீண்டும் திருமுதுகுன்றத்து இறைவரை 'மெய் யில் வெண்பொடி' எனத் தொடங்கும் பதிகம் பாடிடலும், *** 'மெய்யை முற்றப் பொடிபூசி' (தி. 7 ப. 63) எனத் தொடங் கும் திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும். பாடலில் வரும் சொற்கிடக்கையைச் சிறிது மாற்றி, மெய்யில் வெண்பொடியும் பாட என்றருளினார்.
குளிர்ந்த பிறையணிந்த சடைமுடியையுடைய சிவபெருமானும், அவருக்குப் பன்னிரண்டாயிரம் பொன்னினை மிகவும் அருள் செய்யும் வகையில் கொடுத்திடலும், ஆளுடைய நம்பிகளுக்குத் தனித்துத் தமது உள்ளத்து எழும் மகிழ்ச்சி பொங்கிட, பெருமானைத் தாழ்ந்து வணங்கி, எழுந்து, அருகாகச் சென்று, கனிந்த நஞ்சை உண்டருளிய கழுத்தினை உடைய பெருமான் திருமுன்பு நின்று, மேலும் விண்ணப்பிப்பாராய்,
குறிப்புரை:

பெருமான் எனக்குத் தந்தருளிய இப்பொன் எல்லாம், திருவாரூரில் உள்ளார் கண்டு மருட்சியுறவும், அதிசயித் திடும்படியாகவும் அங்கு வரும்படி செய்தல் வேண்டுமென்று வேண்டி டலும், அதுபொழுது அவர் தெளிவு கொள்ளும்படி, வானில் எழுந்த திருவாக்கால், 'ஆரூரனே! செழுமையான மணிமுத்தாற்றில் இட்டு, இப்பொருளை எல்லாம் திருவாரூர்க் குளத்தில் போய்ப் பெற்றுக் கொள்வாய்!' என்றருளினார். *** இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
தம் பெருமானார் அருளிய வானொலியைக் கேட்ட பின்னர், வன்றொண்டராய நம்பிகள், அப்பொன்னின் அடை யாளம் தெரிதற்காக ஒரு துண்டினை வெட்டி, அதனைக் கையிற் கொண்டு, ஏனைய பொன்னின் திரளை அழகிய மணிமுத்தாற்றில் சேருமாறு விடுத்துத் திருவாரூர் நோக்கிப் போகின்றவர், 'அன்று எனைத் தாமே வலிய வந்து ஆட்கொண்டருளிய இறைவனின் திரு வருளை, இச்செயலில் மீளவும் அறிவேன்' என்று, குறிப்புரை
பெருமானிடத்துப் பொருந்திய பெருவிருப்பால் தொண்டு செய்து, உடற்கு வளர்ச்சி தரும் பொன்னைப் பெற்றவர், உயிர்க்கு வளர்ச்சி தரும் (நிலையான இன்பம்) அந்தணர்கள் போற் றும், புலியூரெனும் தில்லைப்பகுதியின் கண்ணுள்ள கனகசபையில் நீல கண்டப் பெருமானின் திருக்கூத்தைக் கண்டு கும்பிடுவன் என்று கருதி, குளங்கள் சூழ்ந்த தில்லை என்னும் ஊரை நோக்கிச் செல்லும் நோக்கத்தில், திருமுதுகுன்றப் பெருமானை வணங்கிப் போயினார்.
குறிப்புரை:

செல்லும் வழியில் இடைப்பட்ட பதிகள் பலவும் வணங்கிச் சென்று, உமையொரு கூறராய சிவபெருமான் வீற்றிருக் கும் திருக்கடம்பூரை அடைந்து, பெருமானைப் போற்றி, உள்ளம் நிறைந்த பெருமகிழ்வை வழங்கி அருளும் கூத்துடைய பெருமான் ஆடி அருளும் தில்லை என்னும் மூதூரை (பழைய நகரை) அணைந்து, அழகிய திருவாயிலின் ஊடாக உட்புகுந்து, மிகவும் உயர்ந்த மாடங்கள் விளங்கும் செழுமையான திருவீதியைச் சேர்ந்தார். *** மாடுள பதிகள் என்பன, திருமுதுகுன்றத்திற்கும், திருத் தில்லைக்கும் இடையிலுள்ள பதிகளாய திருஎருக்கத்தம்புலியூர் முதலாயினவாகலாம். கடம்பூரில் அருளிய பதிகம் கிடைத்திலது.
பொலிவு மிக்க அவ்வீதியைத் தாழ்ந்து வணங்கி, புண்ணியத்தின் விளைவாய் ஓங்கிய நல்ல திருவுடைய கோயிலின் வாயிலை அடைந்து, மணம் நிறைந்த மாலையைச் சூடும் மார்புடைய நம்பிகள், மற்று அத்திருவாயிலின் முன்பாக மண்மேல் விழுந்து வணங்கி, உட்புகுந்து, பசிய பொன்னால் அமைந்த திருச்சுற்றுத் திரு மாளிகைகளையும் வலமாகச் சூழ்ந்து, உச்சிக் கூப்பிய கையினராய்,
குறிப்புரை:

தில்லைக் கூத்தியற்றும் பெருமானின் திருமுன்பாக விளங்கும் அழகிய பொற் கோபுரத்தின் ஊடாக உள்புகுந்து வணங்கி, ஒளி ஓங்கி வளரும் பொற்பொதுவில் நடனமாடும் பெருமானுடைய செவ்விய திருவடிகளை அணுக வந்தடைய, உள்ளத்து நிறைந்து நீடஓங்கும் ஆனந்த வெள்ளமாக, கண்கள் நீரினை இடையறாது வெளிப்படுத்த, ***
போற்ற எடுத்திடும் வாய் குளறிப், பெருமான் இடத்துக் காதல் பெருக உள்ள திருக்களிற்றுப்படியைத் தாழ்ந்து, பொருந்திய வகையால் உடலின் ஐந்து உறுப்புகளும் எட்டு உறுப்புக ளுமாக நிலமிசைப் பொருந்த வணங்கி, உயிர்கள் எல்லாம் உய்தற் குரிய வலிமை மிகுந்த திருக்கூத்து, உள்ளத்துப் பெருகிய இன்பத்தை விடாத தமது உள்ளத்தே, வஞ்சியாது நீள நிறைந்து நிற்கும் பேரொ ளியைக் கண்டு கொண்ட நிறைவு தம் மனத்தில் பெருக்கெடுப்ப, ***
'மடித்தாடும் அடிமைக் கண்' எனத் தொடங்கி, நிலைபெற்ற உயிர்கட்கு அருள் புரிந்திடும் அத்தகவால், அடுத்துச் செய்திடும் நல்ல நெறியில் ஒழுகி நிற்பார்கள், தவறியும் இயமன் கைப்பட்டு நரகத்துச் சேராதவாறு தடுக்கின்ற பெருமானைத் திருக் காஞ்சிவாய்ப்பேரூரில் கண்ட திருக்கூத்தைச் சிறப்பித்து, ஒப்பற்ற அத் திருக்கூத்தை என்றும் செய்தருள்பவனை, 'மனமே! நான் பெற்ற பேறு தான் என்னே!' என்று மிக நயப்புடன் பாடியருளி, *** மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே

பிரியாத அருள் பெற்று, வெளியே சென்று, கோயி லின் திருவீதியை அணைந்து தாழ்ந்து வணங்கி, பெருமானுக்கு ஆளான நம்பிகள், தில்லையில் வாழும் அந்தணர்கள் தம்மைப் போற்ற, அவர்களுடன் அங்கு அமர்ந்து இருந்து, பின்பும் நீங்காத பேரன்பினால் பொற்பதியாம் தில்லையை வணங்கி, அப்பால் சென்று, இயமன் வீழ்ந்திடத் திருவடியை ஓச்சி அருளிய பெருமானது திருக் கருப்பறியலூரை வணங்கி அப்பால் சென்று சேர்ந்தார். *** இயமன் வீழ இறைவன் தாளாண்மை கொண்ட இடம் திருக்கடவூர் ஆயினும் அச்செயல் திறம் ஆற்றிய இறைவன் யாண்டும் நீக்கமற நிற்றலின் ஈண்டும் இயைபுபடுத்திக் கூறினார். பிறபிற இடங்களில் இங்ஙனம் வருமாற்றிற்கும் இது ஒக்கும். இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.
இயமனை உதைத்தருளிய பெருமான் எழுந்தருளி யிருக்கும் திருக்கொகுடிக் கோயிலை அடைந்து, முதற்கண் கோபுரத் தைத் தொழுது, உட்சென்று அன்பர்கள் சூழ்ந்துவரப் பெருவிருப்பால் இறைவனைப் போற்றி, எல்லையில்லாத பெருமகிழ்ச்சி மனத்தில் பொருந்தப் பெருமானைப் போற்றிப் பாடிப் புறமே போந்து, அத் திப்பதியில் வதிந்திடும் நாள்களில், அப்புனிதராய பெருமானை நினைவதால் வரும் இன்பப் பெருக்கினை எடுத்து மொழிந்தருளும் திருப்பதிகமான 'சிம்மாந்து' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி, அத்தமிழ் மாலையை, இறைவற்குச் சார்த்தி, அங்கு இருந்திடுங் காலத்தில், *** திருக்கருப்பறியலூர் - ஊர்ப் பெயர். கொகுடிக் கோயில் - கோயிலின் பெயர். கொகுடி - முல்லை. முல்லையினை உடைய கோயில். இப்பெருமானின் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது. அங்குத் தங்கியிருந்த நாள்களில் அருளிய பதிகம் 'சிம்மாந்து' எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 30). 'எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய வாறே' எனவரும் பதிகக் குறிப்பே ஈண்டு விளக்கப் பெறுகின்றது.
நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் விரும்பி உறைகின்ற திருக்கருப்பறியலூரைத் தொழுது, வணங்கிப் பின்னர் அங்கிருந்து நீங்கிச் சென்று, மீன்கள் பாய்ந்து திரியும் மண்ணி ஆற்றின் வளமுடைய திருப்பழமண்ணிப் படிக்கரையை அடைந்து, உமையொரு கூறராய் பெருமானின் திருவடிகளைப் பணிந்து போற்றுபவர், எண்ணற்கரிய புகழமைந்த பதிகமாய 'முன்னவன்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றிப் பின்னர் திருவாழ்கொளிப்புத்தூர் என்னும் கோயிற்குச் செல்லாது செல்கின் றவர், அத்திருப்பதியை நினைந்தளவில், மீண்டு அங்குச் சென்று, 'தலைக்கலன்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் போற்றியவாறு உட்சென்றார். *** 'முன்னவன்' எனத் தொடங்கும் திருப்பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 22). 'தலைக்கலன்' எனத் தொடங் கும் திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 57).
சென்றவர் திருவாழ்கொளிப்புத்தூரில் வீற்றிருக் கும் தேவர் பெருமானாரின் திருக்கோயில் வாயிலைச் சார்ந்து, உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறியத் தாழ்ந்து, உள்ளாகச் சென்று, பணிந்து, அன்பினால் மலையரசன் மகளாராய உமையம்மையாரை இடமருங்கில் கொண்ட சிவபெருமானை வணங்கிப் போற்றிப் பாடி வெளியே போந்து, அங்குத் தங்கி, பின்னர் அழகும் மென்மையும் உடைய கரும்பின் வயல் நிறைந்த வாழ்கொளிப்புத்தூரை விடுத்து நீங்கி, திருக்கானாட்டு முள்ளூரைச் சேர்ந்த பொழுது, *** இறைவனின் திருமுன்பு அருளிய பதிகம் கிடைத்திலது.
திருக்கானாட்டு முள்ளூரைச் சாரும்பொழுது கண்ணுதற் பெருமான் அவர் எதிரே தோன்றிக் காட்சி கொடுத்தருளக் கண்டு போற்றுவார், தூயதாய அன்றலர்ந்த மெல்லிய மலராகும் கொன்றை மாலையைச் சடைமீது அணிந்த பெருமானாரது இரு திருவடி மலர்களையும் நேரில் கண்டு தொழுதேன் எனும் கருத் தமைந்த, விண்ணுலகத்தையும் ஆட்படுத்தும் 'வள்வாய்' எனத் தொடங்கும் திருப்பதிகத் தமிழ்மாலையை உள்ளம் உருகப்பாடி, பெருமானுக்கு அணிவித்து, அப்பால் தேன்நிறைந்த மலர்களை யுடைய சோலைகள் சூழ்ந்த திருஎதிர்கொள்பாடியைச் சென்று சேர்வாராய், *** 'வள்வாய்' எனத் தொடங்கும் பதிகம் கொல்லிக் கௌவாணப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 40).
சேர்ந்திடும்பொழுது, எத்திசையும் தொழுது போற்றி 'மத்தயானை' எனத் தொடங்கி, திருஎதிர்கொள்பாடியை அடைவோம் என்னும் கருத்தினை நிலைகொள்ளுமாறு வைத்திடும் திருவுடைய பதிகத்தைப் பாடி வந்து, செல்வமிகுந்த செழுமையான கோயிலினை வணங்கி, அங்குச் சில நாள்கள் தங்கி அருள்பெற்று, திருவேள்விக்குடியைச் சென்றடைந்து, வீடுபேற்றைத் தருகின்ற பெருமானைத் திருத்துருத்தி என்னும் பதியும் சேர்ந்திட 'மூப்ப தில்லை' எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடியருளி அங்கிருந் தருளினார். *** இப்பதிகளில் அருளிய பதிகங்கள்: 1. திருஎதிர்கொள்பாடி: மத்தயானை - இந்தளம் (தி. 7 ப. 7)
அவ்விடத்து, இறைவன் தன் திருமணக் கோலத் தைக் காட்டியருளியதை நம்பியாரூரர் வணங்கி, மிக்கெழும் உள்ளத் துடன் போற்றி செய்து, தவத்தைப் பெருக்கிக் கொண்ட தொண்டர்கள் தம்மைச் சூழ்ந்து வர, அங்கிருந்தும் நீங்கியருளி, தம்மிடத்து அன்பு கொள்ள வைத்து ஆட்கொண்டருளிய பெருமான் வீற்றிருக்கும் கோயில்கள் பலவற்றையும் வணங்கிச் சென்று, *** மன்னும் தானங்கள் என்பன திருத்துருத்திக்கும் திருவா ரூருக்கும் இடைப்பட்ட பதிகள்: வரும் பாடலிற் காண்க. இப்பாடலின் முன்னிரண்டு அடிகளின் கருத்து இதன் முதற்பாடலாலும், பின்னி ரண்டு அடிகளின் கருத்து வரும் பாடலாலும் நன்கு விளங்குதலின் இப் பாடல் இடைச்செருகல் ஆகலாம் என ஐயுறுவர் சிவக்கவிமணியார்.
குறைவுபடாத பேரன்பு கொண்ட திருத்தொண்டர் களுடன் கூடிச் சென்று நஞ்சு விளங்கும் கறையுடைய கழுத்துடன் பொலியும் சிவபெருமானின் இடங்கள் பலவும் நயப்புடன் போற்றி, மேகங்கள் மேவும் சோலைகள் சூழ்ந்ததும், மலர்ப் பொய்கைகள் பல புறத்தே சூழந்ததும், செஞ்சாலி நெல் விளையும் வயல்கள் பல சிறந் திருப்பதுமான மருத நில வளம் மிக்க திருவாரூரைச் சென்றடைந்தார். *** இடம் பலவும் என்பன திருவழுந்தூர், திருவழுவூர், மயிலாடுதுறை, திருத்திலதைப்பதிமுற்றம், திருமீயச்சூர், பேரளம், திருஅம்பர்மாகாளம், அம்பர்பெருந்திருக்கோயில், திருக்கொண்டீச் சரம், திருவிற்குடி, திருப்பள்ளியின் முக்கூடல் முதலாயினவாகலாம்.
செல்வம் மிக்கு விளங்கும் திருவாரூரில், தேவர் களும் முனிவர்களும் நெருங்கிச் சூழும் கோபுரத்தைப் பணிந்து, வணங்கி, உட்புகுந்து, அங்கு அமர்ந்தருளும் பெருமானிடத்து, எல்லையில்லாத காதல் மிகுந்திட, கும்பிட எடுத்த மலர்க் கையினைக் குவித்து, பெருகும் திருத்தொண்டருடன் சிவபிரான் திருமுன்பாகச் சென்று சேர்ந்தார்.
குறிப்புரை:

எஞ்ஞான்றும் அழியாத முதலாகி, நடுவாகி, முடிதலும் இல்லாத ஆனேற்றுக் கொடியையுடைய சிவபெருமானைத் திருமூலட்டானத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமானை, ஒழியாத பெருங்காதலுடன் வணங்கி, அருள்பெற்று, வெளியே வந்தருளிக் குறைவிலாத புகழுடைய பரவையாரது திருமாளிகையைச் சென்று சேர்ந்தார். *** முதலும் நடுவும் முடிவும் இல்லாதது இறைவயத்ததாய நிலை. 'முந்திய முதல் நடு இறுதியுமானாய்' என்பது உலகைச் செயல் படுத்தும் நிலையது. ஆதலின், இவ்வாறு வரும் திருவாக்குக்கள் முரணாகாமை காண்க.
நம்பிகள் மாளிகை வருதலும், மிக்க பெரு விருப்புடன் அழகிய கூந்தலையுடைய பெண்கள் பலரும் போற்ற, தாமரை மலர் போன்ற கண்களையும், செங்கனி போன்ற வாயினை யும் உடைய பரவையார் எதிர்வந்து, திருவடிகளில் பணிந்தருளி, 'எங்களையும் நினைந்து அருளிற்று' என மொழிந்திடலும், நம்பியாரூ ரரும் அவர்களுக்கு இனிய அருள் புரிந்து, பெண்களில் நல்லாராய பரவையாருடன் மகிழ்ந்து தங்கியிருக்கும் நாள்களில், *** இறைவனையும், அடியவர்களையும் இடையறாது நினைந்தருளும் திருவுள்ளத்தில், எங்களையும் நினைந்தருளிற்று என அருளியது, நீண்ட கால எல்லை தம்மைப் பிரிந்திருந்த குறிப்புத் தோன்றவாம். இக்கால எல்லைதாமும் பெரிதும் நீட்டித்ததன்று.
ஒருநாள் பரவையாரை நம்பிகள் நோக்கியருளி, உயிர்கட்குத் தலைவராய திருமுதுகுன்றத்துப் பெருமானார், நமக்கு வழங்கிய நல்ல நிதியமாகிய பொன்னின் குவியலை எல்லாம் அவர்தம் திருவருளின்படி மணிமுத்தாற்றில் புக விடுத்தோம், நம் துணைவராய திருவாரூர்ப் பெருமானின் கோயிலின் மேற்குப் புறத்தே உள்ள கமலாலயக் குளத்தில் அவரது அருளால் அதனை எடுத்து உனக்குத் தருவதற்கு, நீ என்னுடன் வருவாய் எனப் புகலுதலும், *** புக - அவ்வாற்றிலிருந்து நம் குளத்திற் புக.
அதுகேட்டுப் புன்சிரிப்புடன் மின்னலையொத்த இடையையுடைய பரவையார், ஈதென்ன அதிசயம்! என்றலும், உண் மைப் பொருளினை உணர்ந்த நம்பிகளும், 'நல்ல நெற்றியையுடைய பரவையே! என்னுடைய பெருமானின் அருளால் அக்குளத்தில் பொன் முழுவதையும் எடுத்துத் தருவது பொய்யாகாது! என்று கூறியருளுதலும்,
குறிப்புரை:

அதுகேட்ட பரவையாரும் அவருடன் வர, அவ்வம்மையின் ஒப்பற்ற துணைவராகிய நம்பிகள், அளவுகடந்த விருப்பத்துடன் திருவாரூர்ப் பூங்கோயிலில் அமர்ந்தருளும் முன் னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளாய பெருமானை உட்புகுந்து வணங்கி, மேலோங்கிய கோயில் மாளிகையை வலமாக வந்து, உடனாக மேற்குப் புறத்ததாக விளங்கிடும் திருக்குளத்திற்கு வந்துற்றார். *** இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
பின்பு அந்தக் குளத்தின் வடகிழக்குக் கரையின் மேலாக வந்தருளி, முழுமையான நல்ல பல அணிகளை அணிந்த பரவையாரை அங்கு நிறுத்திப் பின்னர் திருமுனைப்பாடி என்னும் நாட்டைத் தமக்குப் பிறப்பிடமாக உடைய நம்பிகள், தொகுதியாக நீண்டு விளங்கும் சடையையுடைய பெருமானைக் கைதொழுது, குளத்துள் இறங்கி, அன்றைய நாளில் பொன்னைப் போட்டு எடுப்பார் போன்று, அங்குப் பொற்குவியலைப் பெறத் தண்ணீரில் தடவுதலும்,
குறிப்புரை:

நீற்றினால் அழகு பொலியும் திருமேனியையுடைய பெருமானும், அதுபொழுது சுந்தரரது திருப்பாட்டை விரும்பிக் கேட்பதொரு திருவிளையாட்டைச் செய்வாராய், சிறந்த மாற்றுடைய செம்பொன்னைக் குளத்தில் வருவியாது மறைத்து அருளலும், அது கண்டு கரையில் நின்ற வளையல் அணிந்த பரவையாரும், நம்பிகளை நோக்கி, 'ஆற்றில் இட்டுக் குளத்தில் தேடும் தலைவரே! இறைவனின் இன்னருள் இதுதானோ?' எனக் கூறலும், தனித்தொண்டராம் நம்பிகள், *** ஆற்றில் இட்டுக் குளத்தில் தேடுவீர் என்றது நகைக் குறிப்புப்பட நின்றது. அருளிதுவோ என்றது உம் அருளிதுவோ என்பதன்றி இறைவன் உமக்கு நல்கிய அருள் இதுவோ என்னும் குறிப்பும்பட நின்றது.
பெருமானே! முன்னர் வானொலி வழி வழங்கியவாறே, அழகு விளங்கும் மலர்களைச் சூடிய கூந்தலுடைய பரவையினது சிவந்த வாயில் இகழ்ச்சிக் குறிப்புத் தோன்றாதவாறு பொன்னினைத் தந்தருளும் என்று, மின்னலையொத்த ஒளியை யுடைய நூல் அணிந்த மார்பினையுடைய சுந்தரரும், முதுகுன்றில் அமர்ந்த இறைவரை உளங்கொண்டு 'பொன்செய்த மேனியினீர்' எனத் தொடங்கும் பதிகத்தைப் போற்றிப் பாடி, *** 'பொன்செய்த மேனியினீர்' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 25).
முழுவதும் தேவர் அறிய, நீர் திருமுதுகுன்றில் தந்தபொருளை, மிகவும் உடன்பெறாது போன தளர்ச்சியினால் வரும் துன்பமாம் அக் கொடுமையை, இப் பரவை முன்னாகக் கொடுத்தருளும் என மொழிகின்ற அத்திருப்பாட்டைப் பாடியருளலும் பெருமான் எட்டாவது திருப்பாட்டுப் பாடும்வரை பொன் காட்டாது ஒழிந்தருளப் பின்னும் போற்றுவாராய், குறிப்புரை
எம்பெருமானே! 'உம்மை எக்காலமும் ஏத்தாது இருந்தறியேன்' எனும் கருத்தமைவுடைய திருப்பாட்டில், எவ்வுலகி னையும் துன்புறாது அம்பலத்துள் நிறைந்து காத்து ஆடுகின்ற கண் ணுதற் பெருமானையே நினைந்து உருகி, கூத்தா! பொன்னினைத் தந்தருள்வாய்! இப்பரவை முன்பாக என்று, பற்றுக்களை எல்லாம் அறுத்தெரிந்த பெரியோர்களும் தொடர்ந்து பற்றுதற்கரிய நெறி நின்ற ஆரூரர் போற்றுதலும், *** 'ஏத்தாதிருந்தறியேன்' எனும் பாடல் இப்பதிகத்து வரும் ஒன்பதாவது பாடலாகும். இப்பாடலை எடுத்துமொழிந்தார், பொன்வரப் பெற்ற அருட்குறிப்புடைமையின்.
கொத்துக்களாய் விரிந்த கொன்றைமாலையை முடிமீது சூடியவரும், எஞ்ஞான்றும் திருக்கூத்தியற்றுபவருமான இறைவனின் திருவருளால், அப்பொழுது குளத்தின்கண் வந்த பொன்னின் திரளினை எடுத்து, வரன்முறையால் கரையில் சேர்த் திடலும், விண்ணிலிருந்து மலர்மழை பொழிந்து தரையில் வழிந்ததும், இதனைக் கண்ட நிலவுலகில் உள்ளோர் யாவரும் இவ்வதிசயம் இருந்தவாறு என்னே! இறைவனின் வியத்தகு கருணைப் பெருக்கை யார் பெறுவார்? எனப் போற்றித் தொழுதார்கள். *** இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.
உலகவர் வியக்குமாறு வந்த நல்ல பொற்குவியலில் ஒரு துண்டை எடுத்துக் கொண்டு முன்னர் முத்தாற்றில் இட்டபோது மூலமான பொன் இதுவெனக் கொண்டு வந்த அவ்வாணிப் பொன் னின் இணையாக இப்பொன்னினையும் உரைத்துப் பார்த்த பொழுது, நீலகண்டப் பெருமானின் அருளால் மாற்றுக் குறைந்து இருக்கப் பின்னரும், நெடிய திருமாலும் நான்முகனும் காணமுடியாத திருவடி களை வன்றொண்டர் போற்றினார். *** ஆணி - உரைத்துப் பார்த்தற்காக வெட்டிக் கொண்ட துண்டு. இதுபொழுது வழுத்திய பதிகம் கிடைத்திலது.
மீண்டும் அவர் போற்றி வணங்குதலும், மெய்யான அன்பர்களது அன்பில் வருகின்ற பாட்டினை மகிழ்வுடன் ஏற்றுக் கூத்தினையும் மகிழ்ந்து புரிகின்ற பெருமான், தாம் கொடுத்த பொன் னில் குறைவெய்திய அக்குறைபாடுகள் முழுமையாக நீங்க ஒப்பற்ற செம்பொன் முழுவதையும் ஒருமா எடையும் குறையாமல் காட்டுத லும், அதனை மகிழ்ந்து எடுத்துக் கொண்டு கரை ஏறினார். *** ஒருமா - மிகச் சிறிய அளவு; இருபதில் ஒருபங்கு (1/20 = 0. 05) கொண்ட அளவென்பர்.
கரையில் ஏறிப் பரவையாருடன் அப்பொன் முழுமையையும் நிரல்பட ஆள்களின் தலைமேல் ஏற்றி நெடுநிலை களையுடைய மாளிகையில் போகுமாறு செல்லவிடுத்து, அலைகள் மிகும் நீருடைய கங்கையைச் சடைமேல் உடைய திருமூலட்டானத்துப் பெருமானின் நறுமணம் பொருந்திய மலரடிகளைத் தொழுது பின் திருவீதியினில் எழுந்தருளி வந்தனர். ***
திருவீதியில் வந்த நறுமணமுடைய மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய நாவலூர்த் தலைவராய நாவன்மை யையுடைய நம்பிகளும், திருவுடைய தம் மாளிகையில் உட்புக, நிறையுடைய மங்கல வாழ்த்தினைப் போற்றி செய்யும் அளவிறந்த பெருமக்களின் ஓசை சிறந்தெழ, சிந்தை நிறைந்த மகிழ்ச்சியுடன் அழகிய அணிகளை அணிந்த அம்மையாருடன் அங்கு இருந்தருளினார்.
குறிப்புரை:

அழகிய திருவாரூரில், முத்துமணி போலும் திரண் டிருக்கும் கறையான் புற்றின்மீது அமர்ந்தருளும் பரம்பொருளாய பெருமானைப் பணிந்துவரும் நம்பிகள், ஒருநாள், பெருமானின் கருணையைப் பாராட்டும் திருப்பதிகம் ஒன்றைத் தமது உள்ளத்துத் தணியாது எழுகின்ற மகிழ்ச்சி தலைசிறந்து மேற்பட, அடியாருடன் மகிழ்ந்து, உயிர்கள் முடிவாகத் துணிந்து தெளிதற்குரிய பெருமானின் திருவருள் திறத்தினைத் தனித்தனியாக வினவும் முகமாகத் தொழுதும் ஆடியும் பாடிடுவார்,
குறிப்புரை:

பண்ணிறைந்த வகையால், 'பாறுதாங்கி' என எடுத் தருளி, உள்நிறைந்த மனக்களிப்பால் உடல் மேல் மயிர்க்கூச் செறிய வும், கண்களில் நிறைகின்ற நீர் பொழிந்திடவும் கரைகடந்த ஆனந்தம் கருத்தில் நிறைந்தவாறு ஏத்தி மகிழ்ந்து இன்புற்றார். *** வினாவுரையாகப் பாடியருளிய 'பாறுதாங்கிய' (தி. 7 ப. 33) எனத் தொடங்கும் பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருக்கடைக்காப்பில் இதுகாறும் தாம் கேட்ட வினாக் களுக்கு விடை தருமாறு 'பத்தர்காள்! பணிந்தேத்தினேன் பணியீர்' என வேண்டி நிறைவு செய்துள்ளார்.
இன்புற்று அங்கு அமர்கின்ற காலத்தில், முடிவிலாத அரிய நான்மறைகளும் போற்றும் வலிமையாய புற்றின் மீதுள்ள பாம்பணிந்த அரசனார் திருவடிகளைப் பணிந்து, அருள்பெற்று, அன்பு கொண்ட காதலுடன் அளவிறந்த பிற பதிகளுக்கும் பொன் னின் ஒளி தாழ்ந்திட மிளிரும் சடையுடைய பெருமானைத் தொழுதி டப் போவார்,
குறிப்புரை:

தமக்குப் பணிபுரிகின்ற ஏவலர்களும் உடன் வந்திட, அருகில் அமைந்திருக்கின்ற கோயில்கள் தோறும் சென்று, அத்திருப்பதிகளில் எல்லாம் யானைத் தோலினைப் போர்த்த பெருமா னின் திருவடிகளைத் தொழுது, மகிழ்ந்து, கும்பிட்டு, குற்றம் அற்ற பெருந்தொண்டராய சுந்தரர், திருநள்ளாறு என்னும் கோயிலினை வணங்குதற்கு, இவர்பால் அன்புற்ற அடியார்கள் அங்கிருப்பார் வந்து எதிர்கொள்ள, உள்ளே புகுந்து சென்றார். *** பாங்கு அமைந்த பதிகள் என்பன திருவிளமர், திருப்பள் ளியின்முக்கடல் முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.
வானளாவிய அக்கோபுரத்தைப் பணிந்து, கைகளை உச்சிமேற் குவித்து, உட்புகுந்தருளி, பெருமானுடைய கோயிலினை வலம்செய்து, உள்ளத்துப் பெருகும் பேரன்புடன் என்றும் அங்கு அமர்ந்தருளும் திருநள்ளாற்றுப் பெருமானின் செந்தாமரை மலர் போலும் சேவடியின் கீழாக, நிலத்தில் விழுந்து வணங்கினார். ***
அழகிய நெற்றிக்கண்ணையுடைய இறைவனை அத்திருப்பதியில் பணிந்து போற்றித் திருவருள் முன்னிற்கத் தொழுது நீங்கிப் போய், மேகங்கள் தவழும் அழகிய மாடங்கள் நிரம்பிய திருக்கடவூர் என்னும் திருப்பதியை வந்தடைந்து, பணிந்து, இளம் பிறை மலரும் சடைமுடியையுடைய பெருமானது திருமயானம் என்னும் திருப்பதியையும் பணிந்து, பொங்கும் இசையுடைய பதிக மான 'மருவார் கொன்றை' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் போற்றி செய்து, *** இத்திருப்பதிகளில் அருளிய பதிகங்கள்:1. திருநள்ளாறு: செம்பொன்மேனி - தக்கேசி (தி. 7 ப. 68)2. திருக்கடவூர் மயானம்: மருவார் கொன்றை - பழம்பஞ்சுரம் (தி. 7 ப. 53)
திருக்கடவூர் வீரட்டானத்து அமர்ந்தருளும் தேவாதி தேவனது சினம் மிக்க இயமனின் வீரத்தைத் தொலைத்த திருவடிகளைப் பணிந்து, 'பொடியார் மேனியனே' எனத் தொடங்கும் கசிந்துருகும் தமிழ் மாலையைப் பாடிப் போற்றி வணங்கி, அப்பால் மேரு மலையை வளைத்த பெரு வீரராய சிவபெருமான் அமர்ந்து அருளும் திருவலம்புரம் என்னும் திருப்பதிக்குப் பெருகிய ஆர்வத் தோடும் சென்றார். *** 'பொடியார் மேனியனே' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 28).
மலையை ஒத்த மதில் சூழ்ந்த திருவலம்புரம் என்னும் திருப்பதியில் அமர்ந்தருளும் பெருமானது திருவடிகளை வணங்கிச் சிறந்த ஓசையுடைய திருப்பதிகமான 'எனக்கினி' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடிப் போற்றி, அப்பால் சென்று, சங்குகளின் நிரையான இயங்களோடு, அலைத்துளிகளான நறுமணப் புகை யையும், ஒன்பான் மணிகளான ஒளியையும், முத்துக்களாகிய வெண் மையான மலர்களையும் ஏற்று, அலைகளாகிய திருக்கைகளால் போற்றி வணங்கும் கடல் சூழ்ந்த திருச்சாய்க்காடு என்னும் திருப் பதிக்கு வந்து சேர்ந்தார். *** 'எனக்கினி' எனத் தொடங்கும் பதிகம் காந்தாரப் பண் ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 72). துமித் தூலம் - அனைத்துளிகளால் ஆன தூபம்.
திருச்சாய்க்காடு என்னும் திருப்பதிக்குச் சென்று சேர்ந்து, தேவர் தலைவரான பெருமானைப் பணிந்து, பாடலாக அலரும் செந்தமிழ் மாலைத் திருப்பதிகத்தைப் பாடி, அப்பால் சென்று, பகைவருடைய முப்புரங்களையும் எரித்த பெருமானின் திருவெண் காடு என்னும் திருப்பதிக்குச் சென்று பணிந்து போற்றி, நாவன்மை யுடைய புலவர்களுக்கு என்றும் காவலராய நாவலூரர் திருநனிபள் ளித் திருநகரிடத்துச் சென்றார். குறிப்புரை
திருநனிபள்ளியில் அமர்ந்தருளும் சிவபெருமா னின் திருவடிகளை வணங்கி நல்ல தமிழினால் தூய்மையும், இனிமை யும் விரவிய தமிழ்மாலை தொடுத்து அணிவித்துத் திருச்செம்பொன் பள்ளி முதலாக உள்ள குளிர்ந்த இளம் பிறையை அணிந்த சடையை யுடைய பெருமானது திருப்பதிகள் பலவும் பணிந்து சென்று, ஒப்பற்ற ஆனேற்றின் மீது இவர்ந்தருளும் பெருமானது திருநின்றியூர் என் னும் திருப்பதியைச் சேர்ந்தார். *** திருநனிபள்ளியில் அருளிய பதிகம் 'ஆதியன்'(தி. 7 ப. 97) எனத் தொடங்கும் பஞ்சமப் பண்ணில் அமைந்த பதிகமாகும். திருச்செம்பொன்பள்ளி முதலான பதிபலவும் என்பன, திருப்பறியலூர், திருவிளநகர், திருமயிலாடுதுறை, திருக்கஞ்சாறு முதலாயினவாக லாம் என்பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில.
திருநின்றியூரில் வீற்றிருந்தருளும் பெருமானாரை உட்புகுந்து அன்பினால் வணங்கி, இறைவனுடன் ஒன்றிய அன்பு உள்ளத்தை உருக்கத் தமிழ் மறையைப் பாடும் அவர், ஆளுடைய அரசர், என்றும் உலகம் இடர் நீங்கப் பாடியருளியன நாலாயிரத்துத் தொள்ளாயிரம் (4,900) பதிகங்களாகும் எனும் வரலாற்றை, அன்று தம்முடைய பதிகத்தில் வைத்துச் சிறப்பித்து அருள் நிறைந்த சொல்லு டைய திருப்பதிகம் பாடினார். *** திருநின்றியூரில் அருளிய பதிகம் 'திருவும் வண்மை யும்'(தி. 7 ப. 65) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகமாகும். இப்பதிகத்தில் வரும் இரண்டாவது பாடலில், 'இணை கொள் ஏழெழு நூறு இரும்பனுவல் ஈன்றவன் திருநாவினுக் கரையன்' என அருளப் பெற்ற குறிப்பே சேக்கிழார் பெருமானால் ஈண்டுக் குறிக்கப்பட்டுள்ளது. 7 x 700 = 4,900 பதிகங்கள். 'பதிகம் ஏழெழு நூறு பகரு மாகவியோகி' (தி. 11 திருநாவுக். பா. 7) என நம்பியாண் டார் நம்பிகளும் இது குறித்துப் போற்றுவர்.
அப்பதியில் அன்பர்களுடன் தங்கி அப்பால் செல்பவர், அகன்ற இந்நிலவுலகில் சொலற்கரிய புகழுடைய திருநீடூர் என்னும் திருப்பதியைப் பணியாது செல்கின்ற அமையத்தில், தம்மிடத் துள்ள ஒப்பரிய அருள்வயப்பட்ட உணர்வினால் அத்திருப்பதியை நினைந்தருளித் தொழுகின்றவர், உண்மைப் பொருள் நிறைந்த வண்மையான தமிழ்மாலைத் திருப்பதிகம் பாடி மேலும் செல்லாது, மீண்டும் திருநீடூர் வருவாராயினர். *** திருநின்றியூரில் தங்கியிருந்த பொழுது அருளிய பதிகம் 'அற்றவனார்' (தி. 7 ப. 19) எனத் தொடங்கும் நட்டராகப் பண்ணில் அமைந்த பதிகமாகும்.
'மலர்கள் நிறைந்த நீர்ப் பெருக்குடைய திருநீடூரில் இருந்தருளும் பெருமானின் திருவடிகளைப் பணியாது விடலாமே' என்னும் கருத்துடைய 'ஊர்வதோர் விடை' எனத் தொடங்கும் அத் திருப்பதிகத்தைப் போர் விளங்கிய சூலப் படையை உடைய பெரு மான்மீது பாடியருளித் திருவடி பணிந்து, பணியும்தொறும் மெய் நிறைந்து சிலிர்க்கும் மயிர்க்கூச்சம் மேன்மேல் எழுந்திடப் பணிந்து அங்குத் தங்கியிருந்தருளுவார், *** 'ஊர்வதோர் விடை' எனத் தொடங்கும் பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 56).
'ஊர்வதோர் விடை' எனத் தொடங்கும் பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 56). *** திருக்கோலக்காவில் அருளிய பதிகம் 'புற்றில்வாள் அரவு' (தி. 7 ப. 62) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த தாகும். பதிகப் பாடல் தோறும் 'கோலக்காவினில் கண்டு கொண் டேனே' என வருவது கண்டு, 'எதிர்காட்சி கொடுத்தருள' என்ற வர லாற்றுப் பின்னணியை அமைத்துக் கொண்டார்.
திருஞானசம்பந்தர் தமது திருக்கைகளால் தாளமிட்டுப் பெருகும் ஆர்வத்துடன் அத்திருப்பதியை முன்னால் பாடிட, அதுகண்டு பெருமானார் திருவுள்ளமிரங்கி அவருக்குத் திருத்தாளம் வழங்கிய வரலாற்றைத் தாம் பாடிய பதிகத்து வைத்துச் சிறப்பித்துப் பொருள் சிறந்த மாலையாகும் அத்திருப்பதிகத்தை இசையுடன் பாடிப் போற்றி செய்தார். *** மேற்கூறிய பதிகத்துள் வரும் எட்டாவது பாடலில், 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மை யாளனை' என வரும் குறிப்பை முகந்தெடுத்துக் கூறும் குறிப்பு இதுவாம்.
எக்காலத்தும் மூப்படையாத முழுமுதல்வராய சிவபெருமான் அமர்ந்த முதன்மையான அத்திருக்கோலக்காவை நீங்கிக் குறைவிலாத புகழுடைய சீகாழி நகரையும் வலங்கொண்டு, விழுந்து வணங்கி, அங்குத் தோன்றிய நாவார்ந்த முத்தமிழில் வல்லுனரான திருஞானசம்பந்தரின் திருவடிகளைப் போற்றி, அப்பால் சென்று, பகைவர்களாகிய முப்புரத்தவரை எரித்த பெருமா னது திருக்குருகாவூரை அணைவார், ***
உண்ணும் வேட்கையோடு தமக்குற்ற பசியாலும் மிகவும் வருந்திப் பண்ணிசை போல இனிமையாகப் பேசும் பரவை யாரின் கணவரான நம்பியாரூரர் வரும் அமையத்தில், நீண்ட கண்ணை நெற்றியில் கொண்ட சிவபெருமான், தம் அன்பர்பால் உற்ற அன்பு சிறந்திட. அவர்தம் வேட்கையை அறிந்து, தண்ணீரும் பொதிசோறும் திருக்கையில் கொண்டு அவர் வரும் வழியாகத் தாமும் சேர்பவராய், ***
வேனிற்காலத்து வெயிலின் வெப்பத்தை நீக்குதற் காக, நறுமணம் மிக்க குளிர்ந்த மெல்லிய பாலின் சுவையையுடைய செங்கழுநீர் மலர்கள் நிறைந்த குளம்போலும் குளிர்ந்த தண்ணீர்ப் பந்தரை ஒருமருங்கு அமைத்து, மான் ஏந்திய கையுடன் விளங்கும் இறைவர், தாம் ஒரு மறைபயின்ற அந்தணராய் அருள் வேடங் கொண்டு, நம்பியாரூரர் வரும் வழியைப் பார்த்திருந்தார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
திருக்குருகாவூர் அமர்ந்தருளும் மிக இளையவராகிய பெருமான், அவர் வரும் வழியைப் பார்த்திருப்ப, திருவாரூரில் இருக்கும் தம்பிரான் தோழராகிய நம்பியாரூரர், அடியவர்களுடன் அவ்வழி வருவார், அத்தண்ணீர்ப் பந்தரிடை வந்து, அங்கிருந்த அழகுடைய அந்தணர் பெருமான்பால் தம் கருத்துச் செல்லும்படி நோக்கிச் 'சிவாயநம' எனக் கூறி அமர்ந்தார்.
குறிப்புரை:

அதுபொழுது கல்லால மரத்தின் கீழிருந்தருளும் இறைவர் அவரைப் பார்த்து, 'நீர் மிகவும் பசித்திருக்கின்றீர்' என்னிட முள்ள இப்பொதிசோற்றினைத் தருகின்றேன், காலந் தாழ்த்தலின்றி இதனை இனிதுண்டு, மணம்மிக்க குளிர்ந்த தண்ணீரும் பருகி, இளைப் புத் தீரும்' என்னலும், ***
அதுகேட்ட வன்தொண்டர்,'இம்மறை முனிவர் தரும் பொதிசோற்றை மறுத்தல் தகாது' என்று எண்ணி, அதற்கு இசைந்து பொன்னனைய நூல் அணிந்த மார்பையுடைய அவ்வந் தணர் கொடுக்கும் பொதிசோற்றினை வாங்கிச் சென்று, அடியவர்களு டன் திருவமுது செய்தருள, ***
தம்முடன் வந்த எண்ணற்ற ஏவலர் முதலிய அனைவரையும் இனிது உண்ணச் செய்து, பின் அதன் அயலே பசித்து அணைந்தார்களும் அருந்திட, உள்ளத்து நிறைந்த அரிய அமுதாகி, ஒரு காலமும் குறைவிலாது, புண்ணியப் பொருளாகும் அந்தணனார் கொடுத்த அப்பொதிசோறு பொலிந்தது. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. குறிப்புரை
எண்ணற்ற உயிர்கட்கெல்லாம் இன்பம் தந்தருளும் இறைவனாரின் இன்னருள் என விளங்கும் தண்ணீரினையும் குடித்துத் திளைத்து, உள்ளத்துப் பொங்கி வரும் மீதூர்ந்த அன்பால் பெரு மானின் திருப்பெயராய திருவைந்தெழுத்தைப் புகழ்ந்து போற்றி, அவ்விடத்து அமுதுண்ட களைப்பால் துயில்கொள்ள, அவருடன் அருகில் இருந்தவர் தாமும் உறங்கிட, கங்கையாற்றைச் சடைமீது மறைத்திருக்கும் சிவபெருமான் தாமும் தம் தோற்றத்தைத் தண்ணீர்ப் பந்தருடன் மறைந்து அருளினார். ***
சிவபெருமானிடத்து வைத்த சித்தநிலை மாறாத திருநாவலூரின் அருள் அரசரான சுந்தரர், அவ்வளவில் விழித்துத் தமக்குப் பொதிசோறு கொடுத்து அருளிய அந்தணர் பெருமானைக் காணாது, அது இறைவன் செயலாக இருந்தமையுணர்ந்து, 'இத்தனை யாமாற்றை அறிந்திலேன் எம்பெருமான்' எனப் பாட எடுத்து மெய்ம்மை விளங்கிய அத்திருப்பதிகத்தைப் பாடியவாறே திருக்குருகாவூரினைச் சென்று அடைந்தார். *** 'இத்தனை யாமாற்றை' எனத் தொடங்கும் பதிகம் நட்ட ராகப் பண்ணில் அமைந்ததாகும்(தி. 7 ப. 29) 'ஆவியைப் போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்' 'பாடுவார் பசி தீர்ப்பாய்' என இப்பதிகத்து வரும் தொடர்கள், இவ்வரலாற்றுக்கு அரணாகின்றன.
திருக்குருகாவூரில் அமர்ந்தருளும் பெருமானின் திருக்கோயிலுக்கு அருகே சென்று பொற்கோபுரத்தை வணங்கி, உட்புகுந்து உள்ளத்தெழுகின்ற காதல் பெருக, வலங்கொண்டு, திரு முன்பு வணங்கி, பருகத் தெவிட்டாத இன்னமுதான பெருமானைத் தம் கண்களால் கண்டு மகிழ்ந்தார். ***
கண்ணிற்கு இனிமை தரும் அமுதத்தைக் கையாரக் கும்பிட்டு வணங்கி, பண்ணிசை தவழும் திருப்பதிகத்தைப் பாடிப் பணிந்து போற்றி, பெருமானைத் தம் உள்ளத்தே நாடும் பெருங் காதலையுடைய சுந்தரர் வெளியே வந்து, அங்கிருந்த ஆர்வமுடைய அடியவருடன் அத்திருப்பதியில் இனிது விருப்புற்று இருந்தார். *** இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.
அந்நாள்களில், தம் பெருமானின் அருள்கூடப் பணிந்து, விடைபெற்று, அங்கிருந்து அகன்று, மின்போல் மிளிரும் செஞ்சடை முடியையுடைய பெருமான் விரும்பி அமர்ந்தருளும் இடங்கள் பலவும் வணங்கி, கற்களால் அமைந்த மதில் சூழ்ந்த திருக் கழிப்பாலைக்குச் சென்று வணங்கிப் போற்றி, அப்பால் தென்னாட்டில் சிறந்த திருநாவலூர் அரசர், திருவமைந்த திருத்தில்லைக்கு வந்து சேர்ந்தார். *** விரும்பும் இடம்பல வணங்கி என்பன திருமுல்லை வாயில், திருமயேந்திரப்பள்ளி, திருநல்லூர்ப்பெருமணம் முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். திருக்கழிப்பாலையில் அருளிய பதிகம் 'செடியேன்' (தி. 7 ப. 23) எனும் தொடக்கமுடைய நட்டராகப் பண்ணிலமைந்த பதிகமாகும்.
மேன்மேலும் சிறப்புகள் பலவும் வளர்கின்ற திருவு டைய தில்லை நகரின் திருவீதியைப் பணிந்து, உட்புகுந்து, அழகு வள ரும் பொன்னாலாய திருச்சபையில் ஆட எடுத்த திருவடிகளை வணங்கி, இந்நிலவுலகு வளர மறைகளை வளர்க்கும் தில்லை என்னும் அப்பதியதனில் பணிந்து தங்குபவர், முப்புரத்தை அழிக்கும் போரில் தலைநின்ற மேருமலையை வில்லாக உடைய பெருமானின் திருத் தினை மாநகரினைச் சென்று சேர்ந்தார். *** இதுபொழுது தில்லையில் அருளிய பதிகங்கள் கிடைத்தில.
திருத்தினை மாநகரில் வீற்றிருந்தருளும் சிவக் கொழுந்தைப் பணிந்து, அங்கிருந்தும் கூத்தியற்றும் பெருமானார் அமர்ந்தருளும் திருப்பதிகள் பலவும் வணங்கிச் சென்று, திருவருள் உறைப்பு மிகும் திருத்தொண்டர்கள் போற்றுகின்ற திருநாவலூருக்கு வரும் ஆதரவால், அப்பதியில் வீற்றிருக்கும் இறைவனைக் கை தொழச் சென்றார். *** திருத்தினை நகரில் அருளிய பதிகம் கிடைத்திலது. நிறை பதிகள் பலவணங்கி என்பன திருச்சோபுரம், திருமாணிகுழி, திருப் பல்லவனகரம், திருமுண்டீச்சுரம், திருக்குணபரஈச்சுரம், திருஅதிகை வீரட்டம், திருவாமூர், சித்தவடம், திருமணம் வந்த புத்தூர் முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.
திருநாவலூரின் அருள் அரசராய சுந்தரர், அங்கு எழுந்தருளுவதைக் கேட்டுப் பெரும் புகழுடைய அப்பதியில் உள்ளார்களும், தொண்டர்களும், 'தங்களுக்கு இன்று பெருவாழ்வு வருநாள்' என்று நகரம் முழுவதும் அணி செய்து, அவரை எதிர் கொண்டு அழைத்துச் சென்றிட, அவரும் சென்று, வலி மிகுந்த யானை யின் தோலைப் போர்த்த பெருமானின் திருவமைந்த திருக்கோயிலின் உள்ளாகச் சென்றருளினார். ***
தம்முடன் வந்த அடியவர் கூட்டம் நெருங்கி, அரகர என மொழிந்திட எழுகின்ற ஓசை மூவுலகும் சென்று ஒலித்திட, முதல்வனாரின் திருமுன்பு எய்தி, உயிரினும் சிறந்தாராய பெருமா னின் திருவடித் தாமரை வழங்கியருளும் பேரருளின் திறம் போற்றி, 'கோவலன் நான்முகன்' எனத் தொடங்கும் திருப்பதிகத்தை எடுத்துப் பாடிக் கும்பிட்டார். *** 'கோவலன் நான்முகன்' எனத் தொடங்கும் பதிகம் நட்டராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 17). இறைவன் ஆவ ணம் கொண்டு ஆட்கொள்ளவரத் தாம் வன்மைகள் பேசி வன்தொண் டர் என்பதோர் வாழ்வு பெற்றமையை இத்திருப்பதிகத்தில் பாடக் குறித்து அருளுகின்றார். நரசிங்க முனையரையர் பற்றிய குறிப்பும் இதன் உள் காணக்கிடக்கின்றது.
நலம் என்றும் பெருகிய அப்பதியில் பெருமானை விரும்பிக் கொண்ட அன்போடும் பணிந்து, குலம் பெருகும் திருத்தொண்டர் கூட்டத்தோடும் இனிதே அங்குத் தங்கி, கங்கை தங்கும் சடைமுடியையுடைய பெருமானின் திருவடிகளை வணங்கி, அருள்பெற்று, அழகு பொருந்திய முப்புரி நூலை அணிந்த மார்பினராய சுந்தரர், அப்பதியினின்றும் நீங்கிப் பிறபதிகளையும் தொழுதிடப் போவார்,
குறிப்புரை:

குளிர்ந்த நீர்வளமுடைய திருநாட்டில் ஒப்பற்ற ஆனேற்று ஊர்தியையுடைய பெருமான் மகிழ்ந்தருளும் இடங்களில் அடியவர்கள் அங்கங்கும் எதிர்கொண்டு வணங்கிடத் தொழுது சென்று, தூய ஆறுகளும், வண்டுகள் பாடும் சோலைகள் சூழ்ந்த முல்லை நிலங்களும், மலைவளம் தரும் குறிஞ்சி நிலங்களும், மருத நிலங்களுமாய பல இடங்களைக் கடந்து, எண்திசையினில் உள்ளா கியவரும் வணங்கிடும் திருக்கழுக்குன்றத்தை அடைந்தார். *** மகிழ்விடங்கள் தொழுது என்பன, திருப்புறவார்பனங் காட்டூர், திண்டீச்சுரம், திருஅச்சிறுபாக்கம், உருத்திரகோடி முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். நதிகள் - வராக நதி, பாலாறு, பெண்ணையாறு முதலியன. புறவு - இடைப்பட்ட காடுகள். திண்டிவ னம், அச்சிறுபாக்கம், செஞ்சி முதலாயின என்பர் சிவக்கவிமணியார்.
மகிழ்விடங்கள் தொழுது என்பன, திருப்புறவார்பனங் காட்டூர், திண்டீச்சுரம், திருஅச்சிறுபாக்கம், உருத்திரகோடி முதலாயின வாகலாம் என்பர் சிவக்கவிமணியார். நதிகள் - வராக நதி, பாலாறு, பெண்ணையாறு முதலியன. புறவு - இடைப்பட்ட காடுகள். திண்டிவ னம், அச்சிறுபாக்கம், செஞ்சி முதலாயின என்பர் சிவக்கவிமணியார். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின. குறிப்புரை
இவ்வாறு பாடிய அத்திருப்பதியில் இனிது தங்கி, பணிந்து, அப்பால் சென்று, பெருமானை நாடிய நல்லுணர்வோடும் திருக்கச்சூரை அடைந்து, அங்குப் பொன்னாலான பெரிய மதில்கள் சூழப்பெற்ற ஆலக்கோயிலில் அமர்ந்தருளும் அமுதாய பெருமானை உள்ளத்தில் பெருகும் உண்மையான அன்பு உருகக் கும்பிட்டு வெளியே வந்தருளினார். ***
வெளியே வந்தருளிய அப்பொழுது, திருவமுது செய்யும் பொழுதாகிட, உணவுப் பொருள்களைக் கொண்டு வந்து அமுதினைச் சமைத்துக் கொடுத்திடும் ஏவலர் அவ்விடம் வந்து சேராமையால், பெருகிய பசியின் வருத்தத்தினால், திருமுனைப்பாடி நாட்டின் பேரருளாளராய சுந்தரர், கோயில் திருவாயிலினைச் சேர்ந்த மதிலின் அருகே இருந்தருளினார்.
குறிப்புரை:

அவ்வாறு பசியுடன் இருந்த வன்தொண்டரின் பசியைத் தீர்த்திட, கச்சூர்மலைமேல் வீற்றிருக்கும், கொடிய பசிப் பிணியைத் தீர்த்தருளும் மருந்தாகிய சிவபெருமான், தமது திருக்கரத்து ஏந்திய மின்னல் போலும் ஒளிபொருந்திய வெண்தலை ஓட்டினை நீக்கி வேறு ஒரு மண் ஓட்டினைத் திருக்கையில் ஏந்தி, அவ்விடத்து வாழும் ஓர் அந்தணர் வடிவில் சென்று, அவர் திருமுகத்தை நோக்கி, அருள் கூர்ந்திடச் சொல்வாராய், ***
'உடலில் ஏற்பட்ட பசியால் மிக வருந்தி, நீவிர் இளைத்திருக்கின்றீர்; உம் பசிவருத்தம் நீங்கிட, இப்பொழுதே நான் சோற்றினை இரந்து உமக்குக் கொண்டு வருவேன்; நீவிர் அப்புறம் போகாமல் சிறிது நேரம் இங்கு அமரும்' எனச் சொல்லி, அவர் திருக்கச்சூர் என்னும் அந்நகரில் உள்ள மனைதோறும் சென்று சோறு இரப்பாராய், ***
வெண்மையான திருநீற்றின் அழகு திகழ, மார்பில் விளங்கிய நூல், ஒளியுடன் விளங்கக் கண்டவர்கள் மனம் காதலால் உருகிட, கடுமையான வெயில் மிக்க நண்பகல் பொழுதில் இடுகின்ற பிச்சைக்காகத் தாமரை யனைய திருவடிகள் நிலத்தில் பொருந்திட, வீடுகள்தொறும் புகுந்து சோறு பெற்றுக் கொண்டு வந்தவர், ***
இரந்து தாம் கொண்டு வந்த இனிய சோற்றையும், கறிவகைகளையும் எடுத்துத் 'துயர்தரும்நும் பசிதீர உண்டிடுவீர்' எனக் கொடுத்திடலும், பெருந்தகையாராய சுந்தரர் அந்தணராக வந்து அருளியவரின் பேரருளைப் போற்றி உள்ளம் நிறைகின்ற பெருங் காதலினால் எதிரே தொழுது அச்சோற்றை வாங்கியவர், குறிப்புரை
வாங்கிய அத்திருவமுதைச் சுந்தரர் தம் மேலாய தவமுடைய அடியார்களுடன் உண்டருளிப் பெருமகிழ்ச்சி கொண்டு இருப்ப, எப்பொருளினும் நீங்குதலரிய தேவராய பெருமானும், அவர் அருகே நின்றாற்போல் நின்று, அவரை அறியாது மறைந் தருளினார். *** இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.
அதுகண்டு திருநாவலூரின் மன்னராய சுந்தரரும், சிவயோகியாய அவ்வந்தணர் பெருமான் மறைந்திடத் தம் முன்பு வந்தருளிய அந்த அந்தணர், எல்லாம் வல்ல ஈசனாகும் என எண்ணிப் பேரொலியையுடைய சிலம்பு ஒலித்திட அணிந்த திருவடிகள் இந்நிலவுலகில் வருத்தமடைய, இக்கொடிய பெரும் பகற்பொழுதில் நாடி வந்தருளியது என் பொருட்டாகவன்றோ? என உள்ளம் உருகி, ***
'முதுவாய் ஓரி' எனத் தொடங்கி எப்பொருட்கும் மூலமான சிவபெருமானது பெருங்கருணை அதுவாம் இது எனும் கருத்தமைய, கண்களில் நீர் மழை அருவியென மேனியில் புது நீராகிப் பொழிய, உடல் முழுதும் மயிர்க் கூச்செறிய, அப்பதிகத்தை இசையு டன் பாடிப் போற்றி, தேனார்ந்த கொன்றை மலரை முடிமேல் சூடிய பெருமானை மகிழ்ந்து வணங்கினார். *** 'முதுவாய் ஓரி' எனத் தொடங்கும் பதிகம் கொல்லிக் கௌவாணத்தில் அமைந்த பதிகமாகும் (தி. 7 ப. 41). இவ்வரலாற் றிற்கு இப்பதிகம் அகச்சான்றாக அமைந்துள்ளது. தமக்காக உச்சிப் பொழுதில் வீடுதொறும் சென்றிரந்து வந்த பெருங்கருணையைச் சுந்தரர் பலபடக் குறித்து நன்றியுணர்வோடு போற்றி மகிழ்கின்றார். இரண்டாவது பாடலில் 'கச்சேர் அரவு ஒன்று அரையில் அசைத்துக் கழலும் கிலம்பு ஒலிக்க பலிக்கென்று உச்சம் போதா ஊர் ஊர்திரியக் கண்டால் அடியார் உருகாரே' எனவரும் பகுதி எண்ணற்குரியது.
இவ்வாறு இறைவனாரைப் போற்றி, அவர் அருள்பெற்று, உமையம்மையாரை ஒரு கூற்றில் உடைய பெருமான் மகிழ்ந்தருளும் திருப்பதிகள் பலவற்றிற்கும் ஆங்காங்குள்ள அடிய வர்கள் எதிர்கொளச் சென்று அத்திருப்பதிகளில் கோயில் கொண்டிருக் கும் முக்கட் செல்வரை நினைந்த வண்ணம் திருவடிகளை வணங்கிச் செஞ்சொற்களாலாய தமிழ்ப் பதிக மாலைகளைச் சூட்டி, மாலைப் பொழுதில் தோன்றும் செக்கர் வானம் போலும் சிவப்பு மிக்க ஒளியை யுடைய பெருமான் வீற்றிருக்கும் காஞ்சிபுரத்தின் அருகாக வந்து சேர்ந்தார். *** மங்கைபாகர் மகிழ்ந்த இடங்கள் என்பன திருக்கச்சூருக் கும், காஞ்சிபுரத்திற்கும் இடையேயுள்ள பதிகளாம். அவை திருமுக் கூடல், திருவில்வலம், திருமாகறல், திருக்குரங்கணில்முட்டம் முதலா யினவாகலாம் என்பர் சிவக்கவிமணியார்.
அதுபொழுது மதில் சூழ்ந்த காஞ்சிநகரில், வாழும் அடியவர்கள் பலரும், அன்றொரு நாள் திருவெண்ணெய் நல்லூரில், மாலும் அயனும் தொடர்வரியாராகும், வெற்றி தரும் இளைய ஆனேற் றுக் கொடியைக் கொண்டிருக்கும் பெருமானார், தாம் ஒரு வேத முதல்வராய அந்தணராய் வடிவுகொண்டு வந்து, அவையிடத்து நேர் நின்று தொடர்ந்து வழக்குரைத்துத் தடுத்தாட் கொள்ளப்பட்டவரான சுந்தரர், இன்று இங்கு வந்திடப் பேறு பெற்றோம் என்று கூறி, ***
உள்ளத்துப் பொருந்திய மகிழ்ச்சி மிகப் பெருகிட, வீதிகள் தோறும் அழகிய முத்துத் தோரணங்களை நாட்டி, ஒளிவளர் விளக்குக்கள், நிறை குடங்கள், அகிலின் நறும்புகை, கொடிகள் ஆகியவற்றை எடுத்து, செல்வம் மிகும் தம் மனைகள் தோறும் அணி செய்து, தத்தம் முன்றில்தோறும் நடனமாடுதற்கேற்ற முழவுகள் முழங்கிடத் திரளும் அடியவர்களுடன் கூடி, தம் பதியின் புறம்போந்து அவரை எதிர் கொண்டார்கள். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
இறைவனால் ஆட்கொள்ளப் பெற்ற சுந்தரர், தம்மை எதிர்கொண்ட அடியவர்கள் வணங்கத் தாமும் வணங்கி, நீண்ட மதில்களையுடைய கோபுரத்தைக் கடந்து, நிரல்பட அமைந்த மாளிகைகளின் வீதிவழியே சென்று, தம்பால் பூண்ட அன்பினால் பெருகிய வாழ்த்தொலிகளுடன் சிறந்த மங்கல இயங்களும் ஒலித்திட, நெருங்கிய தொண்டர்கள் சூழத் திருவேகாம்பரம் என்னும் கோயி லைச் சென்றடைந்தார். ***
இறைவனின் அணுக்கத் தொண்டராய சுந்தரர், சக்கரப் படையை உடைய நெடிய திருமால், நான்முகன் முதலாய தேவர்களும் சூழ நிற்கும் கோபுரம் முன்பாக, நிலத்தில் உடல் படிந்திட வணங்கி, உட்சென்று, பெருமானின் இருப்பிடத்தைச் சூழ்ந்த அழகிய பல மாளிகைகளையும் தொழுது வணங்கி, வலங்கொண்டு அழகிய பொற்கோயில் உள்ளாக வந்தார். ***
கைகளைக் கூப்பியவாறு பெருமானின் திருமுன்பு செல்பவராய ஆரூரர், கம்பையாறு பெருகிவரக் கண்டு, பெருமானின் திருமேனியின் பொருட்டு மிகப் பயந்து, நன்றாக அவரை இறுகத் தழுவிக்கொண்டிருந்த மைதீட்டி விளங்கும் நீண்ட கண்களை உடைய மலையரசன் மகளாரான ஏலவார் குழலார், என்றும் வழிபட்டு வருகின்ற செந்தாமரை மலர் போன்ற மென்மையும், நிறமும், மணமும் கொண்ட பெருமானின் திருவடிகளின் கீழாகத் திருந்திய காதலுடன் வணங்கினார். ***
கால்உற வணங்கிப் போற்றி செய்து, தன்வயம் இழந்து, விம்மி அழுது எழுந்து மெய்யன்பினால் வாழ்வு பெற்ற சிந்தையால், பெருமானைப் பாடி, மாறாத விருப்பத்துடன் வெளியே வந்து, தம்மைச் சூழ்ந்த அடியவர்களுடன் ஆரூரர் அங்குத் தங்கியிருக் கும் நாள்களில், பழமையான காஞ்சி நகரைச் சூழ்ந்து விளங்கிடும் சடையையுடைய பெருமான் திருக்கோயில்கள் பலவற்றையும் சென்று வணங்குவாராய், *** திருக்கச்சி ஏகம்பத்தில் இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது.
சிறப்பு மிக்க காஞ்சிப் பதியில் விளங்கும் திருக்காமக் கோட்டத்திற்குச் சென்று வணங்கி, கங்கையைச் சடையில் உடைய பெருமான் நிலைபெற்று வாழும் திருக்கச்சிமேற்றளி என்னும் கோயிலை அடைந்து ஆராத அன்பினால், பெருமானைப் பணிந்து போற் றும் வகையில் இந்நிலவுலகில் அளவற்ற பெருமையுடைய 'நுந்தா வொண் சுடரே' எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி மகிழ்ந்து போற்றினார். *** 'நொந்தா வொண்சுடரே' எனத் தொடங்கும் பதிகம் நட்ட ராகப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 21). இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
திருவோணகாந்தன்தளியில் எழுந்தருளி இருக் கும் இறைவரை, உரிமையோடு விரும்பி ஏற்ற தோழமைத் திறம் பற்றிப் பெருகிவரும் அடிமைத் திறத்தினைக் கூறி, காசுடன் பொன்னை விரும்பி, 'நெய்யும் பாலும்' எனத் தொடங்கும் இசைக் கலைகளின் தன்மை விளங்குகின்ற அழகிய திருப்பதிகத்தினை எடுத்துப் போற்றி அளவற்ற செல்வங்களைப் பெற்று இனிதாக இருந்தார். *** ஓணன், காந்தன் என்ற இரு அசுரர்களாலும் வழிபடப் பெற்றதால் ஓணகாந்தன்தளி எனப் பெயர் பெற்றது. 'நெய்யும் பாலும்' எனத் தொடங்கும் பதிகம், (தி. 7 ப. 5) இந்தளப் பண்ணில் அமைந்த தாகும். 'கையில் ஒன்றும் காணம் இல்லை'என வரும் குறிப்பால், இது பொன் வேண்டியருளிய பதிகமாதல் தெரியலாம். 'உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம்; இல்லை என்னீர் உண்டும் என்னீர்; ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்; வாரமாகித் திருவடிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே' என வரும் முறைப்பாடுகள் இவர்தம் தோழமைத் திறத்தை விளக்கலின், 'உரிமையுடன் பேணியமைந்த தோழமையால்' பாடி அருளியது எனச் சேக்கிழார் குறித்தருளுவாராயினர்.
அப்பதியில் விரும்பித் தங்கியிருந்தவராய நம்பிகள், திருக்கச்சி அனேகதங்காவதத்தினைச் சேர்ந்து, திருக்கோயி லின் உள்ளே அணைந்து, சிவந்த கண்களையுடைய ஆனேற்றை உடையாராகிய இறைவரை வணங்கித் 'தேன்நெய் புரிந்து' எனத் தொடங்கும் திருப்பதிகத்தினைப் பாடியருளி, வணங்கி, இறைவன் எழுந்தருளியிருக்கும் பிற பதிகளையும் மேன்மேலும் மிகும் பெரு விருப்புடன் சென்று போற்றி, இடைவிடாத நினைவுடனே அக்கச்சித் திருப்பதியில் பொருந்தவிருக்கும் நாள்களில், *** 'தேன்நெய்' (தி. 7 ப. 5) எனத் தொடங்கும் பதிகம், இந் தளப் பண்ணில் அமைந்ததாகும். பிற தானங்கள் என்பன, காஞ்சியில் உள்ளனவும், அதனைச் சூழ்ந்து உள்ளனவுமாய திருக்கோயில்க ளாம். திருக்குறிப்புத்தொண்டர் புராணத்து (தி. 12 பு. 19), இக் கோயில்கள் பலவும் குறித்துக் காட்டப் பெற்றுள்ளன. ஆண்டுக் காண்க.
பாடுதற்கு இசைகின்ற பணிசெய்யப் பெற்றதனால், அம்மையார் தழுவக் குழைந்து காட்டிய திருவேகம்பரது அருட் கூத்தாடும் திருவடிகளைப் போற்றிப் பிரியாது விரும்பி எழுந்தருளி இருக்கின்ற நம்பியாரூரர், மிகப் பழமையான அக்கச்சிமூதூரின் புறத் திலே நிலவுகின்ற பதிகள் பலவற்றையும் தொழுது விருப்பத்தினால் சென்று, மாடங்கள் நெருங்கி விளங்கும் வன்பார்த்தான்பனங்காட் டூரை வந்து அடைந்தார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
செல்வம் நிறைந்த திருப்பனங்காட்டூரில் எழுந் தருளியிருக்கும் சிவந்த பொன்போன்ற ஒளியையுடைய செழுஞ்சுட ராயும், பிறவித் துன்பத்தினை அறுக்கும் அரிய மருந்தாயும் இருக்கும் இறைவரைப் பணிந்து, அன்பு மேலீட்டால் பொழியும் கண்ணீர் பெருக நின்று, 'விடையின் மேல் வருவானை' எனத் தொடங்கும் வளப்பம் உடைய பதிகத்தை நல்ல இசை பொருந்தப் பாடிப் புறம் போந்து சேர்வாராய், *** 'விடையின் மேல் வருவானை' எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 86).
அதன்பின், நிலைபெற்ற திருமாற்பேறு என்னும் திருப்பதியை அடைந்து வணங்கிப் போற்றி, திருவல்லம் அடைந்து வணங்கிப் போய், மேற்குப் புறமாக உள்ள கற்றையாய சடைமுடியை யுடைய பெருமான் வீற்றிருக்கும் இடங்கள் பலவற்றையும் விருப் புடன் வணங்கிச் சென்ற பெரிய தொண்டரான நம்பிகள், முடியின் மீது முகில் படியும் அகன்ற சிகரங்களுடைய திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தார். *** இப்பதிகளில் அருளிய பதிகங்கள் கிடைத்தில. திருவல் லத்திற்கு மேற்குப்புறமாக உள்ள பதிகள், திருக்கரபுரம் முதலாயின வாகலாம்.
தடுத்தற்கரிய பெருங்காதல் தலைநின்று விளங்கும் கண்ணப்ப நாயனாரது துன்பத்தைக் களைந்து ஆட்கொண்டருளும் இறைவர், மகிழ்ந்து வீற்றிருக்கும் திருக்காளத்தி மலையினைச் சேரச் சென்று பணிந்து, அப்பெருமான் திருவருள் மீதூர அம்மலை மீது ஏறி, அன்பெனும் ஆறு கரையது புரளக் காளத்தி அப்பரின் திருமுன்பாகச் சென்று, அம்மலைமேல் என்றும் பிறவிப் பிணிக்கு மருந்தாக இருந் தருளும் பெருமானை வணங்கினார். ***
வணங்கி, உள்ளம் களிகூர்ந்திட மகிழ்ந்து போற்றி, இனிமை மிகுந்த இசையால், 'செண்டாடும் விடையாய்' எனத் தொடங் கிடும் திருப்பதிகத்தைப் பாடி, அன்பினால் கண்ணப்ப நாயனாரது மணம் நிறைந்து விளங்கும் தாமரை மலர் போலும் சிவந்த திருவடிகளைப் பணிந்து, பெரும்பேறு பெற்று, வெளியே வந்து விளங்கும் அத்திருக் காளத்தியில் தம்முடன் இணங்கிய அடியாருடன் பொருந்தி இன்புற்று இருக்கும் அந்நாள்களில், குறிப்புரை
வடபுலத்துள்ள நிலைபெற்ற திருப்பருப்பதம், திருக் கேதாரம் ஆகிய மலைப் பதிகளையும், இவை முதலாக உள்ள சிவ பெருமான் உவந்து உறைகின்ற பிற இடங்களையும், திருக்காளத் தியில் இருந்தவாறே வணங்கி, அத்திருப்பதிகளில் சென்று கூத்தியற் றும் திருவடிகளை உடைய பெருமானை நேரில் சென்று வணங்கினாற் போல் உள்ளம் மகிழ்ந்து, உறைப்புடைய திருவுள்ளத்தால், அப்பதி களை உளம் கொண்ட நிலையில் திருப்பதிகங்கள் பாடியருளினார். *** திருக்கேதாரம் முதலாகவுள்ள திருப்பதிகளாவன, திருக்கயிலாயம், திருஅனேகதங்காவதம், திருஇந்திர நீலப்பருப்பதம் முதலாயினவாகலாம். ஆளுடைய பிள்ளையார் திருக்காளத்தியில் இருந்தவாறே, இப்பதிகளையெல்லாம் வணங்கிப் போற்றியதைப் போல, இவரும் இங்கிருந்தவாறே பணிந்து போற்றியுள்ளார். இத்திருப்பதிகளில் இரு திருப்பதிகளில் அருளிய திருப்பதிகங்களே கிடைத்துள்ளன.
இந்நிலையில் அங்குச் சில நாள்கள் இருந்தருளிய பின், பெருமானின் திருவருள் பெற்றுப் பொருதலில் வல்ல ஆனேற்று ஊர்தியையுடைய பெருமான் எழுந்தருளியிருக்கும் ஏனைய பதிகள் பலவும் சென்று வணங்கித் தமிழ்ப் பதிகங்கள் பாடிப் போற்றிப் பொங்கும் அலைகளையுடைய கடற்கரையோரத்தில் விளங்கும் இந் நிலவுலகில் சிவலோகம் எனச் சிறந்து விளங்கும் இளம்பிறையினை முடிமேற் சூடிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருவொற்றியூரைச் சென்றடைந்தார். *** இடங்கள் எனைப் பலவும் என்றது, திருக்காளத்தியி லிருந்து திருவொற்றியூர் செல்லும் வரையில் உள்ள இடைப்பட்ட பதி களாம். அவை திருக்காரிக்கரை, திருக்கள்ளில், புண்ணிய கோடீசுவரர் கோயில் முதலாயினவாகலாம்.
பெருமனார் தாமே தொடர்ந்து வந்து ஆவணம் காட்டி ஆட்கொள்ளப்பெற்ற நம்பியாரூரர் எழுந்தருளலும், எண் ணற்ற பெருமையுடைய தோற்றமில் காலத்தே தோன்றிய திரு வொற்றியூர்ப் பெருமான்பால் அன்பு கொண்ட அடியார்கள் வந்து எதிர்கொள்பவர்கள், அழகு பொருந்திய தம் வீதிகளின் வாயில்கள் தோறும் வாழை, கமுகு, தோரணங்கள், பொற்சுண்ணம் நிறைந்த பொற்குடங்கள், நறும்புகை, ஒளிவிளக்கு முதலியவற்றை எடுத்து நகரை அணிசெய்து, நம்பிகளைத் தொழ வந்தபொழுது, ***
சிறந்த மங்கலமுடைய நல்ல இயங்கள் முழங்கிட, நறுமணமுடைய மாலைகள் அணிசெய்யும் நாட்டிய அரங்குகளில், சிலம்பணிந்த பெண்கள் நடனமாடிட, எங்கும் பொழியும் மழை வெள்ளம் போல் பூ மழையைத் தேவப் பெண்களும் தேவர்களும் பொழிந்திட, நான்முகனது தலையில் பலியை உவந்து ஏற்றருளும் சிவபெருமான் விரும்பும் பெருந்தொண்டராம் நம்பிகள், அன்பர்களு டன் அந்நகரில் புகுந்தனர். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
திருவொற்றியூரில் உமையம்மையாரோடும் கூட நின்றருளும் சிவபெருமானது உயர்ந்த தவத்தில் பற்றுமிக்க திருத் தொண்டர்கள், பரந்த பெருங் கடல்போலப் பெருக வந்துகூடி, அவரது சுற்றம் போல அணைந்து போற்ற, தாமும் அவர்களைத் தொழுது, பெருமானின் அன்பராம் நம்பிகள், வெற்றி பொருந்திய இளைய விடையை ஊர்தியாகவுடைய பெருமானது கோயில் வாயில் முன்பாக வந்தடைந்தார். ***
வானினை அளப்பது போலும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து உள்ளே புகுந்து, வளர்ந்துவரும் வளைந்த இளமை ஆன வெண்பிறையைச் சடைமேல் உடைய பெருமானது கோயிலை வலங்கொண்டு, திருமுன்பு சேர்ந்து, ஊனும் உயிரும் கரைந்து உருகிட உச்சிமீது குவித்த கையுடன் உள்ளத்துப் பெருகிய காதலுடன், ஆராத அன்பினையுடைய நம்பியாரூரர் வீழ்ந்து வணங்கினார். ***
வானினை அளப்பது போலும் கோபுரத்தை மகிழ்ந்து பணிந்து உள்ளே புகுந்து, வளர்ந்துவரும் வளைந்த இளமை ஆன வெண்பிறையைச் சடைமேல் உடைய பெருமானது கோயிலை வலங்கொண்டு, திருமுன்பு சேர்ந்து, ஊனும் உயிரும் கரைந்து உருகிட உச்சிமீது குவித்த கையுடன் உள்ளத்துப் பெருகிய காதலுடன், ஆராத அன்பினையுடைய நம்பியாரூரர் வீழ்ந்து வணங்கினார். *** 'பாட்டும் பாடிப் பரவி எனத் தொடங்கும் பதிகம் குறிஞ் சிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 91).
இப்பதிகம் பாடியருளி அறிவு தன்வயமிழந்து சிவமயமாகிப் பரிவு கொண்டிட வெளியே வந்து, நீடிய விருப்புடைய பெருங்காதல் நிறைந்த அன்பர் பலர் போற்றிட, தேடுகின்ற பிரமனும் திருமாலும் அறிதற்கு அரிய சிவபெருமானின் திருப்பாதத்தைப் பரிவொடுங் கூடிக் கும்பிடும் காலங்களில் சென்றடைந்து போற்றிக் கும்பிட்டு அங்கு இனிதே இருந்தார் ஆரூரர். குறிப்புரை
இந்நிலையில் ஆரூரர் இங்கு இருந்தார். நம்பிகள் இவ்வாறு வருதற்கு முன்னே, இவருக்காக அழகிய திருக்கயிலாய மலையை விடுத்து நீங்கி, திருவருட் செயலால் இவ்வுலகில் வந்த அநிந்திதையார் அவதரித்து வளர்ந்து, பின்னாகச் சுந்தரமூர்த்தி நாயனாரது வாசனை கமழ்ந்திடும் மாலை சூடும் தோளினைச் சேர்ந்த அவ்வருட் செயலை அறிந்தவாறு சொல்லுவோம். ***
அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் எனப்படும் நான்கு வகையான குலத்தில், நான்காவதாகச் சொல்லப்படும் வேளா ளர் குலத்தில், பெருகும் நலமுடையவராய், உலகிற்கு ஒளிதந்து உதவு கின்ற கதிரவனினும் மேலான கொள்கை உடையவராய், உழவுத் தொழிலில் தலைசிறந்தவராய் வாழ்ந்துவரும் ஞாயிறுகிழார் என்பார் ஒருவருக்கு, அன்புமிகும் மகளாராகி, முன்பு அநிந்திதை எனப் பெயர் பெற்ற அம்மையார், நீலமணிமிடற்று ஒருவனாய பெருமானின் திருவருளால் இவ்வுலகில் தோன்றினார், குறிப்புரை
மலையரசன் மகளாராய உமையம்மையாரின் மலர் அனைய திருவடிகளை மறவாத அன்பினால், அதுவே உள்ளத் துத் தலையாய அன்பின் உணர்ச்சியாக வந்து சேர, தமது நிலையைத் தாமே அறிந்த சங்கிலியார், கூரிய வேல் போன்ற நீண்ட வரிவிழிகளை யுடைய சிறு பெண்கள் கூட்டத்துடன் விளையாடி வரும் நிலைகளாய கழங்காடல், அம்மானை. பந்தாடல் முதலிய பருவங்கள் முறையே வர, வயது நிரம்பிவரும் நிலையில், ***
சீர்மை பொருந்திய குலமரபில் வருகின்ற செயலே யன்றி, உள்ளத்தில் தெய்வத் தன்மை நிகழும் பண்பும் விளங்க, உலக வர் வியக்கும் பண்பில் வளர்ந்துவரும் பசிய வளையல் அணிந்த சங்கிலியார், கச்சு அணிதற்கான காலம் நெருங்க, வளரும் முலைகள் இடையினை வருத்திட, வளர்ந்து, எழில் திகழும் பருவத்தில் அவரது நிலைகண்டு தந்தையாரான ஞாயிறு கிழார் தம் மனைவியாருக்குச் சொல்லுவாராய்,
குறிப்புரை:

நம் மகளுக்கு வடிவும் குணமும் இந்நிலவுலகில் உள்ள ஏனைய பெண்கட்குப் பொருந்துவனவாக அன்றி, மிகமேம் பட்ட நிலையில் விளங்குவது நாம் எவ்வாறென அறிகிலோம்! மகளிர்க்கு நிறை காக்கும் காப்பாக விளங்கும் திருமணமும் இனி நிகழ்தற்குரிய காலமாகும் என்றிடலும், அது கேட்டுக் கற்பு வளரும் பூங்கொடி போலும் மனைவியார், கணவனாரை நோக்கி, நம் மக ளாரை ஏற்கும் முறையாகத் திருமணம் செய்து கொடுப்பீராக என்றார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
தாயாரும் தந்தையாரும் தமது திருமணம் பற்றிய பேச்சினைப் பேசக் கேட்ட சங்கிலியார், இத்திருமண வார்த்தை எனக் குப் பொருந்துவது அன்று; எம்பெருமானின் திருவருள் முழுமை யாகப் பொருந்திய ஒருவருக்கே என் வாழ்க்கை உரியது. இவ்வாறாக, இவர்தம் எண்ணங்களால் இதனின் வேறாய் விளைந்திடுமோ? என அஞ்சிய அச்ச நினைவால், உணர்வு மயங்கி, மிகச் சோர்ந்து நிலத்தில் விழுந்தார். *** 'உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம் உன்னடி யார் தாள் பணிவோம், ஆங்கவர்க்கே பாங்காவோம், அன்னவரே எம் கணவராவார்', 'எம் கொங்கைநின் அன்பர் அல்லார் தோள் சேரற்க' (தி. 8 ப. 7 பா. 19) என உடன்பாட்டிலும் எதிர்மறையிலும் வைத்துக் கூறும் மகளிர் நினைவு ஈண்டு மறக்கப்போமோ?
அருகில் நின்ற தந்தையாரும் தாயாரும் மகளார் வீழ்ந்தமை கண்டு பதைத்துப் பரிவுடன் அவரை எடுத்து, ஏங்குகின்ற உள்ளமுடையராகி, இவளுக்கு என்ன நேர்ந்தது? என்று கைகளில் அணைத்துத் தாங்கி, குளிர்ந்த நறுமணமுடைய பன்னீரைத் தெளித்து, உடம்பில் தடவிட, அவர்தம் மயக்கமும் அயர்ச்சியும் நீங்க, வளைந்த வில்போலும் நெற்றியையுடைய அவரை நோக்கி, 'உனக்கு இங்கு என்ன நேர்ந்தது?' எனக் கேட்டனர். ***
அருகில் நின்ற தந்தையாரும் தாயாரும் மகளார் வீழ்ந்தமை கண்டு பதைத்துப் பரிவுடன் அவரை எடுத்து, ஏங்குகின்ற உள்ளமுடையராகி, இவளுக்கு என்ன நேர்ந்தது? என்று கைகளில் அணைத்துத் தாங்கி, குளிர்ந்த நறுமணமுடைய பன்னீரைத் தெளித்து, உடம்பில் தடவிட, அவர்தம் மயக்கமும் அயர்ச்சியும் நீங்க, வளைந்த வில்போலும் நெற்றியையுடைய அவரை நோக்கி, 'உனக்கு இங்கு என்ன நேர்ந்தது?' எனக் கேட்டனர்.
குறிப்புரை:

அச் சொற்களைக் கேட்ட முதுகுரவர் இருவரும் மனத்தில் சோர்வும் அச்சமும் அதிசயமும் கொண்டவராகி, தம்மிடம் சொல்லிய அச்சொற்களை ஒருவருக்கும் தெரியாதவாறு மறைத்து ஒழுக, இவர் தமக்குக் குடிப்பிறப்பானும், பிற பண்புகளானும் ஒத்தான் ஒருவன், இவ்வுண்மை அறியானாய், சங்கிலியாரை விரும்பி மணம் பேசச் சிலரை விடுப்ப, அவரும் ஞாயிறு கிழாரிடம் வந்து கேட்டனர். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
தந்தையாரும் அவ்வார்த்தையைக் கேட்டு, உண்மை நிலையை உணர்த்தத் தகாமையினால், அவர்கள் மனம் வருந்தா வகையில் சில வார்த்தைகளைச் சொல்லி, அவர்களைப் போக்கலும், அவர்களும் தம்மை விடுத்த அவனிடம் செல்லும் முன்பே, பெருந்தீங்கைச் செய்தான் ஒருவன் அதன்பயனாக உடன் இறந்தாற்போல, மணம் பேச விடுத்த அவர்கள், அவனிடத்தினின்றும் புறப்பட்ட அளவிலேயே அவனும் இறந்தொழிந்தான். இச்செய்தி கேட்டதும் சங்கிலியாரைப் பெற்ற தந்தை தாயர் பெரிதும் மனம் கலங்கினார்கள். *** பெண் கேட்க வந்தாருக்குத் தம்மகளைக் கொடுக்கும் விருப்பம் இல்லையாயினும், அதனை அவ்வாறே சொல்லல் மர பன்று, வந்தாருக்கு மனம் வருந்தாதவாறு சொல்லலே மரபாகும். இவ் வகையிலேயே இங்கும் 'ஏதம் எய்தாவகை மொழிந்து' என்றார். ஆனால் அவ் ஏதம் தானும், அவர்கள் அளவிலன்றித் தம் குடும்ப அளவிலும் எய்தாவகை கூறல்வேண்டும். பெண்ணளவிலோ அன்றித் தம் குடும்ப அளவிலோ ஏதோ குறைபாடு உள்ளது; அதனால்தான் மணம் நேர்தலைத் தவிர்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகிவிடக்கூடாது. எனவே தங்குலத்திற்கும் மகளின் பெண் தன்மைக்கும் ஏதம் எய்தா வகையானும் மொழிதல் வேண்டும். இத்தகைய உலகியல் உணர்வுகள் எல்லாம் அடங்கவே 'ஏதம் எய்தாவகை மொழிந்து' என்றார். நல்லதன் நலனும் தீயதன் தீங்கும் உடன் நிகழ்வனவல்ல; பெரும்பாலும் 'தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை வீயாது அடியுறைந் தற்று' (குறள்,208) என்புழிப் போல அவ்வக்கால எல்லை வந்துழியே வருத்தும். மாறாக மிகப் பெரிய நன்மையே அல்லது மிகப்பெரிய தீமையோ செய்யின் 'பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும் (குறள், 319) என்றற்கு இணங்க, உடன் வருதலும் உண்டு. அவ்வகையிலேயே மிகப் பெரிய தீங்கு செய்தவன் அதன் பயனை உடன் அடைந்தாற் போல, மணம் பேச விடுத்த அவனும் அதற்குரியவரை விடுத்த அளவி லேயே இறந்தனன் என்றார். 'செல்ல விடுத்தாருடன் சென்றான்' என்றது, 'கற்புடைய மடவாரும் கணவனாருடன் சென்றார் (தி. 12 பு. 27 பா. 28) என்றாற்போல வரும் தொடராயிருப்பினும் அங்குக் கணவனார் இறப்ப, அவ்வம்மையாரும் உடன் இறந்தார் என்ற அமைப்பில் பொருள் கொள நின்றது. ஆனால் இங்கே மணம் பேச விடுத்தான்; அவர்கள் அவ்வினைக்குச் சென்ற அளவிலேயே தானும் சென்றான் (இறந்தான்) எனும் கருத்தமைய நிற்கின்றது. சென்ற அள வில் அவர்களுக்கும், அவனுக்கும் உடனிகழ்ச்சிப் பொருள்கொள நிற்பினும் அவர்கள் மணம்பேசச் சென்றனர்; இவன் உயிர் செலச் சென்றனன் என்பது கருத்தாகும்.
தையலாரான சங்கிலியார் திறத்துப் பேசத் தகாத வார்த்தையை, இவ்வுலகில் வாழ வேண்டும் எனும் நினைவுடையார் சொல்லார் என்பதை இங்கு உலகறியச் செய்து வைத்த விதியின் திறம்போல, இச்செயல் நிகழ, தம்மூரில் உள்ள பெரியோர்களுக்குச் சங்கிலியார் தன்மையை உள்ளவாறு வெளிப்படுத்தி, வருந்திடும் உள்ளத்துடன் அச்சம் கொண்டு, சங்கிலியார் விரும்பிய அச்செய் கைக்கே உடன்படுவாராய், ***
பெண்களுக்குள் தெய்வமே யாகும் இவளது செய்கை இதனை அறிந்தோர், இவள் பற்றிய வேறு திறம் பேச அஞ்சுவார்கள் என்றும், தாம் வணங்கும் ஈசனுடைய பெருமை யல்லாது மற்றொரு வார்த்தை பேசவும் அறியாள் என்றும், இவளது செயல் இது என்றும், பெற்றோரும் உற்றோரும் தெளிந்து, இனி இப்பெண் நம்மிடம் தெரிவித்தபடியே திருவொற்றியூர் நகரிடத்துப் படம் கொண்ட பாம்பினைச் சடைமேலுடைய நாயகன் பால் சேர்த்திடலே தக்கது எனத் துணிவார்களாகி, ***
பண் போலும் இனிய மொழியுடைய சங்கிலி யாரை நோக்கி, பெற்ற தாய் தந்தையருடன் சுற்றத்தவரும் சொல்லு வார்களாகி, 'அம்மையே! நீர், தெளிந்த கங்கை நீரை முடியில் கொண்ட சிவபெருமானின் திருவொற்றியூர் நகரைச் சேர்ந்து, இனி உமக்குச் செல்கின்ற கதியும் கண்ணார்ந்த நெற்றியுடைய கடவுளின் திருவருளேயாக, குளிர்ந்த குளங்கள் சூழ்ந்த நகரிடத்து ஒரு கன்னி மாடத்து தங்கி, தவத்தினைச் செய்திடுவீர்' என்று கூறி,
குறிப்புரை:

பெற்ற தந்தையர் உள்ளிட்ட சுற்றத்தார், பிறை யணிந்த சடைமுடியையுடைய திருவொற்றியூர்ப் பெருமான் திருவரு ளாலே, மற்றச் செயல் ஒன்றும் அறியாது, பெண்ணில் நல்லாராகிய சங்கிலியார் சொல்லிய வண்ணம் செய்திடத் துணிந்து, பெருகிய செல்வத்தோடும், முப்புரங்களையும் எரித்த வில்லையுடைய பெரு மான் அமர்ந்த திருவொற்றியூருக்கு அழைத்துச் சென்றார்கள். *** இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
திருமுடிமீது வளர்கின்ற வெண்பிறையை அணிந்த பெருமான் அமர்ந்தருளும் திருவொற்றியூர்க் கோயிலுக்குள் புகுந்து நெருங்கிவரும் சுற்றத்தோடும் பணிந்து, உலகத் தோற்றத்தில் மிக முந்திய அத்திருப்பதியில் ஆண்டுள்ளோரின் இசைவுடன் பெருமா னின் திருக்கோயிலின் அருகே, ஒரு கன்னி மாடம் அமைத்து, அங்கு ஒருவரும் புகமுடியாத முறைமையால் காவலும் செய்து வைத்து, அச்சூழற்கு வேண்டும் செல்வத்தைத் தகுதியுடன் அமைத்துத் தாதை யாரான ஞாயிறு கிழார் வந்து தமது மகளார் சங்கிலியாரின் திருவடி களை வணங்கி, ***
'யாங்கள் உமக்குப் பணிசெய்திட நீர் ஈசனுக் கேற்ற பணியினை விரும்பிச் செய்து மேலோங்கிய கன்னிமாடத்தில் உறைவீராக' என்று மொழிகின்றவர், தாங்கற்கரிய கண்ணீர் தாரை தாரையாக ஒழுகப் பிரிவாற்றாது, சுற்றத்தோடும் வணங்கி, எழுந்து, மதில் சூழ்ந்த தமது ஊருக்குச் சென்றார்.
குறிப்புரை:

பெருமான்பால் பேரன்பு பூண்டு, தவம்புரியும் கன்னியாராம் சங்கிலியார், பூதங்கட்கு எல்லாம் தலைவனாய சிவ பெருமானின் திருக்கோயிலில், காலம் தோறும் சென்று வணங்கி, நீதி முறைமையில் ஏதும் தவறாது, தமக்கு உற்ற பணியினைச் செய்திடற்கு மாலை கட்டும் அத்திருமண்டபத்துத் திரை சூழ்ந்த ஒருபுறத்துத் தாம் இருந்து,
குறிப்புரை:

முன்பு திருக்கயிலையில் செய்துவந்த பணியினை, அப் பான்மையால் மனம்கொண்ட உணர்வே தலைநிற்ப, விளங்கிடும் மெல்லிய பூங்கொடி போலும் வனப்புடைய சங்கிலியார், வண்டுகள் மொய்த்திடும் திருவுடைய மலர்கோத்த மிருதுவாய நல்ல மாலை களை, அவ்வக் காலங்களின் விதிமுறைக்கு ஏற்ற பண்பினால், தேவர்களுக்குத் தலைவனாய சிவபெருமானின் திருமுடிமேல் சாத் திடத் தொடுத்துக் கொடுத்து, வணங்கி, அங்குக் கன்னிமாடத்து வாழ்ந்து வரும் நாள்களில், ***
மாலைக் காலத்துச் செக்கர் வானத்தின் நிறத்தினை ஒத்த, ஒப்பற்றவராய பெருமானாரின் திருவருளால் இவ்வுலகில் வந்த நம்பிகள், நறுமணம் மிக்க மாலையைத் தொடுக்கும் சங்கிலியாரைக் காதல் மணஞ் செய்திட வந்த பருவம் இதுபொழுதாக அமைதலினால், வகுத்தான் வகுத்த வழி அமையும் முன்னைய விதியின் பயனாக ஒருநாள், சிவபெருமானின் திருக்கோயிலுள் புகுந்தார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
தேவாதி தேவராய பெருமானார், அந்தணராய வடிவுகொண்டு ஆட்கொள்ளப் பெற்ற நம்பியாரூரர், நெற்றியில் கண்கொண்ட அப் பெருமானை, முன்னைய நாளெல்லாம் வணங்கி டும் முறைமையால் வணங்கி, வெளியே வந்து, ஆங்குத் தொண்டு செய்து வரும் அடியார்களது திருவுடைய தொழில்கண்டு பணிந்து செல்கின் றவர், தாமரை மலர் நிறைந்த பொய்கையை ஒத்த, வனப்புடைய மலர்களைத் தொடுக்கும் திருமண்டபத்தின் உள்ளாகச் சென்றார். ***
அன்பே நாராக ஐந்தெழுத்தை நெஞ்சம் தொடுக்க வும், அத்தன்மையால் தம் கைகளால் மலர்களைத் தொடுத்தே, என்பும் உள் உருக மனமுருகி வரும் அடியவர்களை நம்பிகள் கண்டு தொழுது நீங்கும்பொழுது, முன்பு போலத் திரையினை நீக்கித் தம் பணியில் நின்று, தொடுத்த பூமாலைகளைக் கொடுத்து மின்னல் எனத் தோன்றி மறையும் சங்கிலியாரைப் பண்டை விதியால் கண்ணுற்றார். *** அகத்தும் புறத்தும் இறைவற்கென மாலை தொடுத்து, என்பும் உருக வழிபட்டுவரும் அடியவர்களைச் சுந்தரர், தொழுது நீங்கும் அளவில், தாம் இருந்த இடத்திலுள்ள திரையை நீக்கிக் கொண்டு, கட்டிய மாலைகளை இறைவற்குக் கொடுத்து, மின்னல் என மறையும் சங்கிலியாரைக் கண்ணுற்றார் என்பது கருத்து.
கோக்கப்படாத முத்தும், வண்டுகள் மொய்த்திடாத நல்ல மிருதுவாய அரும்பும் ஒத்த சங்கிலியாரை, விடைக் கொடியை உடைய சிவபெருமானின் திருத்தொண்டரான நம்பிகள் கண்டபோது, தமது நிறையைக் காக்க இயலாது அம்மையார்பால் காமஉணர்வின் வயப்பட்டுச் சிந்தை சென்றிட, அதுபொழுது மன்மதன் சொரிந்த மலர் அம்புகள் மேன்மேல் வந்து வீழ்ந்திடத் தரியாது வெளியே வந்து சொல்வாராகி, ***
இஃது இன்ன தன்மை என்று சொல்ல முடிய வில்லை; இவ்விடத்து ஒருபக்கத்துத் திரைக்குள்ளாகப் பொன்னும் முத்தும் மலர்ந்த ஒளி, அமுதில் அளைந்து சேர்த்துப் பின்னர் அவ் வொளியமுதினைப் புதிய சந்திரனில் உள்ள நிலவாய அமுதின் தன் மையிற் குழைத்து, உருச்செய்த மின்னுக் கொடிபோலும் அப்பெண், என் மனத்தை மாற்றினள். இப்பெண்தான் யார் எனக் கூறலும், *** இயம்பல் - தம் வாய்விட்டுக் கூறல். அவ்வளவில் அருளு கின்றார் அவரைப்பற்றிக் கூறலாயினர். நயத்தக்க நாகரிகம் இது.
அருகே நின்றவர்கள் சொல்லுவார்களாய், அவர் தான் நங்கையாகிய சங்கிலியார் என்பவர், பெருகும் தவமுடையவர், ஈசர் பணி பேணும் கன்னியர் என்னலும், அது கேட்டருளிய நம்பிகள், இருவரால் இப்பிறவியை எம்பெருமான் அடைய வைத்தார், அவர்க ளுள் முன் அணைந்த பரவை ஒருத்தி, சங்கிலியாய இவள் மற்றைய வளாம் என எண்ணி மனம் மருட்சியடைந்தனர். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
மின் அனைய சடையையுடைய பெருமானுக்கு ஆளாகும் விதியால் வாழும் எனை வருத்தி, இறைவனது அருளால் வரும் பேற்றைத் தனது தவத்தால் என்பால் அணையாவகை தடுத்து, எனது அரிய உயிரையும் அழகிய மலரையும் சேரப் பிணைக்கும் இவள் தன்னை, பொன்னார்ந்த மலர்க் கொன்றை முடியுடைய பெரு மான்பால் விண்ணப்பித்துப் பெறுவேன் என நினைந்து இறைவன் கோயிலினுட் சென்று புகுந்தார்.
குறிப்புரை:

தாமரை மலர்மேல் இருந்த அயனும், நெடிய உருவுடைய திருமாலும் வானத்திலும் நிலத்தினுள்ளும் ஊடுருவிச் சென்றும் அறிய முடியாத இளம்பிறை சூடிய திருமுடியையும் நீண்ட திருவடிகளையும் உடைய சிவபிரானை, உலகம் யாவையும் தாமே உடையவராகி இருந்தும், திருவொற்றியூர்த் திருப்பதியில் அமர்ந்து என்றும் உறைகின்ற ஒளிப்பிழம்பாய சோதியாம் முதல்பொருளை வணங்கித் திருமுன்பு நின்று போற்றுவாராய், ***
மலைமகளை ஒருபாகத்து வைத்து மகிழ்ந்ததும் அல்லாமல், உமது அழகிய நீண்ட திருமுடியினிடத்துக் கங்கை என் னும் பெண்ணையும் மறைத்து வைத்திருக்கும் காதல் உடையீர்! இங்கு உமக்குத் திருவுடைய பூமாலை தொடுத்து என் உள்ளத்தின் நிறை யையும் அவிழச் செய்த முழுமதியென விளங்கும் சங்கிலியாரைத் தந்தருளி, எனக்குற்ற வருத்தத்தை நீக்குவீராக என்னலும், *** முன் ஒரு பெண்ணை மணந்திருக்கும் நீ, பின் ஒரு பெண்ணை வேண்டுவது ஏன்? என்னும் வினா எழாதவாறு பெரு மானை விளித்துக் கூறியருளியது எண்ணி மகிழ்தற்குரியது. வெல்லும் சொல் இன்மையறிந்து கூறிய விளியழகே அழகாம்.
இறைவனின் திருமுன்பு நின்று இனிய பல கூற்று களால் அவர் அறியும்படி உணர்த்தி, வெளியே வந்து, என் எண்ணம் எல்லாம் உமக்கு அடிமையாமாறு எண்ணும் எனது நெஞ்சினில் அதன் திண்மை எல்லாவற்றையும் உடையச் செய்தாள். இனிச் செய்வதொன்றும் அறியேன் நான், குளிர்ந்த நிலவு ஒளிரும் பவளம் போலும் சடையை உடையீர்! நும் அடியேற்கு அருளும் எனக் கூறித் தளர்வாராய்,
குறிப்புரை:

இளம்பிறை தவழும் திருச்சடையை உடைய பெருமான் மகிழ்கின்ற கோயிலின் வெளியே ஒருபுறமாக நம்பிகள் இருப்பக் கதிரவன் மேலைக் கடலிற் செல்லும் காலமாகிய மாலைக் காலம் வந்துற, அதுகண்டு மயங்குவார், முதிராத முலையையுடைய சங்கிலியாரைத் தமக்குத் திருமணம் செய்ய வேண்டிப் பதுமநிதி சங்கநிதி எனும் இரண்டையும் உடைமையாகக் கொண்டு நிற்கும் குபேரனை நட்பாகக் கொண்டிருக்கும் பெருமான் தமக்குத் தோழன் என்பதை நினைந்து நினைந்து மனம் அழிய, *** இறைவன் குபேரனையன்றித் தம்மையும் தோழனாகக் கொண்டிருக்கும் நட்பு உரிமையால் தமக்கு உதவ வேண்டி மனம் அழிந்தவராயினர். 'நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன்' (குறள், 802) என்பர் திருவள்ளுவர். அத்தகைய உரிமையும் தகுதியும் பற்றியே இவ்வகையானும் உதவ வேண்டுகின்றார் நம்பிகள்.
தேவர் உலகும் இவ்வுலகும் உய்ய நஞ்சுண்டருளிய இறைவர் நம்பிகள்பால் வந்தருளி, அவரை நோக்கி, இந்த உலகில் யாவரும் அடைய முடியாத பெருந் தவத்தின் பூங்கொடியாம் சங்கி லியை உனக்குத் தருகின்றோம்; நீ மனத்தில் கொண்ட கவலையை ஒழிவாயாக! என்னலும், ***
அன்று திருவெண்ணெய்நல்லூரில் வலியவந்து ஆட்கொண்டருளி ஒன்றும் அறியாத நாயேனுக்கு உறுதி வழங்கி யருளினீர்! எனது உயிரைக் காத்திட இன்றும் இச்சங்கிலியைத் திரு மணம் செய்து வைத்தற்கு ஏற்றருளினீர்! என்று பெருமானைப் போற்றி அவர்தம் மணம் கமழும் மலர்ச் சேவடிகளை வணங்கி மகிழ்வுற்றார். *** இவ் ஆறு பாடல்களும் ஒருமுடிபின.
நம்பிகளை ஆண்டு கொண்ட அறவாழி அந்தண னாராகிய இறைவரும் அவருக்கு அருள் புரிந்து, கருணையுடன், நீண்டு பெருகிய இரவின் யாமத்து அவ்விடத்தினின்றும் நீங்கி, வானில் நிறைந்த திங்களஞ் செல்வனும் தீண்டும் உயர்வுடைய கன்னிமாடத் துச் சென்றருளி, அவ்விடத்துத் திகழும் சங்கிலியார் எனப்படும் தூண்டும் ஒளி விளக்கினை ஒத்த அம்மையார் பாலாகக் கனவில் தோன்றினார். *** தூண்டுசோதி விளக்கு அனையார் - இறையருளால் உந்தப்பட்டு ஒளிவிளங்க வாழ்தலின் இனியும் வாழ இருத்தலின், இங்ஙனம் கூறினார்.
இறைவர், சங்கிலியார் கனவில் தோன்றிய பொழுது, சங்கிலியார் தொழுது விழுந்து தம்வயமிழந்து மிகவும் அன்பு பொங்கி எழுந்து, 'ஐயனே! அடியேன் உய்ய எழுந்தருளி வந்த பேற்றிற்கு என்ன கைம்மாறு செய்வது' என்னலும், அதுபொழுது பெரிய கருணையையே மேலே பொழிந்தாற்போல் விளங்கும் திரு நீற்றின் திருமேனியைக் கொண்ட சிறந்த அந்தணரும் நேராக நின்று அருள் புரிவாராய், *** திருநீறு கருணையின் வண்ணமாதல், 'பராவணமாவது நீறு' என்பதாலும் அறியப்படும்.
'எம்பால் சாரும் தவமுடைய சங்கிலியே! கேள். மிகவும் என்பால் அன்புடையன். மேருமலையிலும் மேம்பட்ட தவமுடையவன். திருவெண்ணெய்நல்லூரில் யாரும் அறிய யான் ஆண்டுகொள்ள உரிமையுடையவன். உன்னை வேண்டி என்னை இரந்தான். கச்சணிந்த மார்பகத்தை உடையவளே! நீ அவனைத் திருமணம் புரிந்து மகிழ்ந்து வாழ்வாயாக! என்றருளிச் செய்தனர். *** தவம் பெற்ற பெருவாழ்வைச் சங்கிலியாருக்கும், நம்பி களுக்கும் இயைத்துக் கூறியது, கயிலையில் தன்பாலும், நிலவுலகில் அடியவர்பாலும் பூண்டு நிற்கும் தவம்பற்றியாம்.
மூலகாரணமாய் நிற்கும் முதல்வனார் அருளிச் செய்த அளவில், சங்கிலியாரும், மாலும் அயனும் அறிதற்கரிய குளிர்ந்த மலராய தாமரை போலும் திருவடிக்கீழ்ப் பொருந்த வீழ்ந்து, நேர் நின்று, வேதமுதல்வராய அவர் முன்பு நடுக்கமடைந்து தொழுது சொல்வாராகி,
குறிப்புரை:

எம்பெருமானே! நீர் அருளிச் செய்த அவருக்கே உரியவள் நான். தேவர்களின் தலைவனே! உமது அருளிப்பாட்டை என் தலைமேற் கொண்டேன். தக்க விதியுடைய திருமணத்தால் நம்பிகளுக்கு என்னைக் கொடுத்தருளும்பொழுது, மலையரையன் மகளாராய உமையம்மையாரை ஒருபாலாகக் கொண்டிருக்கும் பெருமானுக்கு விண்ணப்பித்துக் கொள்வதும் ஒன்று உண்டு என்பாராய், ***
இணைந்துவிளங்கும் புரிபுன் சடையையுடைய இறைவனை முன்னாகப் பெரிதும் நாணம் பெருகத் தொழுது சொல்வா ராய், விளங்கும் திருவாரூரின்கண் அவர் மிகவும் மகிழ்ந்து தங்குவது என்னும் தன்மையைத் திருவுளங் கொண்டு, எம்பெருமாட்டியின் திரு முலை தோய்ந்த, மின்னும் முப்புரி நூலணிந்த மார்புடையீரே! அதற் கேற்ப அருள் புரிதல் வேண்டும் என்றார், விளக்கினை ஒத்த சங்கிலியார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
மற்று அச்சங்கிலியார்தம் விண்ணப்பத்தை ஏற்றருளி, நம்பிகளின் நிலையைத் திருவொற்றியூர் நகர் அமர்ந்த பெருமான் உணர்ந்தருளி உரைப்பாராய், பொன்னாலாய வளையல் அணிந்தவளே! உன்னை விடுத்துப் போகாமைக்குரியதொரு சூளு ரையை மறைவாகப் பொருந்திய நிலையில் அவனும் செய்து தரு வான் என அருள் புரிந்து,
குறிப்புரை:

மூங்கிலின் வனப்பினை ஒத்த தோளுடைய சங்கிலி யாரிடத்தினின்றும் மீண்டருளித் திரும்பவும் தூயதான தனது மனத் தகத்து மகிழ்ந்திருக்கின்ற தோழர் சுந்தரனார்பால் சென்று, அவரை நோக்கி அவளை மணஞ் செய்திடும் நிலைமையை நாம் சொன் னோம், அதற்கு அவள்பாலாக நின்றதொரு குறையுளது, அது உன்னால் முடித்துக் கொடுக்க வேண்டியதாகும் எனப் பெருமான் மொழிதலும், ***
அதுகேட்ட வன்தொண்டராய நம்பிகளும் பெரிதும் மனம் மகிழ்ந்து பணிந்து, அடியேன் செயத்தக்கதொரு குறை யாது? எனலும், பெருமானும் அவரை நோக்கி, நீ அவளைத் திரு மணம் செய்தற்கு, அவளுடன் என்றும் பிரியாது உடன் உறைதற்கான சூளுரையொன்றை இன்றிரவே அவள் முன்பு செய்திடுவாய் என்று அருள் புரிந்தார். *** சென்று கிடைத்து என்பது விரைந்து சென்று அவளை யடைந்து எனும் பொருள்பட நின்றது. இம்மூன்று பாடல்களும் ஒரு முடிபின.
எம்பெருமானே! என்செய்தால் இத்திருமணம் இனிது நிகழ்வுறுமோ அதனைச் செய்வேன் யான், ஆனால் அவ்வண் ணம் செய்திடற்கு மின் ஒளிரும் புரிபுன் சடையீர்! உமது அருள் பெறு தல் வேண்டும் எனலும், அதனைத் திருவுளம் கொண்டு, புன்முறுவ லுடன் அவரது முகத்தை நோக்கி உனது செயலுக்கு இனி நாம் என் செய்திடல் வேண்டும்? எனப் பெருமான் கேட்டருளலும், ***
அதுபொழுது கச்சணிந்த மார்பகத்தையுடைய சங்கிலியாரிடத்து மனங்கொடுத்த நம்பிகள், இங்கிருக்கும் எம்பெரு மானின் இத்திருப்பதியல்லாது, பிற பிற திருப்பதிகளிலும் இத்திருக் கோலத்தை வழிபட வேண்டும் எனும் உளங்கொண்ட அடியேனுக்கு இச்சூளுரை தடையாகும் என நினைந்த குறிப்பினால், தம்மை ஆளாகவுடைய பெருமானின் திருமுன்பு தாம் வேண்டுதற்குரிய குறையினைக் கூறி இரந்திடுவாராகி, ***
இன்பத்தை வழங்கிவரும் பெருமானுடைய திருவடிகளைப் பணிந்து, அவர் திருமுன்பிருந்து, தமிழ் வேந்தராய சுந்தரர் மொழிவாராய், எம்பிரானே! சங்கிலியாகிய அவள்தனை நான் திருமணம் செய்து பிரியாதிருத்தற்குரிய சூளுரையைச் செய்வ தற்கு அங்கு அவளுடன் திருமுன்பு வந்தால், அதுபொழுது தாங்கள் கோயிலை விடுத்து நீங்கித் தங்குகின்ற இடம் திருவுடைய மகிழ மரத்தின் கீழாக அமையவேண்டும் என வேண்டி விண்ணப்பித்துக் கொண்டார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
தம்பிரான் தோழராகிய சுந்தரர் இவ்வண்ணம் இரந்து வேண்டிக் கொண்டருளலும், தேவர்கட்குத் தலைவராய சிவ பெருமானும் அதற்கு உடன்பட்டுச் சுந்தரனே! நீ சொன்னபடி நாம் செய்வோம் என்று அருளலும், அதனைக் கேட்டருளிய சுந்தரரும், எம்பிரானே! இனி எனக்கு அரியதொரு செயல் எதுவாகும்? (எதுவுமின்று) எனப் போற்றி செய்து, ***
இரு கைகளும் கூப்பியவாறு உச்சியில் விளங்க எம்பிரானிடம் இவ்வாறாக அருள்பெற்று வெளியே வந்திடலும், அது பொழுது செஞ்சடையையுடைய சிவபெருமானும், தம் தோழரிடத்து ஒரு திருவிளையாடல் புரிதற்கு மகிழ்ந்தோ! அல்லது வஞ்சிக்கொடி போன்ற சிற்றிடையினையுடைய சங்கிலியார் வழிவழியாகச் செய்து வரும் அடிமையின் பெருமையை எண்ணியோ! நாம் அறியோம்! உயிர்கள் அனைத்தும் துயில்கொள்ளும் இரவிலே, மீண்டும் உறுதி சொல்வதற்குச் சங்கிலியார்பால் சென்றார். *** மன்னுயிரெல்லாம் துயில அருள் செய்யும் பெருமான் தான் துயிலாது அவ்வுயிர்களுக்கு அருள் செய்தலிலேயே திருவுளம் கொண்டிருத்தலை அறிவிக்கவே, 'துஞ்சிருள் மீளவும் அணைந்தார்' என்றார். 'உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி' (தி. 6 ப. 55 பா. 11) என நினைந்துருகுவதல்லது அப்பெருமானுக்கு உயிர்களா கிய நாம் என் செய்ய வல்லோம்? இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
சங்கிலியாரிடத்து முன்பு போலச் சென்றருளி, பெருமான் அவரை நோக்கிப், பெண்ணே! உனக்குச் சுந்தரன் சூளுரை செய்வன், அச்சூளுரையை நம் முன்பு செய்திடற்கு இசைவு கொள் ளாது, நறுமணம் மிக்க மலர்களையுடைய மகிழ மரத்தின்கீழ்ச் செய் தற்கு ஏற்பாயாக' எனக் குறித்தருளலும், *** 'பொன்னவிலும் கொன்றையினாய், போய் மகிழ்க்கீழ் இரு என்று, சொன்ன எனைக் காணாமே சூளுறவு மகிழ்க்கீழே, என்ன வல்ல பெருமானே' எனவரும் நம்பிகள் கூற்றே இந்நிகழ்விற்கு அடித்தளமாகும்.
: அதுகேட்ட சங்கிலியாரும் வணங்கி, எம்பெருமா னைக் கைகூப்பித் தொழுது, மாலும் அயனும் அறிதற்கரியீர்! பிறர்க்குக் கூறற்கரிய உண்மை நிலையை எனக்கு அருள்புரிந்த அத்தன்மையால், பெருமானுக்கு அடியேனாகப் பெற்றேன் யான் என்று கூறிக் கண்க ளில் பெருந் தாரையாக நீர்வழிந்திழிய, வெற்றி பொருந்திய இளைய விடையையுடைய பெருமான் திருவடிக் கீழ்ப் பணிந்து வீழ்ந்து எழுந் தார். *** அற்றம் - பிறர்க்குக் கூறற்கரிய மறைவான செய்தி: அந்தரங்கம், இரகசியம் என்பனவும் அன்ன. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
சங்கிலியாருக்கு அருள்புரிந்து சடைமுடியுடைய பெருமான் எழுந்தருளிச் சென்றிடலும், இந்நிகழ்ச்சி கனவில் நிகழப் பெற்றபோதும் நனவுபோல் உணர்ந்தெழுந்த சங்கிலியார் அவ்விர வின்கண்ணே செம்மையான சடையுடைய பெருமானது திருவருளின் திறத்தை நினைந்து, மேலும் கண் துயிலாராகி, மனத்தில் பெரும் ஐயப்பாட்டுடன், அருகே துயின்ற தோழியரை அணைந்து அவரை எழுப்பிடலும், *** ஐயம் - தாம் கண்ட கனவு நிகழ்ச்சியின்கண் கொண்ட ஐயம். இறைவன் தன்பொருட்டாக ஒருமுறைக்கு இருமுறை எழுந்த ருளி வந்ததும், தனக்கு உற்றதுறைத்தும், உறுவது கூறியும் செய்த அருளிப்பாடு எவரும் பெறுதற்கரிது ஆதலின், அதன்கண் ஐயம் எழலாயிற்று.
துயில் நீங்கிய தோழியர்க்கெல்லாம் ஏட்டில் உள்ள வரியைநீக்கி எழுத்தறிய வல்ல திருவொற்றியூர்ப் பெருமான், தமது கனவில் அருளிச் செய்த இவ்வருளிப் பாட்டை யெல்லாம் அவர்கள் பாங்குடன் அறியுமாறு மொழிந்திடலும், அதுகேட்ட தோழியர்கள் அச்சமும் வியப்பும் கொண்டு தம்மை அறியாது பெற்ற மகிழ்ச்சியால் சங்கிலியாரைப் பணிந்தார்கள். *** இறைவர் அருளிய மறைவாகக் கொள்ளத்தக்க செய்தி யைத் தோழியரிடம் கூறியது பொருந்துமோ? எனில், பொருந்தும்.

அதுபொழுது சங்கிலியாருக்குப் பெருமானுடைய திருப்பள்ளி எழுச்சிக்கு மலர் தொடுக்கும் பொழுதாகிட, அவர் எழுந்து அத்தொழில் செய்திடும் பெண்களுடன் தாம் கோயில் சென்றிட, கோயிலின் முன்பாகச் சங்கிலியார் வரும் காலத்தை உணர்ந்து, தமது சூளுரையை நிறைவேற்றும் காலம் அதுவாகவே அமைத்துக் கொண்டு, பெருமான் அருளியவாறு சூளுரை செய்திட, நம்பிகள் வருவாராயினர். ***
நின்ற நம்பிகள், அங்கு எதிர்வந்த சங்கிலியா ரிடத்துச் சென்று சேர்ந்து, பெருமானின் திருவருள் திறங்களை எடுத்து மொழிய, மின்னல் என ஒளிரும் நுண்ணிய இடையையுடைய சங்கிலி யார், சூளுரை செய்தற்குரிய நீர்மையை நேராக எதிர்நின்று சொல்லா ராகி, உள்ளத்துக்கொண்ட நாணமுடன் ஒதுங்கித், தம்முடன் வந்த தோழியருடன் கோயிலுட் புகுந்தார். ***
அங்கு அவர்பின் சென்ற நம்பிகள் அவரை நோக்கி, அழகிய அணிகளை அணிந்தீர்! இங்கு நான் உம்மைப் பிரியாமைக்கு இசைந்து சூளுரை செய்திட, இளம்பிறை அணிந்த திருச்சடையை யுடைய பெருமான் முன்பு போதுவீராக என மொழியலும், அது கண்டு சங்கிலியார் தம் கனவைச் சொல்லக் கேட்ட அவர்தம் தோழி யர்கள் சுந்தரருக்குச் சொல்வார்களாய், *** முன்பாடலில், சுந்தரர் திருவருளின் திறம்கூறச் சங்கிலி யார் எதிர் மொழியாது தோழியருடன் ஒதுங்கி உட்புகுந்ததும், இப் பாடலில் இறைவன் திருமுன் வர அழைப்பத் தோழியர் வழித் தம் கருத்தை யுணர்த்துவதும் அவர்தம் பெண்மைத் தன்மையைக் காட்டி நிற்கின்றன 'அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்தல் நிச்சமும் பெண்பாற் குரியவென்ப' (தொல். களவு. 8) எனத் தொல்காப்பியர் கூறும் பெண்மையை இவர்வழி கண்டு மகிழ ஏதுவாகின்றது.
எம்பெருமானே! இச்சூளுரைக்காகத் தாங்கள் எழுந்தருளி வந்து இறைவரின் திருமுன்பு சொல்வது தகாது என்றலும், அது கேட்டருளிய நம்பிகள் தம் பெருமானது செய்கையை அறியாத வராய்ப் பூங்கொடி போல்வீர்! பின்னர் யான் சூளுரை செய்வது எங்கே? என்று கூறுதலும்,
குறிப்புரை:

அதற்கு அப்பெண்கள், மகிழ மரத்தின் கீழே செய்ய அமையும் என்றதும், அதுகேட்டு மனம் மயங்கியவராய், யான் இவர் சொன்னபடி செய்ய மறுத்தால், முற்கூறிய உறுதிப்பாட்டிற்கு மாறாகும் ஆதலின் நான் உடன்படலே பொருந்திய செயலாகும் என்று துணிந்து, அங்ஙனமாயின் நீர் மகிழ மரத்தடியிற் போதுவீர் என்ன, அவர்கள் போதலும் தாமும் அங்குச் சென்று சேர்ந்தார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
குறைவிலாத பெருந் தவமுடைய சங்கிலியாரும் காண, என்றும் அழியாத மகிழ மரத்தை மும்முறையாக வலம் வந்து, நான் இங்கிராது அகன்று போகேன் என நின்று விளம்பினார், மலர்கள் மலர்ந்திடத் தோன்றும் குளிர்ந்த நீர்ப் பொய்கையுடைய திருமுனைப் பாடி நாட்டின் தலைவரான நம்பிகள்.
என்றும் பொருந்திய சிறப்பினையுடைய நம்பிகள் உண்மையாகச் சூளுரை செய்திடும் அச்செயலை முடித்திடக் குவளை மலரை ஒத்த கண்களையுடைய சங்கிலியாரும், அதுகண்டு மிகவும் மனம் கலங்கிப் பாவியேன் இந்நிகழ்வினை எம்பெருமான் பணியால் கண்டேன் என்று உயிர் சோர்ந்து மனம் அழிபவர், அங்கு ஒருபுறம் மறைந்து நின்றனர். *** நம்பிகள், தம்மை மணந்தபின் பிரியாது தம்மோடு இருத்தல் வேண்டும் என்பது கருத்தெனினும், இடையில் நிகழ்ந்த இந்நிகழ்வுகள் அவரை வருத்தின. இதுவும் அப்பெண்தன்மையை விளக்குவதாகும்.
திருநாவலூரினுக்கு அரசராய சுந்தரர், தமது செயல் முடித்துப் போர்செய்யும் யானைத் தோலைப் போர்த்த சிவபெருமான் கோயிலினுள் புகுந்து, ஐயனே! நின் அருளை நாளும் வழங்க இங்கிருந்தீர்! இச்செயல் செய்தவாறு அழகியது, என்று பெருமா னுடைய பெரும்பெயரான திருவைந்தெழுத்தைப் போற்றி, மகிழ்ந்து, பெருமகிழ்ச்சியுடன் வெளியே வந்தருளினர். *** சுந்தரர் தாம் இறைவன் திருமுன்பு சூளுரைக்குங்கால், அவர் மகிழ மரத்தடியில் எழுந்தருளியிருக்க வேண்டியது அவருக்கும் இறைவற்கும் மட்டுமே தெரியும். அங்ஙனமிருக்க அவர் திருமுன்பு சூளுரைக்க முற்பட்ட பொழுது, தோழியர்கள் மகிழ மரத்தடியே அமையும் என்றது, இறைவன் உணர்த்த உணர்ந்ததன்றிப் பிறிதன்று என்பதை யுணர்ந்த நம்பிகள், குறிப்பு மொழியால் 'இச்செயல் அழகிது' என்றார். அங்ஙனமாயினும் அவ்வருள் இதற்கு முன்னின்று அருளியது போலப் பின்னும் அருளும் என்ற உறுதிப்பாடும், தோழமையாம் உரிமையுணர்வும் நிலைபெற உள்ளத்திருத்தலின், சலியாது பெருமகிழ்வுடன் வந்தருளினார்.
கச்சணிந்த மார்பகங்களையுடைய சங்கிலியார், நம்பிகள் போனபின்பு, மாலைகட்டும் மண்டபம் சென்று தம் பணி களை முடித்துக் கருமையான மேகம் போலும் அழகிய திருக்கழுத் தினையுடைய சிவபெருமானின் செயலினைக் கருத்தில் கொண்டு, வணங்கி, இருள் நீங்கிப் பொழுது விடிந்திட அழகு பொருந்தும் கன்னி மாடத்துள் புகுந்தார். ***
அன்றைய இரவிலேயே தொன்மைமிகு மூதூராய திருவொற்றியூரை உடையவராகிய பெருமானும், தாம் ஆட்கொண் டிருக்கும் பொன்னாலாய அணிகலன்களை அணிந்த நம்பிகளின் விருப்பிற் கிணங்கப் புகழ் விளங்கி நிற்கும் திருவொற்றியூரில் வாழும் தொண்டர்கட்குச் சுந்தரருக்குச் சங்கிலியாரைத் திருமணம் செய்திடற்கு மனம் கொள்ளும்படி கனவில் அருள் செய்வாராய், ***
'சுந்தரனுக்குச் சங்கிலியை இவ்வுலகில் நமது ஏவலின்படி மணவினை செய்து, விண்ணவரும் அறியுமாறு திரு மணம் செய்து கொடுப்பீர்களாக' என்று அவர்கள் அறிந்திடக் கனவில் உணர்த்துதலும், பெருமானிடத்து அன்பு பூண்டிருக்கும் திருத்தொண் டர்களும் அப்பணியைத் தலைமேற் கொண்டு எழுவார்களாய்,
குறிப்புரை:

திருவருள் நிறைந்த திருவொற்றியூரில் இருக்கும் அத்திருத்தொண்டர்களுடன் அழகிய அப்பதியில் உள்ளோரும் சேர்ந்து, மகிழ்ச்சியுடன் தேவர்கள் பூமழை பொழிந்திட, காண்பார்தம் கண்கள் களிகொள்ளப் பெருஞ்சிறப்புடன் கலியாணம் செய்து கொடுத்தார்கள். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
முன் திருக்கயிலாய மலையில் நிகழ்ந்த நியதியால், உயிர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் அருளாலே, வண்டுகள் மொய்த்திடும் கூந்தலையுடைய சங்கிலியாரைத் திருமணம் செய்த நம்பிகள், தாமரை மலர்மேல் இருக்கும் திருமகளின் வனப் பையும் புறங்கண்ட அத்துணை அழகுடைய தூய நலமுடைய சங்கிலி யாரைக் கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றும் விருப்பம் மீதூரத் துய்த்திருந்தார். *** 'நற்பெரும் பான்மை கூட்ட', 'பண்டைவிதி கடைக் கூட்ட' என முன்னர்ப் பரவையார் திறத்துக் கூறியவாறே இங்கும் கூறப்பட்டது. 'கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள' (குறள், 1101) எனும் திருக்குறளை இப்பாடலில் முகந்தெடுத்து மொழிந்துள்ளார் ஆசிரியர். இவ்வாறே, கழறிற்றறிவாரும் தம் திருக்கயிலாய ஞானவுலாவில் இவ்வருங் குறளை முகந்தெடுத்துள்ளமையும் அறியத்தக்கதாகும். உலகியல் வழித்தாய் இங்ஙனம் கூறினும், சுந்தரர் தம் அருளியல் வாழ்வில் பன்னாளும் பயில் யோகமாய் அமைந்தவாற்றை ஆசிரியர் முன்னர்க் (பா. 327) கூறியவாறு ஈண்டும் உணர்ந்து மகிழல் வேண்டும்.
யாழினும் இனிய மொழியும் , அழகிய முறுவலும், இரு குழைக் காதின்பாலாகப் பார்வை புரளும் மாவடு போன்ற கண்களும், பருத்த மார்பகங்களும் உடைய பெறுதற்கரிய சங்கிலி யாரை, அவருடைய அல்குலாகிய பொய்கையில் படிந்து துய்த்து வரும் நம்பிகளுக்கும், சங்கிலியாருக்கும் இடைப்பட்ட புலத்தலும் புணர்தலும் நிகழும் பொழுதெல்லாம், அக்காலங்கள் முறையே ஒரு கணப்பொழுது ஊழியாகவும், ஊழிதானும் ஒரு கணமாகவும் நீட்டித் தும் சுருங்கியும் நிற்கும். *** 'புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ' (குறள், 1323), 'ஊடுக மன்னோ ஒளியிழை' (குறள்,1329), 'ஊடுதல் காமத்திற்கு இன்பம்' (குறள்,1330) என வருவனவற்றால் ஊடலின் இன்றியமை யாமை விளங்கும். அப்புலவி தானும் உப்பமைந்தற்றாய் இருத்தல் வேண்டுமேயன்றிச் சிறிது மிகினும் சுவை குன்றுமாதலின் அக்காலம் கணப்பொழுதாயினும், இவர்களுக்கு ஊழியாகுமாம். தாம் வீழ்வார் மென்தோளைத் துய்த்தலினும் தாமரைக் கண்ணனானுலகும் வேண் டப் படுவதொன்று அன்றாதலின் அக்காலந்தானும் மிகப் பெரிதாயி னும் இவர்களுக்கு ஒரு கணமாகும். அகப்பொருட் சுவையைத் திருக்குறள் வழியாகக் குழைத்து இழைத்திடும் ஆசிரியர் சேக்கிழாரின் கவிநலன் அறிந்து இன்புறற்குரியதாகும்.
இந்நிலையில் பேரின்பத் துறையில் சங்கிலியா ருடன் இனிதமர்ந்தருளும் நம்பிகள், பெருமான் உறைந்தருளும் புகழ் விளங்கும் திருவொற்றியூர்தனில் மகிழ்ந்து உறைகின்ற சிறப்பினால் முறைமையாக வரும் காலங்கள் பலவும் தத்தம் எல்லையில் வந்து கழிந்திடத் திருச்சடையின்மீது இளம்பிறையை அணிந்து விளங்கும் பெருமானின் திருவடிகளைத் தொழுது அங்கிருந்தார்.
குறிப்புரை:

தமிழ் மேன்மேலும் தழைத்து வளருகின்ற பொதிய மலையில் தோன்றி, பூக்கள் மலரும் சந்தன மரங்களின் அடுக்கலில் அணைந்து, குளிர்ந்த மரச்சாரலிடையாக வளர்ந்து வரும் மிருதுவாய தென்றல் காற்று அங்கு வீசிடவும், அக்காற்றின் நலம் கண்ட நம்பிகள், திருவாரூரின் அழகிய வீதிகளில் வசந்த விழாப்பெருநாள்களில் எழுந் தருளி உலாப்போகும் பெருமான் எதிராக வசந்தக் காற்று எதிர் கொண்டு வணங்கும் தன்மையை நினைந்தருளினார். *** திருவொற்றியூரில் வீசிய கடற் காற்று, திருவாரூர்ப் பெருமானின் முன்னாக வீசும் வசந்த காலக் காற்றை நினைவு கூர வைத்தது.
(அதுபொழுது) நம்பிகள், வெண்பிறையின் கொழுந்து அணிந்த வீதிவிடங்கப் பெருமானது, அழகிய நெற்றியை யுடைய பெண்கள் சூழ்ந்திடக் கொலு வீற்றிருக்கும் திருமண்டபத்துப் பண் பொருந்தும் மொழியையுடைய பரவையாரது பாடல் ஆடல் ஆகிய இவைகளைத் தம் கண்முன்னாகக் கண்டு கேட்கப்பெற்றாற் போலவே கருதினார். *** ஆரூர்ப்பெருமானின் திருமுன்னாக வரும் காற்று நினைவு வரவே அதனைத் தொடர்ந்து, அவர் அமர்ந்திருக்கும் திரு வோலக்கத்தினில் பரவையார் ஆடும் ஆடலும் பாடலும் காணும் காட்சியும் நினைவிற்கு வந்தது. இம்மூன்று பாடல்களானும் நம்பிகள் திருவொற்றியூரில் இருந்தருளிய காலமும், இதுபொழுது நிகழ்ந்து வரும் காலமும் உணர முடிகின்றது. முன் (பா. 269) முன்னிய காலங்கள் பலமுறைமையினால் வந்தகல எனப் பன்மைப்படக் கூறவே, இரண்டு மூன்று பருவ காலங்களாவது நம்பிகள் சங்கிலியா ரோடு ஒற்றியூரில் உறைந்திருக்கவேண்டும் எனக் கருதலாம். பின் னர்ப் பங்குனித் திருநாளுக்குப் பண்டுபோல் வருவாராகி எனக் குறிப்பதால், இவர் இந்நினைவோடு சங்கிலியாரைப் பிரிந்து செல்லும் காலம் இளவேனிற் காலம் எனத் தெரிகிறது. இளவேனிற் காலத்துப் பிரியும் இவர் இதற்கு முந்திய காலங்கள் பல செல்ல இங்கிருந்தார் எனவே, கார் காலத்தில் சங்கிலியாரைத் திருமணம் செய்துகொண்டு இருக்கலாம் எனக் கருத இடனுண்டு. எனவே கார் காலத்தில் சங்கிலி யாரை மணந்த நம்பிகள் கூதிர், முன்பனி, பின்பனி ஆகிய காலங்களில் அப்பெருமாட்டியாரோடு உடனுறைந்து, பின் வேனிற் காலமாகிய பங்குனி மாதத்தில் பிரிந்து சென்றுள்ளார் என்பது விளங்குகிறது. சிவக்கவிமணியார் உரையும் காண்க.
பூங்கோயிலில் வீற்றிருக்கும் புற்றிடங் கொண்ட பெருமானாரை, நீங்காத காதலினால் தம்மை நினைத்திருப்பவரை தாமும் நினைந்து அருளுவாரைத் தாம் முன்னைய நாள்களில் பணிய, அதனால் வருகின்ற இன்பப் பயனை உணர்வாராகிய அவர், இங்கே நான் மறந்தேனே என எண்ணிப் பதைப்பால் மிகவும் மனம் அயர் வாராய், *** தம்மை நினைத்திருப்பவர்களை, இறைவர் தாமும் நினைந்தருளுவார். 'தீர்ந்த அன்பாய அன்பர்க்கு அவரினும் அன்ப போற்றி' எனவரும் திருவாக்கும் காண்க.
மின்போல் ஒளிரும் செஞ்சடையையுடைய பெருமானை, மறைகட்கெல்லாம் முதற்பொருளாயினானை, சீர் மன்னிய புகழுடைய திருவாரூரில் மகிழ்ந்திருப்பவனை, மிகவும் நீள நினைந்து, பலபடப் புகழ்ந்த சொற்களாலாய 'பத்திமையும் அடிமை யையும் கைவிடுவான்' எனத் தொடங்கும் இசையுடைய பதிகத்தால் பாடி, மிகவும் இரங்கினார். *** 'பத்திமையும் அடிமையையும் கைவிடுவான்' எனத் தொடங்கும் பதிகம், பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 51).
பின்பொரு நாள், திருவாரூரினை மிகவும் நினைந் தருளி, நினைக்க இனிமைதரும் பெருமானாரது திருவொற்றியூர்க் கோயிலுக்குள் சென்று பணிந்து, தாம் திருவாரூருக்குப் போக ஒருப் பட்டுத் திருவொற்றியூர் நகரினின்றும் அகன்றிடத் தாம் முன்செய்த சூளுரையால், தம் அடி பெயர்ந்திடும் நிலையறியாது கண் ஒளி மறைய மயங்கினார். ***
மேற்செய்வதறியாது திகைத்தருளி, நெடிது பெருமூச்செறிபவர், மைபூசிய கண்களையுடைய சங்கிலியார்பாலா கச் செய்த சூளுரையை மறுத்தலால், இவ்விளைவு நேர்ந்தது என எண்ணி எம் பெருமானைக் கொடிய இத்துயர் நீங்கிடப் பாடுவேன் என நினைந்து,
குறிப்புரை:

'அழுக்கு மெய் கொடு' எனத் தொடங்கும் செஞ் சொல் திருப்பதிகத்தை, ஆதியாய திருவொற்றியூர் இறைவனாரைப் போற்றி வணங்கும் நெஞ்சோடு தாழ்ந்து, அங்கு நின்று பாடும் அவர், உமையொரு கூறராய பெருமானாரின் மலரனைய திருவடிகளை நினைந்து, தமக்கு நேர்ந்த இழுக்கு நீங்கிட வேண்டும் என்று இரந்து துயர் தரும் செயலற்ற நிலைக்கும் தமக்குக் கண்பார்வை இழந்ததால் வந்த பழிக்கும் நாணி, நல்ல இசை கொண்டு எம்பெருமானைப் போற்றிப் பணிந்து பல பல நினைவாராய், *** 'அழுக்கு மெய் கொடு' எனத் தொடங்கும் பதிகம் தக்கே சிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 54).
அங்குத் திருவொற்றியூர் இறைவர் செய்த அருள் அதுவேயாகத் தம் அழகிய கைகளைக் கூப்பி வணங்கித் திருவாரூர்ச் சென்று தொழ விரும்பிப் பொங்கும் காதலால், வழிக்கொள்ளும் அவர், முன்போவார் வழிகாட்டிடச் சென்று, இளம்பிறையைச் சடையிலுடைய பெருமானின் வடதிருமுல்லைவாயில் என்னும் திருப்பதிக்குச் சென்று வணங்கி, பெருமை மிகுந்த திருப்பதிகம் பாடு வார், 'சங்கிலிக்காக என் கண்களை மறைத்தீர்' எனப் பாடியருளினார். *** வடதிருமுல்லைவாயிலில் அருளிய 'திருவும் மெய்ப் பொருளும்' (தி. 7 ப. 69) எனத் தொடங்கும் தக்கேசிப் பண்ணில் அமைந்த பதிகத்தின் இரண்டாவது பாடலில் வரும் 'சங்கிலிக்கா என் கண் கொண்ட பண்ப' எனவருவதை ஆசிரியர் இங்குச் சொல்கிறார்.
தொண்டைமான் என்னும் அரசனுக்கு முன்னைய நாளில் அருள் புரிந்திடும், வடதிருமுல்லைவாயிலில் அமர்ந்தருளும் தலைவனை நினைந்து, 'அடியனேன் கொண்ட கொடும் துயர் களைந் திடுவாய்' எனப் போற்றித் திருவாரூர் மேல் குறித்த காதலால் வழிக் கொண்டு வருபவர், வண்டுகள் மொய்த்திடும் சோலைகள் சூழ்ந்து, மாட மாளிகைகள் நிரல்பட அமைந்து விளங்கிடும் திருவெண்பாக்கத்தில் உள்ள அடியவர்கள் நகர எல்லையில் எதிர்கொண்டிடத் தாம் அவரை வணங்கிக் கொலை புரியும் யானையை உரித்த சிவபெருமானது அக்கோயிலைச் சென்றடைந்தார். *** இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
குழைவிரவு வடிகாதா என்றலும், கோயிலில் உள் ளாயோ என்றதும் கடுஞ்சொற்களேயாகும். எனினும் அவற்றை அவர்தம் வருத்த மிகுதியால் கூற, பெருமானும் 'உளோம்' என்ற அளவில் கூட நில்லாது 'போகீர்' என்றும் கூறிப் போகச் செய்தமை நம்பிகளுக்குப் பெருவருத்தத்தைத் தந்துள்ளது. இதனைப் பாடல் தொறும் கூறுவதோடமையாது, 9ஆவது பாடலில், 'ஒன்னலரைக் கண்டார் போல்' என்று, அருளியது அவர்தம் வருத்த மிகுதியை மேலும் காட்டுவதாகும். 10ஆவது பாடலில் 'ஊன்றுவதோர் கோல் அருளி' என்றது அச்செயல்தானும் தமக்கு ஓராற்றான் ஆறுதல் தந்தமையைக் குறித்தருளியதாகும். இவ்வகையில் இப்பாடற்குறிப்பு கள், ஆசிரியர் தம் வரலாற்று அமைவிற்கு எடுத்துக்காட்டுகளா கின்றன. *** 'பிழையுளன பொறுத்திடுவர்' எனத் தொடங்கும் பதிகம் சீகாமரப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 89). என்ற வன்தொண்டர்க் கூன்றுகோ லருளி
இணங்கி லாமொழி யால்உளோம் போகீர்
என்றி யம்பினார் ஏதிலார் போல.

பெருமான் கோயிலின் திருமுன்பு நின்று, தமது முறைப்பாடு உரைப்பார்போலப் பாடிய தமிழ் மாலையாய இசை யுடைய திருப்பதிகத்தைப் பாடிய பின்பு, 'எனக்குப் பற்றுக்கோடாய பெருமானது அருள் 'இவ்வளவினதே போலும்' என மொழிந்து, தம்முடன் வந்த பெருமைமிக்க அடியவர்களுடன் வணங்கி, அப்பால் திருவாரூர் நோக்கி வழிக்கொள்வாராய்,
குறிப்புரை:

நெற்றிக்கண்ணை உடைய இறைவரின் திருப்பதி யினின்றும் நீங்கிப்போய், அன்பர்களுடன் தாமரை மலர்கள் நிறைந்த குளங்கள் புறமே சூழ இருக்கும் வயல்களை உடைய பழையனூர் வந்து சேர்ந்து, காரைக்கால் அம்மையார் தலையாலே வலங்கொள நின்ற, இளம்பிறையை முடியில் அணிந்த பெருமான் திருக்கூத்தியற்றி வரும் திருவாலங்காடு என்னும் பதியின் அயலாக, *** நம்பிகள் திருவாலங்காட்டின் உட்செல்லாது அயலே நின்று, இறைவரின் திருக்கோயிலை நோக்கியவாறே தொழுதற்குக் காரணம், அம்மையார் அக்கோயிலை வலங்கொண்டும் வணங்கியும் இருந்தருளும் காரணத்தாலாம். ஆளுடைய பிள்ளையார் இத்திருப்பதிக்குச் சென்றபொழுதும் இந்நியமமே கொண்டு வழிபட்டமையும் நினைவுகூரத் தக்கதாம்.
முன்பாக நின்று தொழுது போற்றி, 'முத்தா முத்தி, என்று தொடங்கும் இசையமைந்த திருப்பதிகத்தைப் பாடி மகிழ்ந்து, அவ்விடத்தினின்றும் நீங்கிச் சென்று, திருவூறல் என்னும் பதியில் தங்கி, வணங்கி, அப்பால் சென்று, அழியாத மதில் சூழ்ந்த அழகிய மாடங்களையுடைய திருக்காஞ்சி மாநகரினை அடைந்தார். *** 'முத்தா முத்தி, என்று தொடங்கும் பதிகம், பழம்பஞ்சுரப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 52). இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
தேன் உண்ணும் வண்டுகள் உலவிடும் சோலை களை உடைய காஞ்சி மாநகரில், திருக்காமக்கோட்டத்தில், உடம்பு டைய உயிர்க்கெல்லாம் ஒழியாத கருணையினால் ஆன அறத்தினை விரும்பிப் புரிந்தருளும் பெருமாட்டியின் திருக்கோயிலின் முன்பாக, வான் நோக்கி உயரும் திருவாயிலினை வணங்கினார் நம்பிகள்.
குறிப்புரை:

தொழுது விழுந்து, எழுந்து, அருளால் போற்றி, அப்பால் சென்று, முன்னான இவ்வுலகம் முழுதும் காத்தும் படைத்தும் அழித்தும் விளையாடும் முதல்வருடைய திருவேகம்பம் என்னும் திருப்பதியில், பழுதிலாத அடியவர்கள் முன் செல்லத் தாம் பின்னாகப் புகுந்து, பெருமானைப் பணிகின்றவராகிப் பேயனாகிய யான், பெரு மானின் திருமுன் நின்று யாதென்று மொழிவேன் என மொழிந்து, வணங்கியருளி,
குறிப்புரை:

விண்ணுலகத்தை ஆளுகின்ற தேவர்கள் அமுது உண்டு இறவாதிருப்ப, மிக்க பெரு நஞ்சுண்ட கருணையாளனே! கச்சி ஏகம்பம் உறைவானே! கடைப்பட்ட நாயேன் நினைந்து செய்யாத பிழையைப் பொறுத்து இங்கு யான் காண, எழில் திகழும் பவள வண்ணா! கண் தந்தருள்வாய்! என வேண்டி நிலத்தில் வீழ்ந்து வணங் கினார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
தாமரைமலர்போலும் செங்கைத் தளிரால் எடுத்து குளிர்ந்த மலர்கொண்டு போற்றி செய்து, சிவந்த கயல் மீனை ஒத்த கண்ணுடைய மலைக்கொடியாம் உமையம்மையார் பணிந்த சேவடி களை மிகவும் நினைந்து, பொங்கிடும் அன்புடன் வணங்கிப் போற்றி டும் நம்பிகளுக்கு, எம்பிராட்டி தழுவிடக் குழைந்து காட்டிய இறைவர் மறைந்த கண்களில், இடக்கண் பார்வையைக் கொடுத்தருளினார். *** இதுபொழுது அருளிய பதிகம் கிடைத்திலது. பிராட்டி தழுவக் குழைந்த இடத்துப் பெற்ற கண்ணாதலின், இடக்கண் கொடுத் தார் என அருளினார் போலும். கண் மறைந்த இடம் திருவொற்றியூரும், இடக் கண் பெற்ற இடம் காஞ்சிபுரமும், வலக் கண் பெற்ற இடம் ஆரூருமாகும். இம்மூன்றும் நிலத் திருப்பதிகளாதலின், (பிருதிவித் தலங்கள்) யாது யாண்டு ஒடுங்கியது, அஃது ஆண்டுநின்றே மீள உளதாம் என்னும் நியதியை அறிவிப்பதாக அமைந்துளது என நயம் காண்பர் சிவக்கவிமணியார்.
இந்நிலவுலகைக் கீண்டு தேடிய மாலும், அழகிய வானத்தைக் கடந்து சென்ற அயனும் முறையே திருவடியையும், முடியையும் காண இயலாத சிவபெருமான், இடக் கண் கொடுத்து, எம்பிராட்டியின் முலைச் சுவடு அணிந்த கோலத்தைக் காட்டலும், பெருமானை அணுக விழுந்து எழுந்து மனம் மகிழ்ந்து, 'ஆலந்தான் உகந்தவன்' என்று தொடங்கிப் பதிகம் பாடி, ஆடிப் பரவினார். *** 'ஆலந்தான் உகந்தவன்' என்று தொடங்கும் பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 61). இப்பதிகப் பாடல் தொறும் அம்மையார் வழிபடப் பெற்ற அரிய புண்ணியச் செயலையும், 'காணக் கண் அடியேன் பெற்றவாறே' என்ற அருளிப்பாட்டையும் நம்பிகள் அருளுகின்றார்.
திருப்பதிகம் பாடித் தம்வயம் இழந்து பணிகின்ற நம்பிகட்கு, உமையம்மையாருடன் பெரிதும் பொருந்தியிருக்கும் திருக்கோலம் காண்பித்திடத் தாம் கண்டு, நிறைகின்ற விருப்பத்துடன் பணிந்து உச்சியில் கூப்பிய கையினராய்த் தொழுது வெளியே வந்து, அன்பு பொருந்திய மெய்யடியாருடன் கும்பிட்டுக் காஞ்சிப் பதியில் இனிதே தங்கியிருப்பவர்,
குறிப்புரை:

உயர்ந்த இமயமலையில் தோன்றிய உமை அம் மையாரின் முலைச்சுவடும் வளையல்களின் தழும்பும் அணிந்த, இளம்பிறை சூடிய, கொன்றைப் பூவணிந்த சடையையுடைய பெருமா னைப் போற்றி செய்து, தமக்கு இடக் கண் பெற்ற அருள் அதுவேயாகக் கொண்டு தேன் பொருந்திய மலர்கள் பெருகிய சோலைகளையுடைய காஞ்சித் திருநகரத்தைக் கடந்து, மேற்செல்லும் நம்பிகள், பாடல்கள் மலரும் திருப்பதிகத்தைத் திருவாரூர் மேலாகப் பாடிப் போற்றி செய்து,
குறிப்புரை:

'அந்தியும் நண்பகலும்' எனப் பாட எடுத்து, உள் ளத்துத் திருவாரூருக்குச் செல்ல வேண்டும் என்னும் ஆர்வம் மிக, அப் பெரும்பதிக்கு என்று சேருவது எனும் குறிப்புடைய சந்தம் உடைய இசை யினைப் பாடி அன்பர்களுடன் மகிழ்ந்து வழிக்கொள்ளும் ஆரூரர், *** 'அந்தியும் நண்பகலும்' எனத் தொடங்கும் பதிகம் புறநீர் மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 83). பதிகப் பாடல்தொறும் 'திருவாரூர்புக்கு . . . . என்று கொல் எய்துவதோ' என நிறைவுறுவதை உளங்கொண்டு ஆசிரியர் இப்பாடலையும் அக்குறிப்பையும் எடுத்து மொழிவாராயினர்.
'அந்தியும் நண்பகலும்' எனத் தொடங்கும் பதிகம் புறநீர் மைப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 83). பதிகப் பாடல்தொறும் 'திருவாரூர்புக்கு . . . . என்று கொல் எய்துவதோ' என நிறைவுறுவதை உளங்கொண்டு ஆசிரியர் இப்பாடலையும் அக்குறிப்பையும் எடுத்து மொழிவாராயினர். *** மன்னு திருப்பதிகள்தொறும் என்பன காஞ்சியிலிருந்து ஆரூர் செல்வதற்கு இடைப்பட்ட பதிகளாம். அவை திருவில்வலம், திருக்குரங்கணில்முட்டம், புரிசை நாட்டுப் புரிசை, திருவெண்குன்றம், திருப்புறவார் பனங்காட்டூர், திண்டீச்சுரம் முதலாயினவாகலாம் என் பர் சிவக்கவிமணியார். பதிகங்கள் எவையும் கிடைத்தில. நம்பிகளின் பதிகங்களில் இவற்றில் சில வைப்புப் பதிகளாய் உள்ளன. இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
உயிர்களுக்கு அருள் வழங்கியருளும் அழகிய பெருமானாரைத் திருஆமாத்தூரில் எழுந்தருளியிருக்கும் அழகரை வணங்கி, இசை பொருந்திய திருப்பதிகம் பாடி, அப்பாற்சென்று, இந்நிலவுலகிற்கு மங்கலமாக விளங்கும் தொண்டைநாடு என்னும் வளமுடைய நாட்டினைக் கடந்து, கோச்செங்கட் சோழன் தோன்றிய சீர்மைமிகுந்த நாடாய நீர்வளமுடைய சோழ நாட்டினை அடைந்தார். *** திருஆமாத்தூரில் அருளிய பதிகம் 'காண்டனன்' (தி. 7 ப. 45) எனத் தொடங்கும் கொல்லிக் கௌவாணப் பண்ணில் அமைந்த பதிகம் ஆகும். இப்பதிகத்தில் வரும் நான்காவது பாடலும், ஒன்பதாவது பாட லும் நம்பிகள் யோகநெறியில் தலைநின்றவராதலை விளக்கி நிற்கின்றன. தொண்டை நாட்டின் சிறப்பினைத் திருக்குறிப்புத் தொண்டர் புராணத்து ஆசிரியர் விளங்கக் கூறியுள்ளார். அத்தகைய சிறப்புகளை உடைமையின் 'மங்கலமாம் பெருந் தொண்டை வளநாடு' என்றார். செங்கண் வளவன் - கோச்செங்கட் சோழர்.
அச் சோழநாட்டின் அருகே விளங்கிய திருநெல் வாயில்அரத்துறை என்னும் கோயிலைச் சென்று சேர்ந்து, மின்ஒளி விளங் கும் மழுப்படையை உடைய பெருமானின் நறுமணமுடைய மலர னைய திருவடிகளைப் பணிந்து, எழுந்து, சொல்லாக மலரும் மாலை யாய, 'கல்வாய் அகில்' எனத் தொடங்கும் பாமாலை பாடிச் சாத்தி, மேலான ஆர்வமுடைய திருத்தொண்டருடன் மகிழ்ந்திருந்தார். *** 'கல்வாய் அகில்' எனத் தொடங்கும் இந்தளப் பண்ணில் அமைந்த (தி. 7 ப. 3) இப்பதிகத்தில் 'எற்றே ஒரு கண்ணிலன்' என 3ஆவது பாடலில் வரும் குறிப்பு, நம்பிகளின் வரலாற்றிற்கு அரணாகும்.
சிவபெருமானுடைய திருவரத்துறை என்னும் திருப்பதியைப் பணிந்து, அப்பால் சென்று, அவ்வவ் விடங்களிலு முள்ள பல திருப்பதிகளையடைந்து விடைக் கொடியையுடைய சிவபெருமானது மணமிக்க மலரனைய திருவடிகளைத் தொழுது போற்றி, பெருகிய நீருடைய குளிர்ந்த காவிரியாற்றைச் சேர்ந்து, அன்பருடன் நீராடி எழுந்து, அப்பால் சென்று, பாம்பணிந்த பெருமா னின் திருஆவடுதண்டுறையை அணைந்தார். ***
அத்திருப்பதியை அணைய வரும் நம்பிகளை, அடியவர்கள் வந்து எதிர்கொண்டிட, அவர்களுடன் புகுந்தருளி, பெருகிநிற்கும் அருளின் சிறப்புடைய திருக்கோயிலினை வலம் வந்து, உள்ளே சென்று, எம்பிரானை நினைந்து, 'கங்கை வார் சடையாய் ஓர் கண்ணிலேன்' எனக் கவல்பவர், 'இங்கு எனக்கு ஆர் உறவு' என்று சிறந்ததொரு திருப்பதிகத்தை எடுத்துப் பாடி அருளினார். *** 'கங்கைவார் சடையாய்' (தி. 7 ப. 70) எனும் முதற் குறிப்புடைய பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும். பதிகப் பாடல் தொறும் 'யார் எனக்கு உறவு அமரர்கள் ஏறே' எனவரும் நிறை வுத் தொடரை ஆசிரியர் முகந்தெடுத்து மொழிந்துள்ளார். திருக்கடைக் காப்பில் 'சிங்கடியப்பன்' எனத் தம்மைக் குறித்திருப்பது, வரலாற் றிற்கு அரணாயுள்ளது. இப்பதிகத்து வரும் இரண்டாவது பாடலில், 'கண்ணிலேன் உடம்பில் அடுநோயால் கருத்தழிந்து உனக்கே பொறையானேன்' எனவரும் முறைப்பாட்டால், கண்ணிழந்ததோடு உடம்பை வருத்தும் மேக நோயும் நம்பிகளுக்கு இருந்தமை விளங்குகின்றது.
திருப்பதிகம் கொண்டு போற்றி செய்து, பணிந்து, திருவருளால் விருப்பத்துடன் திருத்துருத்தி என்னும் கோயிலை அடைந்து, பெருமானின் திருவடிகளை அன்பினால் வணங்கி, 'எம்பிரானே! அடியேனுக்குற்ற மேக நோயினை நீக்கியருள வேண் டும்' என வணங்குவாராய், *** பிணி நீங்க வேண்டிப் பாடிய திருப்பதிகம் கிடைத்திலது.
இவ்வாறு வேண்டிப் போற்றிய நம்பிகளுக்குப் பெருமான் திருவருள் புரிவாராய், 'பொருந்திய இப்பிணி முழுவதும் தீர்தற்கு இக்கோயிலின் அருகேயுள்ள நல்ல மலர்களில் வண்டுகள் மொய்த்துப்பாட விளங்கும் புனித நீரையுடைய வடகுளத்தில் குளிப் பாயாக' என அருளிட, அதுகேட்ட வஞ்சனையற்ற நம்பிகள் கை தொழுது, புறப்பட்டுச் சென்றார். *** வடகுளம் - திருக்கோயிலின் வடபுறத்தே உள்ளது. இதன் கரையில், ஒற்றைக்கண்ணுடைய திருவடிவில் நம்பிகளின் திருவுரு அமைந்துள்ளது. தீது நீங்கக் கடல், ஆறு, குளம் முதலியவற்றில் ஆடுவது பண்டு தொட்டு வரும் மரபாகும். இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
பெருகிய நீருடைய வடகுளத்துப் புனித நீர் முன் அணுகி நான்மறைகளும் திரண்டதொரு வடிவென இருந்தருளும் திருத்துருத்திப் பெருமானாரைத் தொழுது, மூழ்குதலும், அக்கணமே அவர் உடம்பில் இருந்ததொரு புதிய நோய் நீங்க, முத்தின் ஒளியை யுடைய திருமேனியை உடையராயினார். *** புதிய பிணி என்றார், கண்ணிழந்த பிணியினின்றும் வேறாதல் பற்றி. எனவே உடல் பற்றிய பிணி; மேக நோய் என்பர்.
கண்டவர்கள் வியந்திடக் கரையேறி, உடை அணிந்து, உள்ளத்துப் பெருகும் காதலினால் கோயிலை அடைந்து, அடியவர்கள் திருமுன்பாக நின்று, 'மின்னுமா மேகம்' எனத் தொடங்கி எடுத்த திருப்பதிகத்தை எட்டுத் திக்கில் உள்ளாரும் இறைவனது அற்புதத்தை அறிந்து உய்ய, ஏழிசையும் பொருந்தப் பாடினார். *** 'மின்னுமா மேகம்' எனத் தொடங்கும் பதிகம், காந்தாரப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 74). 'என்னை நான் மறக்குமாறு எம்பெரு மானை என்னுடம்பு அடும்பிணி இடர்கெடுத்தானை' என இப்பதிக முதற்பாடலில் வரும் தொடர், இவ்வரலாற்றிற்கு அரணா கின்றது. எம் பெருமானை, இடர்கெடுத்தானை மறக்குமாறு என்னை? எனக் கூட்டுக.
பண்ணின் இசைநிறைந்த இத்திருப்பதிகத்தைப் பாடிப் பெருமானுடைய திருவருள் மறவாது, அளவிறந்த அடியவர் களுடன் பணிந்து, அங்குத் தங்கி, அப்பால் சென்று, உளம் நிறைவான திருப்பதிகள் பலவற்றிற்கும் சென்று இறைவரின் திருவடிகளை வணங்கிச் சென்று, கண்ணிற்கு விருந்தாகும் நிறைவுடைய திருவாரூர் முன்னாகத் தோன்றக் காண்கின்றவர், *** பதிபிறவும் என்பன திருமயிலாடுதுறை, திருப்பேரளம் முதலாயினவாகலாம்.
அன்று தமது ஒரு கண்ணால் கொள்ளும் திருப் பார்வையால், திருவாரூரின் அற்புதம் முழுவதும் ஆரக் கண்டு இன்புற இயலாதவராய் நின்று, நிலத்தின் மீது வீழ்ந்து, நெடிதே மூச்செறிந்து, நேராக வணங்கி, எழுந்து, நம்பிகள், பொழுது மயங்கும் மாலைக் காலத்தில் திருவாரூர் சென்று, அங்குப் பரந்த சடையை உடைய தூவாயராகிய பெருமானை முன்னாகப் பணிதற்கு அணைந்தார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
அன்புமிகும் அடியவர்களுடன் உள்ளே சென்று வணங்கி, மேலான இசையையுடைய திருப்பதிகமாய, 'தூவாயா' எனப் பாட எடுத்தே, ' இங்கு எனது துயர்களைந்து கண்காணக் காட்டாய்' என்னும் பொருளியையப் போற்றி மகிழ்ந்து, கண்ணுதற் பெருமான் திருமுன்பு நின்று, அரிய தமிழ்மாலையைச் சூட்டினார். *** 'தூவாயா' எனத் தொடங்கும் பதிகம் பஞ்சமப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 96). இடைதெரிந்து - தம்வேண்டுகோளை விரும்பி ஏற்றற்குரியகாலத்தே. 'இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக' (குறள். , 712) என வரும் திருக்குறளானும் இப் பொருண்மை அறியப்படும். தூவாயார் - பரவையுண் மண்டளியில் எழுந்தருளியிருக்கும் இறைவர் பெயர். தூ - உண்ணுகின்ற; வாயார் - திருவாயினை உடை யவர். ஒருகால் வந்த ஊழிப்பெருவெள்ளத்தால் திருவாரூர் அழியா திருக்கக் காத்தவர் என்னும் குறிப்பினது. பரவை - கடல், உண் - உண்ணுகின்ற; மண்டளி - பெருமான் எழுந்தருளியிருக்கும் இடம். தூவாயர் என்பதற்கு தூ - பற்றுக்கோடு; ஆயார் - ஆயவர் எனப் பொருள்கண்டு எவ்வுயிர்க்கும் பற்றுக் கோடாயவர் எனப் பொருள் விரித்துத் தூ பற்றுக் கோடாதற்கு 'இனந்தூய்மை தூவா வரும்' (குறள். , 455) எனும் திருக்குறளையும் மேற்கோள் காட்டுவர் சிவக்கவி மணியார்.
கங்கை அணிந்த திருச்சடையையுடைய இறைவரை வணங்கி, அருள்பெற்று, வெளிப்போந்து, அவ்விடத்தே வேறாக இருந்து வந்த சிவனடியார்கள் பலருடன் கூடி விடைக் கொடியை உயர்த்திய பெருமானது பெருங்கோயிலாய திருமூலட் டானத்தைச் சேர்வதற்கு தக்க அருளுடைய காலத்தை உணர்ந்து, மாறிலாத திருவருள் நிறைந்த நடுயாமத்து வணங்கிட அங்கு வந்தணைந்தார்.
குறிப்புரை:

ஆதியாய பெருமானின் அன்பர்கள், இவர் எதிரில் வரக்கண்டு, அவர்கள் முகம் நோக்கிக் கோதிலாத இசையையுடைய பதிகத்தால், 'குருகு பாய' எனத் தொடங்கி எடுத்து, அவர்களை வினவுமுகமாகத் தாம் அயலவர்போல அவர்களைக் கேட்டுத் தமது கவலை மிகுதியினால் பாடிய பதிகம், எம்பிரான்பால் காதல் புரியும், கைக்கிளை என்னும் திணையில் அமைய, அத்தொண்டர்களுடன் கலந்து வந்தருளுவார், *** இம்முதற் குறிப்புடைய பதிகம் கொல்லிப் பண்ணில் அமைந்ததாகும்(தி. 7 ப. 37). காமப் பகுதி கடவுளும் வரையார்
சீர்மை மிகுந்த தேவாசிரியத் திருமண்டபத்தை முன்சென்று வணங்கி, மேகங்கள் படிந்த பெருங் கோபுரத்தைக் கை தொழுது, உள்ளே சென்று, மாலைகள் மிக விளங்குகின்ற பூங்கோயில் என்னும் பெயர் பூண்ட பெருமானது திருமாளிகையினை வணங்கிச் சேருகின்ற நம்பிகள், இறைவன் திருமுன்பு வருபவராய், ஆர்வம் மிகுந்த பெருங்காதலால் நிலத்தின்மேல் தம்வயமிழந்து வீழ்ந்தார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின
வீழ்ந்து எழுந்து கைதொழுது முன்னின்று விம்மி வாழ்வுடைய கண் ஒன்றால் கண்டு நிறைவு கொள்ளாது மனம் அயர்வார், ஆழ்ந்த துயர்க் கடலிடை நின்று அடியேனை எடுத்தருளி, தாழ்ந்து வேண்டிக் குறையிரக்கும் எனது கருத்தை நிரப்பிக் கண்ணி னைத் தாரீர் என வேண்டினார்.
குறிப்புரை:

திருநாவலூர் அரசரான நம்பிகள், திருவாரூரில் வீற்றிருந்த பெருமானை, திருமூலட்டானத்தே கோயில் கொண் டிருக்கும் பரம்பொருளை, உண்ணற்கரிய அமுதத்தைக் கண்களால் கண்டு மகிழ்தற்கு உள்ளத்துக் கொண்ட ஆர்வத்துடன், மற்றைக் கண்தாரீர் என வேண்டி வணங்கி, ***
'மீளா அடிமை' எனத் தொடங்கி, மிக்க மேலான தேவர்குலம் எல்லாம் மாளாதவாறு அன்றெழுந்த நஞ்சுண்டருளித் திருவாரூரில் இருந்தருளும் பெருமானை, நின் திருவடிகளை விரும்பி வணங்கி வரும் மெய்யடியார்களுக்கு வருகின்ற இடரை நீர் பார்த் திருந்து தரிக்க மாட்டீரே! எனும் குறிப்புடன் தோழமையும் ஆகிய திறத்தால் அழகிய சொற்களையுடைய அத்திருப்பதிகத்தைப் பாடினார். *** ஆளாதல் - அடிமையாதல். 'மீளா அடிமை' எனத் தொடங்கும் பதிகம், செந்துருத்திப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 95). அல்லல் சொன்னக்கால் வாளா அங்கிருப்பீர் என்பதை வினவு முகமாகக் கொண்டு காணில், வறிதே அங்கு இருப்பீர்? இருக்க மாட்டீரே! என்ற பொருளைச் சொற்குறிப்பால் அறியுமாற்றான், ஆசிரியர் இவ்வகையில் அமைப்பார் ஆயினார். அங்ஙனம் வாளா இருக்க மாட்டாதீர், இதுபொழுது மறுதலையாகிய இருப்பின் வாழ்ந்து போதீரே எனும் கருத்துடையதாக அருளுகின்றார் ஆசிரியர்.
உயிர்கட்கெல்லாம் முதல்வராய புற்றிடங் கொண்ட பெருமானார், நம்பிகள் அன்பினால் எடுத்து மொழியும் இத்துன்பங் களுக்கு இரங்கிக் கருணையால் குளிர்ந்த மலர்க்கண்ணைக் கொடுத் தருளலும், உடன் செப்பமாகப் பார்த்து, முக மலர்ந்து, தம்வயமிழந்த வராய், இறைவரின் திருவடிமலர்களில் பணிந்து வீழ்ந்தார்.
குறிப்புரை:

விழுந்தும் எழுந்தும் பலமுறையால் பணிந்து மிக வும் போற்றி, மனத்தில் எழுந்த மகிழ்வால் ஆடிப்பாடி இன்பவெள்ளத் தில் அழுந்தி, இரு கண்களாலும் அழகிய பொன் புற்றின் இடனாக முளைத்தெழுந்த செழுமையாய தண்ணளியையுடைய பவள ஒளி பரந்த சிவக்கொழுந்தின் அருளைப் பருகித் திளைத்து இன்புறுமவர்.
குறிப்புரை:

அவ்வழிபாட்டுக் காலம் நிரம்பும் வரையிலும் தொழுது போற்றிப் பொன்மயமாய் மிளிர்கின்ற அழகிய மாளிகை களை உடைய கோயிலினை, இவ்வுலகு உய்ந்திட வரும் நம்பிகள், நலம்கொள்ளும் விருப்பால் வலம் கொண்டு வந்து திருமாலும் நான் முகனும் முறையே வழிபாட்டிற்காகக் காத்திருக்கும் திருவாயிலைக் கடந்து, சீலமுடைய அன்பர்களுடன் தேவாசிரிய மண்டபம் அருகாக வந்து சேர்ந்தார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
இவ்வாறு இவர் இங்கிருப்ப, பரவையார், தம்மைச் சுந்தரர் பிரிந்து சென்றது முதல், தம் அழகிய மாளிகையினிடத்துத் தனிமை கூர்ந்திடத் தளர்ந்திடுவார், இரவு பகலாகவும், பகல் இரவாக வும் கால வேறுபாடு உணராதவாறு தனிமையின் துயரால் கழிகின்ற நாள்கள் எல்லாம் பொங்கு காதல் மிகப் பெருக வாட்டம் மிக, அக்கால எல்லை கழிய,
குறிப்புரை:

செம்மை நெறியாம் சிவநெறியைச் சேர்ந்த திரு நாவலூர்த் தலைவராய நம்பிகள், திருவொற்றியூர் சேர்ந்து பெருத்த மார்பகங்களையுடைய சங்கிலியாரைச் சிறப்பாகத் திருமணம் செய்து கொண்ட மெய்ம்மையை, அவர்தம் நிலையை அறிந்திடத் தாம் அவர்பால் விட்ட மக்கள் வந்து சொல்ல, அதுகேட்டலும், தம்மையும் அறியாது எழுந்த சினமிகுதியால் தாங்கொணாத நெஞ்சமொடும் தளர்ச்சியுறுவார்
குறிப்புரை:

மெல்லிய மலர்ப்படுக்கையில் துயில் கொள்ளார். கண்விழித்து ஆறுதலாக இருக்கவும் அறியார். பொன்பதித்த பூந்தவி சின் மேலும் இருக்க மாட்டார். நில்லார். நடந்திடார். வேறிடம் போகார். மன்மதனுடைய மலராய மழையிலும் நீங்கார். சுந்தரரை மறக்கவும் மாட்டார். சினம் மிகுதியால் அவரை நினைக்கவும் மாட் டார். இந்நிலையில் என் செய்வார்? என்பினையும் ஊடுருக்கும் புல வியோ! பிரிவோ! இவ்விரண்டானும் வரும் துயரின் இடைப்பட்டார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
இவ்வாறான கவலையின் துயரால் அழிகின்ற நாள்களில், வளைந்த இளைய வெண்ணிறமுடைய பிறைக்கொழுந் தைச் சூடிய முடியையுடைய திருவாரூர்ப் பெருமான் கோயில் முன் நம்பியாரூர் வந்து சேரலும், குவளையனைய கண்களையுடைய பரவையாரது மாளிகையில் முன்போலச் சென்றிடும் ஏவலர்கள், யாவரும் உள்ளே சென்றிடற்கு அனுமதி இல்லாதாக வெளியே நின்றார்கள்.
குறிப்புரை:

அவ்வாறு நின்றவர்களில் சிலர், திருவாரூரர் எதிர்சென்று சொல்லுவார், 'திருவொற்றியூரில் நிகழ்ந்த செய்கை எல் லாம் ஒன்றும் ஒழியாத வகை அறிந்து, அங்குள்ளார் எங்களை உட் புகாதபடி வெளியே தள்ளிடப் பரவையாரது மாளிகை முற்றத்தின் வெளி யில்கூடி நாம் போகமுடியாது போனோம்' என்று கூறி வணங்கினர்.
குறிப்புரை:

மற்று அம்மாற்றம் கேட்டு அழிந்த மனமுடைய ராகிய நம்பிகள், 'இனி இதனுக்கு என்னோ செயல்?' என்று உணர்ப வர், அதற்காக உலகின் நீதி இயல்பைக் கற்ற மாந்தர் சிலர் தம்மை அழைத் துத் தமது காதலியார் பரவையார் கொண்ட சினத்தைத் தெரிந்து, அதுதீர்தற்கேற்ப நன்மை கூறித் தெருட்டுமாறு செல்லவிட்டார்.
குறிப்புரை:

நம்பிகளின் அருளாணைவழிச் சென்ற அப் பெரியோர்களும், பெண்மணியாம் பரவையார் தம் மாளிகையினை அணைந்து, அவர்தம் செற்றத்தைத் தணிக்கும் தன்மையால், வெம் பிடும் கவலையாய புலவியெனும் கடலில் வீழ்ந்து அழுந்திக் கரை காணாது தவித்திடும் மின்னலை ஒத்த சிற்றிடையை உடைய பரவை யார் திருமுன்பு சென்று, 'எம்பிராட்டிக்கு இத்தன்மை தகுதியாமோ?' என்று பலவும் எடுத்துச் சொன்னார்கள். *** பண்பு புரியும் பாங்கினால் என்பதற்குக் கற்பை அவா விய நிலமையால் புலவி என்னும் கடலில் அழுந்தி நிற்கும் பரவையார் எனப் பொருள் கொள்வாரும் உளர்.
முன்னர் இனியவாகக் (சாமமாக) கூறிப் புலவி நீக்க முயன்றவர்கள், மேற்கொண்டு புலவி கொள்வதாலாய இன்னாமை யையும், அது நீங்கி வாழ்தலாகிய இனிமையையும் ஆக வேறுபடுத்திக் (பேதமாக) கூற, பரவையாரும் அவர் உரையை மறுத்து, மனத்தில் கொண்ட சினம் ஆறாதவராய்க் 'குற்றம் பொருந்திய அவர் திறத்ததாக இனியும் நீர் சொல்ல முற்படின், எனது உயிர் நீங்கிடும்' என்று கூற, அதுகேட்ட அப்பெரியோரும் அஞ்சி வெளியே போந்தார்கள். *** இப்பாடலில் பேத நிலைமை (வேற்றுமைப்பட) கூற என்றதால், இதுகாறும் கூறியது சாம நிலைமை (இன்சொல்லாக) என்பது பெற்றாம். இன்சொற் கூறல் (சாமம்), வேறுபடுத்திக் கூறல் (பேதம்), கொடுத்தல் (தானம்), ஒறுத்தல் (தண்டம்) என ஒருவர் ஒருவரை ஆற்றுப்படுத்தும் நிலை நான்காம். இவற்றுள் புலவி நீக்கத்திற் கெனக் கொளற்குரியன முன்னைய இரண்டுமேயாதலின், இவ்விரு வகையானும் கூறினார்கள். பிள்ளைத் தமிழில் அம்புலிப் பருவத்தில் இந்நால்வகையானும் ஆற்றப்படுத்தும் மரபைக் காணலாம்.
வெளிப்போந்த பெரியவர்கள், அங்கு நிகழ்ந்தன வற்றை மலர்கள் நிறைந்த குளிர்ந்த வயல்களை உடைய திருமுனைப் பாடி நாட்டின் தலைவராய நம்பிகளுக்கு எடுத்துச் சொல்லுதலும், அது கேட்ட அவர் அஞ்சி அயர்ச்சி கொள்வாராய்த் தம்மிடத்துக் கொண்ட கவலைக் கடற்குக் கரைகாணும் துணையைக் காணாராய்ப் பெருந் துன்பத்தால் மனமழிந்து, சோர்ந்து, அன்றைய இரவின் இடையாம மாய கடலில் அழுந்தி நிற்பாராயினர். *** இடையாமம் - யாமத்தின் இடை; பாதியிரவு - நள்ளிரவு.
அருகில் இருந்த ஏவலர்களும் துயில, நடுயாமத்து நிகழும் வழிபாடும் அடங்கிப் பெருகிய இவ்வுலகில் உள்ளாரும் தமது செயல் ஒழிந்து உறங்கப் பேயும் உறங்கிக் கிடக்கும் இருளிடத்து, மணம் கமழும் மலர்க் கொன்றையைச் சூடிய திருமுடிமேல் பாம்பை யும் இளம்பிறையையும் கொண்ட ஒப்பற்ற இறைவரின் தோழரான நம்பிகள் தனியே இருந்து வருந்திச் சிந்திப்பாராய், *** இப்பாடலில் வரும் முன்னிரண்டடிகள், 'மன்னுயி ரெல் லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லைத் துணை' (குறள். , 1168), 'நனந்தலை உலகமும் துஞ்சும் ஓர்யான்மன்ற துஞ்சாதேனே' எனவரும் சங்கச் செய்யுள்களை நினைவு கூரச் செய்கின்றன.
முன்னர்ச் செய்த வினையின் பயனாய், இப்பிறவியில் இத்துயருக்குக் காரணமாகும் பரவைபால் நான் சென்றிட, என்னை அமையாக உடையவனே! நினைந்தருளாய்! என நினைவு கொள்பவர், இவ்யாமத்து நீர் எழுந்தருளி அன்னப் பறவையை ஒத்த அப்பரவையின் புலவியை நீக்கினால் அன்றி, யான் உய்தற்குரிய செயல் இல்லை, என்று தம் பெருமானின் திருவடிகளைச் சிந்தை செய்தார்.
குறிப்புரை: இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.

அடியவர்களின் துன்பங்களைக் கண்டு பொறுக்க லாற்றாத இறைவர், தாம் விரும்பி ஆண்டுகொண்ட தோழராய நம்பிகளின் குறையினை முடிக்காமல் மனம் வலித்திருக்க வல்லமை உடையரோ? (அல்லர். ஆதலின்,) உலகம் முழுதும் பெற்ற உமையம் மையாரின் அழகிய தளிரனைய கைகளின் வளையல் தழும்பும், முலைச் சுவடும் கொண்ட இறைவர், திருமாலும் பன்றியாய்ச் சென் றுணர முடியாத திருவடிகள் இந்நிலவுலகில் தோய்த்திடத் தம்தொண் டர் தம்மை நேராகக் காணும்படியாக வந்தருளினார். ***
தம் பெருமான் எழுந்தருளி வந்திடலும், அவரைக் கண்டு தாங்கற்கரிய மகிழ்ச்சியினால் உடல் உறுப்புக்கள் அனைத்தும் நடுக்கம் கொண்டிட, மயிர்க்கூச்செறிந்திட, நம்பிகளும் அவர் திரு முன்பாக எழுந்து, தாமரை மலர் அனைய கைகள் உச்சிமேற்குவிய வணங்கி, உமையொரு கூறராய சிவபெருமானின் சிவந்த தாமரை போலும் திருவடியின் கீழ் வீழ்ந்தார்.
குறிப்புரை:

வீழ்ந்து வணங்கி எழுந்து, மிக்க விருப்பினுடன் போற்றி முன்நின்ற தோழரை நோக்கி, 'உனக்கு நேர்ந்தது என்ன?' என்று வினவ, நம்பிகளும் தொழுது தமது குறையைச் சொல்வாராய், 'யானே தொடங்கிய குற்றத்தின் உட்பட்டு அழுந்தி வேதனையுறும் என்னை இன்னமும் எடுத்தாள வேண்டும், அது உமக்காய செயல் ஆகும்' என்று கூறி,
குறிப்புரை:

'அடியேன் அங்குத் திருவொற்றியூரில் நீரே அருள்புரிந்திட, வடித்த வேல்போலும் கூரிய கண்களையுடைய சங்கிலியாரைத் திருமணம் செய்து கூடிய தன்மை எல்லாவற்றையும், கொடிபோலும் சிறிய இடையையுடைய பரவை தான் கேள்வியுற்றுச் சினம் கொண்டு, தன்பால் யான் செல்லின் தான் மடிவேன் என்று துணிந்துள்ளாள்; இதற்கு நான் என் செய்வேன்?' என்று கூறியருளி,
குறிப்புரை:

'என் தலைவனே! நான் உமக்கு இங்கு அடியேன் என்பதனால், அத்துடன் நீர் எனக்குத் தாயினும் இனிய கருணை உடைய நல்ல தோழருமாய தலைவருமாகுவீரானால், எனக்குற்ற அறிவெல்லாம் பரவைபால் கொண்ட காதலால் அழிந்திடும் வருத்தத் தைக் கண்டு, அவ்வளவில் நீர் இவ்விரவே பரவைபால் சென்று, அவள் கொண்டிருக்கும் புலவியை நீக்கியருள வேண்டும்' என்று கூறலும்,
குறிப்புரை:

அடியாரது அன்பினையே வேண்டி நிற்கின்ற பெருமான், தனது அடியவராய நம்பிகள் வேண்டியதையே தாம் செய்திட விரும்பி, முன்பாக நின்று விண்ணப்பம் செய்த அவர்தம் முகத்தை நோக்கியருளி, 'சுந்தரனே! உனது துன்பத்தை ஒழித்திடு வாய், யாம் உனக்கு ஒரு தூதனாக இப்பொழுதே, பொன்னால் செய்த அழகிய அணிகளை அணிந்த பரவைபால் செல்கின்றோம்' என்று அருள் செய்தார். *** இந்நான்கு பாடல்களும் ஒருமுடிபின.
எல்லை இல்லாத களிப்புடையராகி இறைவரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி எழுந்து, தம்மால் இயன்ற வகையால் எல்லாம் வாழ்த்தி, வாழ்வு பெற்ற நம்பிகள், தமது தலைவரை நோக்கி, 'முல்லை மலர்போலும் முறுவலுடைய பரவையின் முகில்கள் படிந்த மாடத்திடைச் சென்றிட, இங்கு நில்லாது இப்பொழுதே எழுந்தருளிச் சென்று, அவள் புலவியை நீக்கியருள்வீராக' எனத் தொழுதார். *** ஈண்ட - விரைவாக. 'நில்லாது ஈண்ட எழுந்தருளி நீக்கும்' என வேண்டியது நம்பிகளின் தோழமைத் திறம் பற்றியாம்.
தேவர்கள் வாழ்ந்திடக் கருணையால் நஞ்சினை அமுதமாக உண்ட நீலநிறமுடைய அழகிய திருக்கழுத்தையுடைய ஒப்பற்றவரும், அயன் திருமால் என்னும் இருவரும் காண அரிய வரும் ஆகிய இறைவர், வண்டுகள் மொய்த்திடும் மலர்களைச் சூடிய கூந்தலையுடைய பரவையாரது திருமாளிகையினை நோக்கிப் புறப்பட்டுத் தமது தொண்டனாரின் துயர் தீர்த்திடத் தாம் ஒரு தூதுவராக எழுந் தருளிச் செல்ல, ***
தேவாசிரிய மண்டபத்தில் முறையாகத் தங்கி இருக்கும் தேவர்கள் பலரும் எழுந்து பெருமானை வணங்கிச் செல்ப வர்கள் செல்ல உடன்வருபவர்கள் வர, ஒழிந்தவர்கள் புறத்தாய்ப் போக! ஒளிமுதலாம் சிவபெருமானுக்கு ஒழியாது அணித்தாக நெருங்கித் தொண்டுபுரியும் தொழில் உள்ளோர்களும், பூதரும், கண நாதரும், மூப்பினை நீங்கிச் சாவா உடம்பெய்திய தவமுனிவர்களும், யோகியர்களும் ஆகிய அனைவரும் முன்னாகச் சென்றிடவும்.
குறிப்புரை:

அருகே பெருமானாய பெரிய தேவருடன் அணைந்து வருகின்ற அந்த இருடிகளும், எம்பிரான்பால் பொருந்திய நண்புடைய நிதியின் தலைவனாய குபேரனும் முதலாக உள்ளோர் மகிழ்ந்து போற்றிடத் தெருவும் வானும் நிறைந்த நறுமணம்மிக்க மலர் மழையைப் பொழிந்து வணங்கிட, ஒப்பற்ற அன்பர் ஆகிய சுந்தரர் விடுகின்ற பெருமானாராய தூதர், தூய திருவீதியில் போதரவும். ***
திருவடியை முன்தேடிக் காணாதாரான திருமாலும் அயனும் இப்பொழுது நேராகக் கண்டு கண் குளிர வணங்கிடும் காலம் இதுவென்று அவரை வாருங்கள் என அழைத்தாற் போலக் கடலினின் றும் தோன்றிய நஞ்சை உண்டு இருண்ட திருக்கழுத்தினை உடைய இறைவரின் திருவடித் தாமரை மலர்மேல் அணிந்த சிலம்புகள் ஒலித் திட, குவளை மலர்போலும் அழகிய கண்களையுடைய பரவையார் திருமாளிகையை நேராக நோக்கி, ***
பெருமான் விரைவாக எழுந்தருள, அவருடன் முன்கூறப்பெற்றவர்கள் பலரும் பின்தொடர, ஒலிக்கும் அலைகள் சூழ்ந்த கங்கைநீரைப் பாம்பு தொடர, அரிய இளம்பிறையின் அருகே வாசனையுடைய கொன்றை மலர் மாலையின்மீது வண்டினம் தொடர, உடன் மறைகளும் தொடர, நம்பிகளின் மனமும் தொடர, வரும்பொழுது,
குறிப்புரை:

பெரிய கடலினும் மிக முழங்கிப் பேரொலி புரியும் மதயானையை உரித்து, அதன் தோலைப் போர்த்த சிவபெருமானது இருமருங்கும் சூழ்வார் இவ்வண்ணம் திருவீதியில் நெருங்குதலால் அழகிய கோலமுடைய வீதிவிடங்கராய பெருமான் மகிழ்ந்துறையும் செல்வமுடைய திருவாருரின் இந்த ஒரு வீதியிலேயே சிவலோகம் முழுவதும் காணக் கூடியதாக உள்ளது. *** பெருவீரை - பெரிய கடல்; இவ்வாறு பாடல்களும் ஒருமுடிபின
இந்நிலவுலகம் உய்ந்திட எழுந்தருளிவரும் சுந்தர ரின் தூதுவர், பரவையாரது அழகிய நல்ல திருமாளிகை வாயிலில் சேர்வாராகி, முன்னாகத் தம்மைச் சூழ்ந்து வந்தார்கள் அனைவரை யும் வெளியே நிற்கப் பணித்து தொடர்ந்து தம்மை வழிபாடு செய்துவரும் சீலமுடைய சிவவேதியராய வடிவு கொண்டு, அந்த மாளிகை வாயிலைத் தனியே சென்றடைந்தார்.
குறிப்புரை:

சென்று, கதவம் நன்கு அடைக்கப்பெற்ற அழகிய அவ்வாயிலில் நின்று, 'பரவையே! கதவைத் திறந்திடுவாய்' என்று அழைத்திடச் செறிந்த, சிறந்த, மெல்லிய கூந்தலையுடைய பரவையா ரும், ஒரு சிறிதும் துயிலாது புலவியால் வாடி அயர்பவர், என்னை அடிமையாக உடைய திருவாரூர்ப் பெருமானுக்குப் பூசனை புரிந் திடும் நெருங்கிய முப்புரி நூலையணிந்த மார்பையுடைய சிவவேதி யர் போலும் அழைத்தார் எனத் துணிவு கொண்டு,
குறிப்புரை:

இளம்பிறை வாழ்தற்குரிய திருச்சடையையுடைய சிவபெருமானுக்குப் பணிகளைச் செய்துவரும் சிவவேதியர், நடு யாமத்து இவ்விருளில் இங்கு வந்தது என்ன காரணமோ என்று பெரிதும் அச்சம் கொண்டு எழுந்து, வாயில் வந்து அழைத்தவர், உமை யொரு கூறராய சிவபெருமானாராவது அறியாதே, பாதியாய பிறை போலும் அழகிய நெற்றியையுடைய பரவையாரும், பதைப்புடன் வந்து தமது வாயிலின் கதவைத் திறந்தார். *** பாதி என அடிதோறும் வரும் சொல், முதல் அடியிலும் நான்காவது அடியிலும் மதி என்பதனோடும், இரண்டாவது அடியில் இரவோடும், மூன்றாவது அடியில் உமையம்மையாரோடும் இயைந்து சொற்பொருள் பின்வருநிலயணி அமைய அமைந் திருப்பது அழகு தருகிறது. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
நிலைபெற்ற தோழராகும் உரிமையுடைய சுந்தர ரின் தூதர், தமது மாளிகை வாயில் முன்னாக நின்றாரைக் கண்டு வணங்கிப் பரவையார் உலகம் எல்லாம் உறங்குகின்ற பெரு யாமத்திடை, என்னை யாளும் பெருமான் இங்கு எழுந்தருளினார் என்னும்படி, மின்னும் அழகிய நூலணிந்த மார்பினையுடையீர்! நீர் இங்கு வருதல் வேண்டும் செயல் யாதோ? என்று வினவினார். ***
கங்கையாற்றை மறைத்து வைத்த பெருமான் அருளிச் செய்கின்றார், 'பெண்ணே! நான் சொல்வதை நீ மறுத்திடாது செய்யின் நான் வந்த காரணத்தைச் சொல்வேன்' என்றலும், அது கேட்டு அழகிய கயல்மீன் போலும் நீண்ட விழியையுடைய பரவையா ரும், 'அக்காரணத்தை நீர் சொல்லியருளினால் அது இங்கு எனக்கு இசையுமாகில் நான் இசைய இயலும்' என்றலும், ***
நீர் என்ன நினைந்து என்பால் வந்தது? அதனை இன்னதென்று சொல்லியருளிச் செய்தால், பின்னர் அஃது என்னால் முடியுமாகில் நான் செய்திட முடியும் எனக் கூறிடலும், அதுகேட்ட எம்பெருமானார் தாமும், 'மின்னலை ஒத்த சிற்றிடையையுடைய பெண்ணே! சுந்தரன் இங்கு வரப்பெறல் வேண்டும்' என்றலும், அதுகேட்ட நல்ல நெற்றியையுடைய பரவையாரும், 'மிகவும் நன்று, நம்முடைய பெருமை' என்று சொல்வாராய்,
குறிப்புரை:

பங்குனி உத்தரத் திருநாளுக்கு வழக்கம்போல மீண்டு என்னிடம் வருவார்போல இங்கு என்னைத் தனியே விடுத் துப் பிரிந்து சென்று, திருவொற்றியூர் சேர்ந்து, அங்கே சங்கிலியாரு டன் தொடர்பு கொண்ட அவருக்கு, இங்கு ஒரு சார்வும் உண்டோ? இந்த இரவிலே நீர் வந்து சொன்ன இச்செயல்தானும் நன்றாக இருக்கின்றது என்றார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
இறைவரும் அதனைக் கேட்டு, 'பெண்ணே! நீ உனது தலைவனான சுந்தரன் செய்த குற்றங்களை மனத்தில் கொள்ளாது, அதனால் விளைந்த புலவியினின்றும் நீங்கி, நின் துன்பத்தை ஒழித் திடவன்றோ யான் வேண்டிக் கொண்டது, ஆதலால் நீ மறுத்து இருப்பது தகாது' என்று சொல்லியருளினார் *** நோ- துன்பம் : தகவு - தன்மை. 'நோநொந்து அறனல்ல செய்யாமை நன்று' (குறள். , 157) எனவரும் திருவாக்கும் காண்க.
அந்தணராய் வடிவுகொண்ட பெருமானாரை நோக்கிப் பரவையாரும், 'குறித்த இச்செயலுக்காக நீர் இங்கு வருதல், நும் பெருமைக்குத் தகுவதன்றாம்; திருவொற்றியூரில் சங்கிலியாரிடம் அப்பதியிலேயே இருத்தற்கு உறுதிபூண்டார். அவர் இங்கு வருவதற்கு இசையேன்; நீரும் போமின்!' என்று மறுத்துச் சொன்னார். *** உறுதி - அப்பதியிலேயே இருத்தற்காம் உறுதிமொழி. (சங்கிலியாரிடம் செய்த சபதம்).
அந்தணராக வந்த இறைவர், அதுகேட்டு உள்நகை யுடையராய், உண்மையாய தம் தன்மையை வெளிப்படக் காட்டாரா கித் தம் தனிப்பெருந் தோழனார், பரவைபால் கொண்ட வேட்கையின் விளைவைக் கண்டு மகிழ்ந்தருளும் திருவிளையாட்டினைத் திரு வுளங்கொண்டு, மணம் கமழும் கூந்தலையுடைய பரவையார் மறுத்த அச்சொல்லையே ஏற்றுக்கொண்டு, மீண்டு அருளினார். *** யாவர்க்கும் முன்னவனே முன்னிற்கும் பொழுது முடி யாத பொருள் உளதோ? இன்று; எனினும் சுந்தரருக்குப் பரவையார் பால் இருக்கும் பெருவேட்கையைக் காணும் திருவிளையாட்டால் மீண்டு சென்றார், என்றார்.
இறைவரைத் தூதுவராகப் போகவிட்டு வரவு பார்த்திருந்த தொண்டர் சுந்தரரும், 'நல்ல அழகிய நெற்றியுடைய பர வையின் புலவியை நீக்கப் போதருமாறு, அறிவிலாதே நான், நாதரைத் தொழுதேனே! என் செய்தேன்?' என்று புலம்புவார்; எவ்வாறாயினும் பரவையாரைத் தம்பால் கொண்ட காதல் பெருக இசைவித்துக் கொண்டே வருவர் என்று தம் கருத்தினில் கொள்வாராய், ***
இங்கு நின்றும் பரவையின் மனைக்குச் சென்ற புண்ணியர் என் செய்தாரோ? நம் தலைவரைக் கண்டால் பரவையும் மறுப்பாளோ? எவ்வாறாயினும் எனது அயர்ச்சி அறிந்து எழுந்தரு ளிச் சென்ற பெருமான், பரவையது கலக்கத்தை நீக்கி ஆறுதல் செய் தன்றி மீண்டு வரமாட்டார் என நினைந்து,
குறிப்புரை:

மீண்டு வரும் பெருமானை வழியில் எதிர் கொள்ளத் தாம் எழுந்து செல்வார்; ஆனால் அவர் வரவைக் காணாது மீள்வார்; மனம் அழிவுற மயங்கி நிற்பார்; அச்சோர்வுடன் ஒருபுறம் இருப்பார்; நெற்றியில் கண் உடைய பெருமான் வரத் தாழ்த்தார் என்று மீளவும் எழுவர்; மன்மதன் பொழிகின்ற மலர்மாரி வீழ ஒதுங்குவார்; இவ்வாறு பெருந் துயரமுற்றார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
பரவையாரிடத்துச் சுந்தரருடைய தூதுவராகச் சென்ற பாம்பணிந்த சடையையுடைய பெருமான், மீண்டு, தம்மை அறியுமாறு சுந்தரர்பால் வரும்பொழுது, பெருமானது ஒளியால் இரவின்றிப் பகல் என ஒளி தோன்றிட, நம்பிகள் அதுகண்டு எதிர் எழுந்து, பெருமானது முன்பாக அணையை உடைத்தெழும் விரை வான நீர் வெள்ளம் போன்று, மனத்தில் பெரு மகிழ்வுடன் சென்றார்.
குறிப்புரை:

திருமுன்பு சென்று, தம் பெருமானைத் தாழ்ந்து, அவரது திருமுக மலர்வினால் முறுவல் செய்திடப் பெருமான் கொண்ட திருவிளையாட்டினை உணராராகித் தமக்காகப் பரவையின் புலவியை நீக்கி வந்தார் என்று நினைந்து, பெருமானை நோக்கி, 'ஐயனே! அன்று நீர் என்னை அடிமையாக ஆண்டு கொண்டருளிய செயலிற்குத் தகவாகவே, இன்றும் பரவையினது புலவியைத் தீர்த்து இங்கு வந்தருளினீர்' என மொழிந்தார்.
குறிப்புரை:

அவ்வாறு விளம்பிய சுந்தரருக்கு, இறைவர் அருளிச் செய்வாராய், 'நம்மை நீ தூதுபோம்படி சொல்ல, நாம் போய் பரவையாரது இல்லத்தை அடைந்து, பருத்த மார்பகங்களையுடைய அவளுக்கு உன் தன்மை எல்லாம் கூறியும், அவள் ஏற்றுக்கொண் டாள் இல்லை; நாம் பலகால் வேண்டி நின்றும் கடிய மொழிகளைக் கூறி மறுத்து விட்டாள்' என்றார்.
குறிப்புரை:

பெருமான் இவ்வாறு அருளக் கேட்ட சுந்தரரும், திடீரென மெய்நடுக்கம் கொண்டு, தொழுது, நீர் அருளிச் செய்யவும் உமது அடியாளான பரவையோ மறுத்திடுவாள்? (மறுக்க வல்லள் அல்லள்) நாங்கள் உம் அடிமைத் திறத்தில் வைத்து எண்ணற்குரிய ரல்லோம் என்பதை இன்று அறிவித்தீர் என்று கூறி, *** பரவையின் புலவி நீக்காமையின் அவளையும், தம் மோடு அவளை இயைவிக்காமையின் தம்மையும் அடிமைத் திறத்தில் வைத்து எண்ணவில்லை என்றார். நாங்கள் என்றது பரவையாரையும் உளப்படுத்தி நிற்பதாகும்.
தேவர்கள் உய்ய வேண்டிக் கடலில் தோன்றிய நஞ்சை உண்டீர்; அசுரரது முப்புரங்களும் எரிந்து அவிய, அவற்றுள் இருந்த மூன்று அசுரர்களுக்கு மட்டும் ஊறு வாராது தவிர்த்தருளினீர்; நான்மறைவழி ஒழுகிடும் அந்தணச் சிறுவர் மார்க்கண்டேயருக்காக இயமனை உதைத்து, அவரை அடிமை கொண்டீர்; இவ்வாறாய அளவிலா ஆற்றலும் பேரருட் கருணையும் உடைய உமக்கு, நான் மிகையாய போது மீண்டு வாராது என் செய்வீர்? என்று கூறியவர்,
குறிப்புரை:

எங்களுக்கு ஆகவேண்டிய செயலையே செய்தீர்; இன்று எனது அடிமைத் தன்மையை வேண்டாது விடுப்பின், பாவி யேனைஅன்று வலிய வந்து ஆட்கொண்ட பற்று எற்றிற்கு? எனது வருத்த மிகுதியையும் மன அழிவையும் கண்டும் திருவுள்ளம் பற்றுகிலீர்! மீண்டும் சிறிய இடையையுடைய பரவைபால் சென்று, நீர் இன்று என்னைக் கூட்டி வைத்திடாவிடில் என் உயிர் நீங்கும் என்று கூறிப் பெருமானின் திருவடியில் வீழ்ந்தார். *** ஆகவே செய்தீர் என்பது, குறிப்பு மொழியாக மறுதலைப் பொருள் கொள நின்றது. இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
பெருமான் அதனைக் கண்டு பொறுக்கலாற்றாது, தம்முன் தளர்ந்து வீழ்ந்த நம்பிகளை அருளால் நோக்கி, 'நாம் இன்னமும் ஒருகால் பரவைபால் சென்று பூங்கொடிபோலும் அவளை இப்பொழுதே நீ சேருமாறு கூறுகின்றோம், வெதும்பும் நின் துயரத்தி னின்றும் நீங்குவாய்' என்று உயிர்கட்குற்ற வினைப்பயன்களை எல்லாம் தவறாது கூட்ட வல்ல பெருமானார் கூறியருளினார்.
குறிப்புரை:

திருமுன்பு வீழ்ந்து மயங்கிய நண்பர் சுந்தரர் உய்ந்திட, தமது திருவாக்கு என்னும் இனிய வாய்மொழியாகும் அமுதினைக் கொடுத்திடலும், திருநாவலூர் அரசராய அவரும் தம்மை வருத்திய கலக்கம் நீங்கி, எழுந்து, எம்பிரானே! உம் திருவடி பணியும் தொண்டனேனை அச்சத்தினினின்றும் நீக்கி, இவ்வண்ணமாக அன்றோ பணிகொள்வது எனக் கூறிப் போற்றுதலும், ***
அன்பர்மேல் திருக்கருணை கூர்ந்திட ஆண்டு கொண்ட பெருமானும், மீண்டும் தூதாகச் சென்றிடப் பின் சென்று அவரை வணங்கிய சுந்தரரும், உள்ளம் மயங்கிட மீண்டு வந்தார். முன்னர்ப் போற்றிசெய்து செல்லாத மற்றையவர்களும் முறைமை யாகப் பெருமானை வணங்கி உடன் போதரப் பொன்போல் மிளிரும் சடையையுடைய பெருமானாரும் பரவையாருடைய தூய மாளிகைக் குச் சென்றருளினார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
பிறைபோலும் நெற்றியையுடைய பரவையார், அந்தணர் வடிவுடன் முதன்முறை தூது வந்து சென்றபின்பு, முதிய முறைவழி ஒழுகும் முனிவராய் வந்த பெருமான் அருள் சிறந்த சிவபெருமானேயாகும் என்னும் அதிசயம் பலவும் மனத்தில் தோன்றிட, அந்நினைவால் அஞ்சி, அந்தோ! கெட்டேன். எம்பிரான் முன்னராக எதிர்மொழி மறுத்துப் பேசி என்ன செயல் செய்தேன் என்று வருந்துவாராய், ***
கண்துயில் கொள்ளாராய், கொடுந் துயரம் அடைந்து, ஈங்கு இன்றிரவு தேவர்தம் பெருமான் தம் தோழருக்காகத் தம் திருமேனி தீண்டி வழிபடும் முனிவர் கோலம் கொண்டு வந்தரு ளினார். நான் பாவியேன் அதனை நினைந்து கருத்துட் கொண்டிலா திருந்தேனே! எனக் கூறித் தனது ஒளிபொருந்திய அழகிய திருவாயி லையே நோக்கியவாறு தன் தோழியருடன் பெரும் மனத்துயரால் மயங்கியிருந்தபொழுது. ***
மணம் மிக்க தேன்சொரியும் கொன்றை மாலையைத் திருச்சடையிலுடைய இறைவரும், தாமே வருகின்றார் என்னும் தன்மையை அறியக் கொள்ளும் உண்மை வடிவில் அளவில் லாத பல்பூதகணங்களும் புடைசூழத் தேவர்கள், யோகிகள், முனிவர் கள் முதலிய யாவரும் பின் வரக் குற்றம் எதுவுமில்லாத சீருடைய பரவையாரது மாளிகையில் வந்து புகுந்தருளினார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
பூதகணங்களின் தலைவரும், கணநாதரும், தேவர்களும், சிவபெருமானையன்றி எண்ணாத ஒழுகலாறு உடைய முனிவர்களும், சித்தர்களும், இயக்கர்களும், யாவரும் வந்து நிறைத லால், பேரருளாளராய எம் பெருமானார் சென்று அடைந்திடப் பெற்ற அம்மாளிகை தான், தென்னாட்டில் விளங்கிடும் சீர்வளரும் திருக் கயிலாயத் திருமலை போன்றிருந்தது.
குறிப்புரை:

அனைத்துலகத்துள்ளாரும் வந்து நெருங்கிச் சூழப் பெருமானார் அங்கு எழுந்தருளியபொழுது, அப்பெருமானாரை எதிர்கொண்ட பரவையாரும், உடல் நடுக்கத்துடன் உள்ளத்து மிகுந்து எழும் மகிழ்ச்சி பொங்கிடச் செம்மையாய திருவடிகளைப் பொருந்த மிகு விரைவில் சென்று வீழ்ந்தார்.
குறிப்புரை:

மால், அயனுக்கு அரிய பெருமானும், பரவை யாரைப் பார்த்தருளி, தோழன் என்ற உரிமையால் சுந்தரன் நம்மை ஏவ மீளவும் யாம் உன்பால் வந்தோம்; மணம் கமழும் கூந்தலை யுடைய பரவையே! முன்போல நீ மறுத்திடாது, பிரிவாற்றாது பெரிதும் வருந்தும் சுந்தரன், இங்கு வரப் பெறுதல் வேண்டும் என்றார்.
குறிப்புரை:

நீண்டு அகன்ற கண்களையுடைய பரவையாரும், பெருமானிடத்துப் பெரிதும் அஞ்சி, வருந்திய உள்ளத்தோடு, மலர் போன்ற தமது கைகளை உச்சியிற் குவித்து, அரிய திருவுடைய அந்த ணராகி முன்வந்தவர், அடியேன் செய்த பெருந் தவத்தின் பயனாக இதுபொழுது வந்தருளிய நீரோ? என்று வினவியவாறு, ***
துளிகளாகக் கண்களில் நீர் வாரப் பெருமானாரை தொழுது விண்ணப்பஞ் செய்வார், 'ஒளிவளரும் செவ்விய இத்திருவடிகள் வருந்திட இன்று ஓர் இரவு முழுதும் உமது அன்பருக்காக அங்கும் இங்குமாக உழன்று அடியவருக்கு எளியராகி வருவீராயின், நான் இசையாது வேறு என் செய்ய வல்லேன்? என்றார். ***
'பெண்ணே! நினது பெருமையாம் தகவிற்கேற்ப, நன்மையே மொழிந்தாய்' என்று பாராட்டி, உமையம்மையாரை ஒருகூற்றில் கொண்ட வள்ளலாரான பெருமான், விரைந்து போதலும், அதுகண்டு இளம்பிறை போலும் அழகிய நெற்றியினை உடைய பரவையாரும் எப்பெருமான் பின்சென்று வணங்கி மீள, எம்மையெல்லாம் உய்யக்கொள்ளும் சுந்தரரின் தூதர் மீண்டு செல்ல,
குறிப்புரை:

அடியையும், முடியையும் நாடிக் காண்டற்கு இயலாத பரம்பொருளாம் சிவபெருமான், தாமே தூதாகச் சென்று தமது தொண்டர் சுந்தரர் பெருமானை ஆட்கொண்டிடும் அருட் செய லைக் கண்டு, நீற்றின் ஒளியால் பெருகிய கோலமுடைய கணநாதர் களும், புகழுடைய பூத வீரர்களும் அவர் சென்றருளும் திருவீதியில் ஆடியும், பாடியும் மிக மகிழ்ந்தே நெருங்குகின்றார்களாய்,
குறிப்புரை:

இவ்வாறாக அவர்கள் முன்னும், பின்னும், அயலேயும் வந்து சூழ்தர, மின்னல் போன்ற இடையையுடைய பரவையார் பாலாகத் தம் அன்பர் சுந்தரரைச் சேர்த்திடும் பொருட்டுக் கொண்ட விரைவுடன், திருமுடிமேல் கொண்டு விளங்கும் கங்கை ததும்பிட, ஆதி சைவராய சுந்தரரிடத்து வந்துசேர்ந்தார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
அன்பராய சுந்தரரும், என்னிடத்து உயிரைத் தந்தருளுதற்கெனச் சென்ற பெருமான், இனியும் என் செய்து மீள்வாரோ? என்ற இடர் பெருகப் பொன்போன்ற முப்புரிநூல் அணிந்த இறைவர் சென்றிடப் பொலிவுமிகும் வீதியினை முன்னாக நோக்கிக் கண் இமையாது நின்றார். *** முகிழ்த்தல் - இமைத்தல். மூடுதல்.
அதுபொழுது மன்மதன் ஓய்வின்றிச் சொரியும் மலர் அம்புகட்கு அழிபவராய சுந்தரருக்கு, உயிரைத் தந்தருளும் தம் இறைவர் வந்துசேர, அவர்திருமுன்பு சென்று, மூவுலகங்களும் பணியும் பெருமானது திருவடிகளை உச்சியிற்கொண்டு வணங்கி, என்ன சொல்லுவாரோ என்று தெளியாராகி, ***
'எம்பெருமானே! என் உயிர் காவாது இடர்செய்திடும் பூங்கொடிபோலும் பரவையிடமிருந்து என்ன மாற்றம் கொண்டு வந்தீர்? என்னலும், எம்பெருமானும் அவரை நோக்கித் 'தாழ்ந்த கூந்தலையுடைய பரவையின் சினத்தைத் தணிவித்தோம்; சுந்தரனே! நீ இனிச் சென்று பரவையிடம் சேர்வாய்! என்னலும், குறிப்புரை
பெருமானார் இவ்வண்ணம் அருள் செய்திட, நலம் பெருகும் தமது சிந்தையில் மீதூர்ந்த மகிழ்ச்சி பொங்கத் திகழ்கின்ற சுந்தரர், எம்பெருமானே! உயிர்கட்குப் பாசக் கட்டையும் வீட்டையும் அருள் செய்துவரும் அத்தகவால், இதுவும் செய்தீர்! இனி அடியே னுக்கு என்ன இடருளது? என்று போற்றினார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
என்றுகூறித் திருவடிகளில் வீழும் தோழர்தம் அன்பிற்கு எளிவந்த பெருமானாரும் அவரை நோக்கி, இப்போதே 'நீ அப்பரவைபால் சென்று சேர்க' என்று அருள்புரிந்து உயர்ந்த விடைமேல் வரும் ஆரூர் அமர்ந்த தியாகேசர், தமது பொன்திகழும் வாயிலுடைய கோயிலுள் உலகுய்யப் புகுந்தருளினார். ***
தமது பெருமான் பின்சென்று தாழ்ந்து எழுந்து அருளால் மீள்பவர், எம்பெருமானுடைய வல்லமை இருந்தவாறு என்? என்று தம்மிடத்துக் கொண்ட மகிழ்ச்சியோடும், மணம் கமழும் கூந்தலையுடைய பரவையாரின் செம்பொன்னின் மாளிகை வாயிலை நோக்கி, நம்பிகள் காதலுடன் நயந்து எழுந்தருளும் பொழுது,
குறிப்புரை:

முன்னமேயே துயில்நீங்கி எழுந்து சூழ்ந்த ஏவலர்கள் நெருங்கிவர, மின்னின் ஒளி திகழும் அழகிய பூமழையை வானவர் பொழிந்து வாழ்த்தெடுப்ப, நறுமணமும் இனிமையும் தவழும் இனிய குளிர்ந்த நீர்த்திவலைகளுடன் கூடி மெல்லிதாய் வீசிடும் தென்றற் காற்று எதிர்கொண்டு பணிசெய்யும் சேவகத் தன்மையை முன்புகாட்ட, ***
பூமாலையும், குளிர்ந்த சந்தனக் கலவைச் சாந்தும், கத்தூரிக் குழம்பும், பசிய கற்பூரமும், குங்குமமும் முதலாக உள்ள திருமேனியில் கொள்ளுதற்குரிய, பொருந்திய அணி வகைகளும், அழகிய பட்டாடை வகைகளும், தகுதியுடைய பிறவும் தாங்கிவரும் ஏவலர் முன்சென்றிட,
குறிப்புரை:

இவ்வகையாய சிறப்புக்கள் பொருந்த எம்பிரான் சுந்தரர் வந்து சேர, இதற்கிடையில் சுந்தரரை அடைந்திடும் விருப்பத் துடன் மை பூசப் பெற்ற நீண்ட வரிவிழிகளை உடைய பரவையாரும், தமது மாளிகை முழுவதும் விளங்கிடச் செய்திடும் அழகிய அணிவகைகள் பலவும் செய்து, நெய் வார்த்து வளர்ந்தெரியும் விளக்கு, நறுமணப்புகை, நிறைகுடம் ஆகிய இவைகள் நிரை நிரையாக வைத்து, மேலும், ***
பூக்கள் மலர்ந்த பொன்நிற மாலைகள், நன்கு அழகு பெறக் கட்டிய மணிமாலைகள் ஆகியவற்றைத் தூக்கி, அழகிய பொற்சுண்ணம் எங்கும் வீசி, வாசனை உடைய சந்தனத்தால் மெழுகி, தூய மலர்நிறைந்த அத்திருவீதியில் தோழிப் பெண்கள் வாழ்த்துக்கள் பலவும் மொழியத் தாமும் பேரழகுடன் சிறந்த முத்து மணிவாயில் முன்பாக வந்து, சுந்தரரை எதிர் வரவேற்று நின்றார் பரவையார். *** இவ்வைந்து பாடல்களும் ஒருமுடிபின.
இங்ஙனம் எதிர்கொள்ளும் பரவையார் திருமுன்பு, சுந்தரர் வந்து சேரக் கண்டபோது, தமது உள்ளத்து எழுந்த காதல் வெள்ளம் கரை காணாதவாறு பெருகிட, நாணமும், அச்சமும் மீதூர வணங்கிடலும், பெருமைமிக்க நம்பியாரூரரும் அவர்தம் குளிர்ந்த தளிர் போலும் சிவந்த கைகளைப் பற்றிக்கொண்டு மாளிகையின் உள்ளே புகுந்தார்.
குறிப்புரை:

பரவையாரும் சுந்தரரும் தங்கள் பெருமானார், தம்மிடத்துச் செய்தருளிய திருவருளின் கருணை வெள்ளத் திறத்தினைப் போற்றித் தத்தம் சிந்தையுள் பொருந்திய இன்ப வெள்ளத்துள் அழுந்தி ஒருமையுற்ற அன்பினால் ஒருவரில் ஒருவர் மேவிய நிலையில் உயிர் ஒன்றானார்.
குறிப்புரை:

மறைகளாய பூங்கோயிலுள் பொருந்திப் புற்றிடங் கொண்டு ஆண்டருளிய கங்கைநீர் அணிந்த சடையையுடைய பெரு மானாரை நாளும் பணிந்து போற்றி, இந்நிலவுலகைக் திருவருள் நீழலாம் அழகில் விளங்கிடச் செய்யும் செஞ்சொல் பாமாலைகளைப் பாடிச் சாத்தி, மாலையணிந்த அழகிய முந்நூல் மார்பராய சுந்தரர் திருவாரூரில் மகிழ்ந்திருந்த நாள்களில், *** இதுபோது அருளிய பதிகங்கள் இன்னதெனத் தெரிய வில்லை.
சுந்தரர், தமது நெஞ்சில் கொஞ்சமும் நடுக்கம் ஒன் றும் இல்லாது, எம்பெருமானை ஒரு பெண்ணிடம் தூதாக விட்டார் என்ற, இவ்வுலகில் மிகுமேம்பாட்டுடன் பேசப்படும் வார்த்தையை, ஏயர்கோன் கலிக்காமர் கேட்டு வெம்பினார்; அதிசயம் கொண்டார்; அச்சமுற்றார்; இதனைச் சொல்லலுமானார். *** யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடைய பெரு மானை, யாவர்க்கும் கீழாயதொரு உலகியல் வயப்பட்ட செய்திக்கா கத் தூது விடுக்கின்றோமே என்று அஞ்சியிருக்க வேண்டும்; நடுக் கமும் கொண்டிருக்க வேண்டும்; அவ்வாறன்றித் துணிந்து தூதுவிட் டார் என்பார், 'நடுக்கம் ஒன்று இன்றி' என்றார்.
'யாவர்க்கும் மேலாய தலைவனை ஒரு அடியனாய சுந்தரன் ஏவிய செயல் நன்றாயிருக்கிறது! மிகவும் இது பொருந்தும் என இச்செயலைச் செய்தான் ஒரு தொண்டனாம்! இது என்ன செயல்! பெரும் பாவமே! பொறுக்க முடியாத இப்பிழையினைப் பேயனே னான என் செவியால் கேட்க நேர்ந்தும், நீங்காதிருந்தது என் உயிர்! என்று சொல்லுவார்,
குறிப்புரை:

ஒரு பெண்ணிடத்துச் செல்லும் காதலால் ஒருவன் ஏவ, இவ்வுலகிடை நடந்து, செம்மையாய திருவடித் தாமரைகள் நோ வுறத் தேர் ஓடும் அழகிய வீதியில் செல்வதும் வருவதுமாக ஓர் இரவு முழுவதும் தூதிற்கு உழன்று திரிவாராம் எம் பெருமானார் என மொழிந்து, பின்னும், ***
எம்பெருமான் தமது அடியவரின் துயரம் தாங் கொணாது முன் வந்தார் என்றாலும், அத்துடன் தேவர்களின் அரச னாய இந்திரனும், அயனும், திருமாலும் அறிய ஒண்ணாத எம்பிரான் தூது போதற்கு இசைந்தார் என்றாலும் அவரை அவ்வாறு தூது செல்ல விடுத்திடவுமாமோ? இக்கொடுஞ் செயற்குச் சிறிதும் உள்ளம் நடுக்க முறாதவனை, யான் காணும் நாளும் எந்நாளோ? என எண்ணிய வராய், ***
பெண் ஒருத்தியின் காரணத்தினால் ஆளுடைய பெருமானார் தம்மை இரவிலே தூது போம்படி விடுத்து, அங்கு இருந்தவனை, என் எதிரே வரக் காணின் என்ன விளைவு நேருமோ? என்று பெருகிய சினம் வெடிப்பது போன்ற உள்ளத்தராகி, ***
ஈறில்லாத புகழோடு ஓங்கும் ஏயர்கோன் கலிக்காம நாயனார் மேற்கூறியவாறு எண்ணும் பேற்றைப் பெற்ற சுந்தரர் கேட்டுத் தாம் செய்தது தவறு என்று உடன்பட்டவராய், இப்பிழைக்குத் தீர்வினை வேண்டிக் கொள்வாராகிய அவர், விரிந்த பூங்கொன்றை யுடன் கங்கையும் விளங்கி நிற்கும் சடையராய சிவபெருமானாரிடம் அதனை விண்ணப்பம் செய்து, *** தாம் செய்தது தவறு என்பதை முழுமையாக உணர்ந்தமை யும், அத்தவறு காரணமாக ஏயர்கோன் நாயனார் தம்மைச் சினந்தது ஏற்றுக் கொள்ளுதற்குரியதே என்பதையும் திருவுளம் கொண்டார். ஆதலின், அவர்தம் எண்ணமே தமக்குப் பேறாகும் என்று கருதினார் சுந்தரர். அவர்கொண்ட சினம், தாம் தம் தவற்றினின்றும் நீங்கக் காரண மாயினமையின், அதுவே அவர் பெற்ற பேறுமாயிற்று.
நாள்தோறும் தமது தவற்றை நினைந்து போற்றிட, இறைவர், நீளநினைந்து வழிபட்டுவரும் இருபெருந் தொண்டர்களும் கூடி மகிழவேண்டும் எனும் திருவுளம் கொண்டவராய், ஏயர்கோன் கலிக்காமரிடத்து வாடுறும் சூலை நோயினைச் சேருமாறு அருள் செய்தார். *** இவ்வெட்டுப் பாடல்களும் ஒருமுடிபின.
குற்றம் ஏதும் இல்லாத பெருமையின் செய்கை யுடைய ஏயர்கோன் கலிக்காம நாயனாரிடத்து, இறைவர் அருளிய சூலைநோய், நெருப்பாலாகிய வேல் வயிற்றைக் குடைவது போன்ற வேதனையை மேன்மேல் செய்திட, அதனைப் பொறுக்கலாற்றாது அவர் மிக வருந்திச் சோர்வுற்று வீழ்ந்து, உயிர்கட்கெல்லாம் தலைவர் ஆன சிவபெருமானின் திருவடிகளைப் பற்றியவாறு போற்றுவாராய், *** சூலைநோயின் துன்பத்தை நாவரசர் அருளுமாற்றான் நன்கறியலாம். 'புண்ணிலாம் பெரும் புழையில் கனல் நுழைந்தால்' (கம்பராமா. கையடைப் படலம், 12) என உவமை காட்டிய துயரினும், 'அனல் செய்வேல் குடைவதென்ன' என்ற உவமை காட்டும் துயரம் மிக்கதாகின்றது. அனல்செய்வேல் - அனலில் காய்ச்சிய வேல் என்றே பலரும் விளக்கினர். நெருப்பால் ஆகிய வேல் எனில் மேலும் சிறக்கு மன்றோ? இஃது இல்பொருள் உவமையாம்.
மனத்தாலும் மொழியாலும் பெருமானாருடைய திருந்திய திருவடிகளைப் போற்றி வரும் எம்மையாளும் ஏயர்கோன் கலிக்காமனார் பாடல் இறைவர் தோன்றி, 'உன்னை வருத்திடும் சூலைநோய் சுந்தரன் தீர்த்தார் அன்றி, வேறு எவ்வாற்றானும் நீங்காது' என்று மொழிந்து அருள் செய்திட, அதுகேட்டு, ***
'எம்பெருமானே! எம் தந்தை, அவர் தந்தை, இவர் முதலாய கூட்டமெல்லம் நம் தலைவர் நீரேயென்று வழிவழிச் சார்ந்து வாழும் இந்த உலகில், மிக மேலான வாழ்க்கை உடைய என்னை நின்று அறுத்திடும் இச் சூலைநோயை, வல்வழக்கு இட்டு ஆட்கொள்ளப் பெற்றான் ஒருவனோ வந்து தீர்ப்பான்?' *** எம்பிரான் நீரே என்றவிடத்து வந்த ஏகாரம் தேற்றப் பொருளது. 'உற்றவரும் உறுதுணையும் நீயே' என்புழிப் போல. இனிப் பிரிநிலையுமாம். 'உன்னையல்லால் பிறதெய்வம் உள்கேன்' என்புழிப்போல. வம்பு - புதுமை; மையல் - மானுடமாய் மயங்கும் வழி. ஐயனே தடுத்தாட் கொண்டு அருள் செய்ய வேண்டும் என விண்ணப்பித்துக்கொண்ட விண்ணப்பத்தைத் தானே மறந்தவிடத்தும், பெருமான் தம் கருணையால் ஓலைகொண்டு வந்தருளி உணர்த்தியும் உணராது, அவரைப் பித்தன் என மொழிந்தும், திருக்கரத்திலிருந்த ஆவணத்தைக் கிழித்தெறிந்தும் செய்த துரிசுகளையெல்லாம் இறை வன் பொறுத்தருளி ஆட்கொள்ளப்பெற்ற நிலை சுந்தரருக்குக் கிடைத் தது. இவ்வாறு வலிய வந்து ஆட்கொள்ளப் பெற்றமையாலேயே 'வன்தொண்டன்' எனப் பெயர்பெற்றமையும் கருதுக. தாம் முன்பின் நினையாத நிலையில் இறைவன் குருந்த மரத்தடியில் குருமூர்த்தியாக வந்து ஆட்கொண்டருளினமையின் 'வம்பெனப்பழுத்து' என்றார் வாதவூர் அடிகள்; இறைவன் வம்பென (புதுமையாக) வந்தும், தாம் 'புவனியிற் சேவடி தீண்டினன் காண்க, அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க, சிவன் என யானும் தேறினன் காண்க' என அருளுகின்றார். இத்தகைய குழைந்த மனப் பக்குவத்தால் அவர் 'வம்பெனப்பழுத்து' என்றார். சுந்தரர்பால் அமைந்த சூழ்நிலை வேறாதலின் 'வம்பென ஆண்டு கொண்டான்' என்றார் சேக்கிழார்.
'விடைக்கொடியை உடைய பெருமானே! மற்று அந்தச் சுந்தரன் தீர்ப்பதினும் இச்சூலைநோய் தீராதொழிந்து எனைவருத்துதல் நன்றாம்; நீர் செய்திடும் பெருமைகளை உயர்ந்தவர் யாவரே? உம்பால் உற்ற சுந்தரனுக்கே மேன்மையான உறுதியும் செய் தீர்!' என்னலும், அவ்வளவில் தொகுதியாக நீண்ட சடையையுடைய பெருமானும் அவர் முன்பு நின்று மறைந்தருளினார்.
சுந்தரரிடத்துச் சென்று, இறைவர் அருளிச் செய் வாராய், சுந்தரனே! இன்று நமது ஏவலால் ஏயர்கோன் கலிக்காமனா ரிடத்துப் பொருந்திய சூலை நோயை நீ சென்று தீர்ப்பாயாக என்று அருள் புரிந்திட, மனமும் உடலும் ஒருங்கு மகிழ்ந்து போற்றி வணங் கினார் திருநாவலூரர். ***
இவ்வாறு பெருமான் அருள்புரிந்து மறைந்திடச் சுந்தரரும் தேவர்க்கெல்லாம் தேவனாய பெருமானின் அருளாணை யின் வண்ணம் விரைந்து சென்று ஏயர்கோனார்பால் கொண்ட காத லால் அவருக்கு உற்ற கொடுமை பயந்திடும் சூலைநோயைத் தாம் தீர்த் திட வரும் தன்மையை முன்சென்று அறிவித்திடத் தூதுவரை அனுப்பினார். ***
பெருமானது அருளால் வந்திடும் சூலையும் அவர் பால் கேட்ட துன்புறுசொல்லும் தம்மை வருத்திட, அதன்மேலும், சுந்தரர் சூலைநோயைத் தீர்த்திட வருகின்றார் என்ற வார்த்தையும் கேட்டு தூதனாக எம்பெருமானைச் செலுத்திய சுந்தரன் எனக்குற்ற சூலைநோயைத் தீர்த்திட வரும் துன்பமும் நேர்ந்தால் யான் என் செய்வது? எனக் கருதியவராய், *** கேதம் - துன்பம்; ஈண்டுக் கேட்ட என்பதால் துன்புறுதற் குரிய சொல்லாயிற்று. 'சூலை வன்தொண்டன் தீர்க்கிலன்றி முற்றுற ஒழியாது' என்பதே கேதப்பட வரும் மொழியாம்.
மற்று அந்தச் சுந்தரன் வந்து இச்சூலை நோயைத் தீர்ப்பதன்முன், நான் மாய்ந்திடும் அளவு என்னைப் பற்றி நின்று வருத்தும் இச்சூலை நோயை அஃது அடைந்த இவ் வயிற்றோடும் கிழிப்பேன் என்று கூறி, உடை வாளினால் வயிற்றில் கீறிட, அவரது உயிருடன் சூலை நோயும் தீர்ந்தது. *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
நினைத்தற்கரிய பெருமையும் பண்பும் மிக்க கலிக்காம நாயனார் மனைவியாரும், அதுகண்டு, தமது ஒப்பற்ற கணவரோடு தம் உயிரை நீக்கி, அவருடன் போவது துணிந்து, அதற்கென ஆயத்தம் செய்திடும் வேளை, நம்பிகள் விரைவில் அங்கு வரவிருக்கும் செய்தியை, அவர் முன்னாக வந்த சிலர்கூற, அதுகேட்ட அம்மனைவியாரும் ஒருவரும் இங்கு அழுதல் செய்யாது இருத்தல் வேண்டும் என்று கூறிப் பின்னரும்,
குறிப்புரை:

கணவனார்தம் செயலை மறைத்துச் சுந்தரர் தம் மாளிகைக்கு வர அணையும்பொழுது, அதனை நன்கு அணிசெய்து வரவேற்றிடுவோம் என்று ஏவலரிடம் கூறிட, அவர்களும் அவர் விரும்பியவாறே, அழகு சிறந்த அம்மாளிகை வாயிலில் நல்விளக்கும் நிறை குடமும் வைத்துப் பசிய மகரந்தப் பொடி பரக்கும் மலர்மாலை களைத் தொங்கவிட்டு வணங்கி எதிர்கொண்டிட முன்சென்றார்கள். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
செம்மை சேர்ந்த சிந்தை உடைய அப்பணியாளர் களும் பிறரும் சென்று சுந்தரரை எதிர்கொண்டு போற்றிட, அவரும் புன்முறுவல் செய்து மகிழ்வித்து, உண்மையாம் விருப்பினோடும் சென்று மாளிகை உள்ளே புகுந்து, மலர்பரப்பிய இருக்கையில் முக மலர்ச்சியுடன் இருந்தபொழுது, ***
முறையாகவும் பண்பு மேம்பாட்டுடனும் வழிபா டாற்றிப் போற்றிடப் பொருந்திய நான்மறைகளின் பிழிவாகத் தொடர்ந்து தமிழ்ப் பதிகங்களை அருளிவரும் சுந்தரர் அதனை ஏற்றுக் கொண்டு, ஏயர்கோனாருக்கு உற்ற மிகக் கொடுமையாய சூலை நோயை நீக்கி அவருடன் இருந்திடலன்றி, இங்கு இனித் தனித்திருக்க வருந்துகிறேன் என்றருளினார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
ஏயர்கோனார்தம் மனைவியாரின் ஏவலால், மனையில் பணிபுரிந்திடும் மக்கள், 'மற்று இங்கு ஏதும் குறை ஒன்றும் இல்லை; அவர் உள்ளே பள்ளி கொள்கின்றார், என்றிடலும், நம்பிகள் அவருக்குத் தீங்கு ஒன்றும் இல்லையெனினும், மனம் தெளிவுற வில்லை, ஆதலால் நான் அவரை உடன் காணவேண்டும் என்று அருளிச் செய்தார். ***
சுந்தரர் பெருமான் பின்னரும் அவரைக் காண வேண்டுமென மொழிந்திட, அப்பணியாளர்கள், அவரை அழைத்துச் சென்று காட்டிட, வடிந்திட்ட குருதி சோர்ந்திடத் தொடர்ந்த குடல், அறுபட்டு வெளிப்போந்திட, உயிர்நீங்கிக் கிடக்கும் ஏயர்கோனாரைக் கண்ட அளவில், 'இங்கு நேர்ந்தவாறு நன்று' என்று மொழிந்து, நானும் இவர்முன் செல்வேன் என்பார்,
குறிப்புரை:

தாம் மனம் கொண்ட குறிக்கோளின்றும் பிழையாத வராய், உயிரை நீக்குதற்கென உடைவாளைப் பற்றிட, அவ்வளவில் உயிர்களையெல்லாம் அடிமையாகக் கொண்டருளும் பெருமானார் அருளினால் உயிர்பெற்ற ஏயர்கோனார், சுந்தரரைக் கண்ட அளவில் 'என் நட்புடையவரேயாகவும் நான் கெட்டேன்' என்று விரைந்து எழுந்து, அவர் திருக்கையில் கொண்ட வாளினைப் பிடித்திட, அவரும் ஏயர்கோன் பெருமானாரை வணங்கி அவர்முன்பு வீழ்ந்தார். *** இறைவரிடத்தேயன்றி அவர்தம் அடியவர்களிடத்தும் இத்தகைய கேண்மையும் கிழமையும் கொண்ட சுந்தரரை, யான் அறியாது கெட்டேன் என்பார், கெட்டேன் என்றார். தூது சென்ற இறைவரே, அவரைப் பற்றி அருளவும், தாம் மனங்கொள்ளாதிருந் தமையும், உயிர் துறக்க நினைந்தமையும் மிகக்கொடியது என்ப தையும் 'கெட்டேன்' என்றார். எனவே உணர்வாலும் உயிராலும் கெட நேர்ந்தமை கூறினாராயிற்று. இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
சுந்தரர் பெருமான் வணங்க, ஏயர்கோன் பெருமா னாரும் தாம் பற்றிய வாளினை அகற்றிச் சுந்தரர் பெருமானின் மெல் லென இசைத்திடும் சிலம்பணிந்த திருவடி மலர்களில் பணிந்து வீழ்ந் தார். அன்றைய நாளில் நடந்த இவ்வியத்தகு செயலைக் கண்ட தேவர்கள், இவ்வுலகம் போற்றிடக் கற்பக மலர்களை மழையெனப் பொழிந்தனர். ***
இருவருமெழுந்து ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டு, இடைவிடாத நட்பினால் ஒப்பற்ற மகிழ்ச்சி பொங் கிடத் திருப்புன்கூர்க் கோயிலைச் சேர்ந்து, அங்கு வீற்றிருந்தருளும் பெருமானாரின் திருவடிகளைப் போற்றி நின்றனர். வன்தொண்டராம் சுந்தரர் பெருமான், சிவபெருமானாரது திருவருளினை நினைந்து 'அந்தணாளன்' என எடுத்துப் பாடியருளி, *** 'அந்தணாளன்' எனத்தொடக்கமுடைய திருப்பதிகம் தக்கேசிப் பண்ணில் அமைந்ததாகும் (தி. 7 ப. 55). இப்பதிகத்தில் மார்க் கண்டேயர், இயக்கர், கின்னரர், வருணன், அருச்சுனன், பகீரதன், முப் புரத்தவரில் மூவர், இராவணன் முதலானோருக்கு அருள் புரிந்ததைக் குறிப்பித்தருளுவதோடு, ஏயர்கோன்கலிக்காம நாயனாருக்கு அருள் புரிந்தமையையும் கூறி, அவ்வருட் கருணை தமக்குமாக வேண்டுகின் றார். நான்காவது பாடலில், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், நாளைப் போவார், சிலந்தி, சூதர், சாக்கியர், கண்ணப்பர், கணம்புல்லர் ஆகி யோர் குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும் கொள்கை கண்டு பெருமானை அடைந்ததாக அருளுகின்றார். அக்குறிப்புத் தாம் செய்த குற்றத்தையும் குணமாகக் கொண்டருளும் பெருமானாரின் திறத்தை ஏயர்கோன்கலிக்காம நாயனாரும் திருவுள்ளம் பற்றுமாறு அமைந் துள்ளது.
வணங்கி அருள்பெற்றுச் சிலநாள்கள் ஏயர்கோன் கலிக்காம நாயனாரோடு அங்கிருந்தருளிய பின்பு, திருமுனைப்பாடி நாடுடையை சுந்தரர், திருவாரூர் மீண்டிட, அவருடன் மகிழ்ந்து உடன் வந்த ஏயர்குலத்தாரின் முதல் தலைவராய கலிக்காமருடன் கூடிச் சென்று, முதிர்ந்த பூங்கோயிலில் புற்றின்மீது அமர்ந்தருளும் பெரு மானாரைக் கும்பிட்டு, அங்குச் சுந்தரருடன் நிறைந்த அன்பால் தங்கி யிருந்தார். ***
அங்கு இனிதிருந்து, சுந்தரரது அருளால் கலிக்காமர் மீண்டு சென்று, பொங்கிய செல்வத்தின் மிக்க தம் பதியாய திருப்பெருமங்கலத்திற்குச் சென்று பொற்பினுடன் அங்குத் தங்கி இருக்கும் காலத்தில், தமக்கு ஏற்ற தொண்டினைச் செய்து வந்தவர், பின் சிவந்த கண்களையுடைய ஆனேற்றின்மீது இவர்ந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைச் சேர்ந்தார். ***
நடுவிருள் யாமத்திலே தம் தலைவரைத் தூதுவிட்ட சுந்தரருக்கே நண்பராம் வள்ளலாரான ஏயர்கோன் கலிக்காம நாயனா ருடைய மலரடிகளை வணங்கி, உள்ளத்து உணர்வினால் பெறத்தக்க ஞானம் முதலாய நான்கின் உண்மையைத் தெள்ளிய தீந்தமிழால் கூறுகின்றவராய திருமூல நாயனாரின் பெருமையை இனிச் சொல்லப் புகுகின்றேன். *** சரியை முதலாய மூன்றானும் பெறத்தக்கது ஞானமே யாதலின், அதனை முன்வைத்து ஏனைய மூன்றையும் அதன்பின் அடைவாகக் கூறினார். திருமூலர்தம் வரலாற்று நிறைவிலும், 'நலம்' என இவ்வாறே அடைவு படுத்தியருள்வர். ஆசிரியர் தொல்காப்பியர் 'இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை' (தொல். களவு -1) என அருளியிருப்பதும் ஈண்டு நினைவு கூரலாம். ஏயர்கோன் கலிக்காமநாயனார் புராணம் முற்றிற்று.

This page was last modified on Thu, 09 May 2024 01:33:07 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

naayanmaar history